Tamil new year releases Tamil new year releases
கோலிவுட் செய்திகள்

பட்டணத்தில் பூதம், கேப்டன் பிரபாகரன், சந்திரமுகி, தெறி... தமிழ்ப் புத்தாண்டு படங்கள் ஒரு பார்வை..

‘நான் குதிரை மாதிரி. டக்குன்னு எழுந்திடுவேன்’ என்று முழங்கிய ரஜினி, சந்திரமுகி திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் அதை உண்மையாக்கினார்.

சுரேஷ் கண்ணன்

இந்தியாவில் பண்டிகையையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. பண்டிகைக்கான சடங்கு வீட்டில் முடிந்ததும் அடுத்து செய்யும் முக்கியமான சடங்கு சினிமா தியேட்டர் வாசல்தான். என்னதான் OTT உள்ளிட்டு பல பொழுதுபோக்கு வாய்ப்புகள் இன்று வந்து விட்டாலும் பண்டிகையன்று சினிமா தியேட்டரில் குவியும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருவர் தான் பார்த்த பழைய சினிமாக்களை நினைவுகூரும் போது அவற்றில் பண்டிகையின் வாசனையும் நிச்சயம் கலந்திருக்கும். ‘எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. தீபாவளி அன்னிக்குத்தான் தளபதி படம் ரிலீஸ் ஆச்சு”.. என்று ரஜினி ரசிகர் சொல்ல “அதே நாள்லதான் குணா ரிலீஸ் ஆச்சு. செம படம்” என்று கமல் ரசிகர் குதூகலிப்பார்.

இப்படி பண்டிகை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் அது பெரும்பாலும் தீபாவளி அல்லது பொங்கல் தினங்களாகத்தான் இருக்கும். இன்னொரு முக்கியமான தினமும் உண்டு. அது தமிழ்ப்புத்தாண்டு. சித்திரை ஒன்றாம் தேதியா அல்லது தை மாதம் முதல் தேதியா, எது தமிழ்ப் புத்தாண்டு நாள் என்கிற அரசியல் சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஏப்ரல் 14-ந் தேதியன்று பல தமிழ் சினிமாக்கள் வெளியாகி பண்டிகை நாளின் கொண்டாட்டத்தைக் கூட்டியுள்ளன. அப்படியாக, இந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை சற்றுப் புரட்டி அவற்றில் முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

பண்டிகையும் தமிழ் சினிமாவும்

‘ஏப்ரல் 14, 1958 அன்று ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘சம்பூர்ண இராமாயணம்’ திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்றது..’ என்று ஆரம்பித்தால் 90’s கிட்ஸ்களே இந்தக் கட்டுரையை ஸ்கிப் செய்து விடக்கூடிய அபாயம் இருப்பதால் ஒரு காலக்கட்டத்திலிருந்து நகர்ந்து சற்று மேலே வருவோம்.

வெண்ணிற ஆடை

ஸ்ரீதர் இயக்கத்தில் ‘வெண்ணிற ஆடை’ என்கிற திரைப்படம், ஏப்ரல் 14, 1965-ல் வெளியானது. இதில் பல புதிய நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பிற்காலத்தில் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். நடிகர் ஸ்ரீகாந்த்தும் அப்படியே.இதில் அறிமுகமான, ‘வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா’ என்று இருவருக்கும் படத்தின் தலைப்பு கூடவே நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது. அந்தக் காலத்தில் டிரெண்ட் செட்டராக இருந்த ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம், ஒரேயொரு விவகாரமான காட்சி காரணமாக ‘ஏ’ சான்றிதழுடன் வெளியானது. ஆரம்பத்தில் போதுமான வரவேற்பைப் பெறாவிட்டாலும், வாய்மொழி மூலமாக புகழ் பரவி பிறகு பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது.

எம்.ஜி.ஆர் தனது ஹீரோ சாகசங்களை சற்று கட்டுப்படுத்திக் கொண்டு நடித்த படமான ‘நாடோடி’, ஏப்ரல் 14, 1965 அன்று வெளியானது. ஜனரஞ்சக அம்சங்கள் குறைவு என்பதாலோ என்னவோ, இந்தத் திரைப்படம் சுமாரான வெற்றியை மட்டுமே அடைந்தது. ‘வாத்தியார்’ படத்தின் வழக்கமான விஷயங்கள் இல்லாததை ரசிகர்கள் அதிருப்தியாக உணர்ந்தார்கள் போலிருக்கிறது.

தந்திரக் காட்சிகளால் வெற்றி பெற்ற ‘பட்டினத்தில் பூதம்’

பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களை குறி வைத்து திரைப்படங்களின் ரிலீஸ் தேதி திட்டமிடப்படுவதின் ஆதாரமான நோக்கமே வணிகம்தான். இந்த வரிசையில் ஏப்ரல் 14, 1967 அன்று வெளியான ‘பட்டினத்தில் பூதம்’ தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டது. ஜாவர் சீதாராமனின் திறமையான திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சுவாரசியமான தந்திரக்காட்சிகளைக் கொண்ட நகைச்சுவைப்படமாக இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டரில் கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள்.

பட்டினத்தில் பூதம்

மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்திருந்த பாரதிராஜாவின், நான்காவது திரைப்படம் ஏப்ரல் 14, 1979 அன்று வெளியானது. கடைசி நேர திட்டமிடலில், பாக்யராஜ் இந்தப் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். இளையராஜா உள்ளிட்ட பலரும் ‘இவரா ஹீரோ’ என்று பாக்யாஜை அலட்சியமாக கருதிய நிலையில் படம் வெளியாகி அமோகமாக வெற்றி பெற்றது. ஹீரோயின் ரதியும் இதில்தான் அறிமுகமானார். ‘வான் மேகங்களே’ உள்ளிட்ட இளையராஜாவின் அத்தனை பாடல்களும் ‘ஹிட்’ ஆகி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.

நினைத்தாலே இனிக்கும்

ஹாலிவுட்டில் ‘மியூசிக்கல் திரைப்படங்கள்’ என்கிற வகைமைக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தை இந்தப் பாணியில் உருவானது என்று சொல்லலாம். ஏப்ரல் 14, 1979 அன்று வெளியான இந்தப் படத்தின் முக்கிய USP ஆக எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் அட்டகாசமாக அமைந்த பாடல்கள் இருந்தன. திரையரங்குகளை திருவிழாக் கொண்டாட்டமாக ஆக்கிய இந்தத் திரைப்படம், வலுவான கதையம்சம் இல்லையென்றாலும் கமல் + ரஜினி என்கிற வசீகரமான கூட்டணியைத் தாண்டி பாடல்களுக்காகவே நன்றாக ஓடியது.

டி.ராஜேந்தர், ராமராஜன் - ஸ்டார் நடிகர்களுக்கு சவாலாய் அமைந்தவர்கள்

எண்பதுகளில் டி.ராஜேந்தரின் திரைப்படங்களுக்கென்று ஒரு பிரத்யேகமான வணிக மதிப்பு இருந்தது. பாடல்கள், அடுக்குமொழி வசனம் என்று அவருக்கென்று தனியான ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களுக்கு சவால் விடுவது போல் இவரது திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு வீழ்ச்சிப்புள்ளி உண்டு. ஏப்ரல் 14, 1979 அன்று வெளியான ‘ஒரு தாயின் சபதம்’ என்கிற திரைப்படத்தை ‘என்னய்யா படம் இது?” என்பது போல் ஊடகங்கள் விமர்சித்தன.

ஒரு தாயின் சபதம்

எண்பதுகளை ரீமேக்குகளின் காலக்கட்டம் எனலாம். அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான திரைப்படங்கள் தமிழிற்கு வந்தன. இங்கிருந்து அங்கே சென்றன. இவற்றில் சில வெற்றிகளும் பல தோல்விகளும் கிடைத்தன. மலையாளத்திலிருந்து ரீமேக் ஆகி ஏப்ரல் 14, 1987 அன்று வெளியான ‘மக்கள் என் பக்கம்’ என்கிற திரைப்படம், சத்யராஜின் ‘லொள்ளுத்தனமான’ நடிப்பிற்காகவே ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அவர் முன்னணி நடிகராக நகர்ந்ததற்கு இந்தத் திரைப்படமும் ஒரு முக்கியமான காரணம்

எங்க ஊரு பாட்டுக்காரன்

டி.ராஜேந்தரைப் போலவே ராமராஜனின் திரைப்படங்களும் ஸ்டார் நடிகர்களுக்கு சவால் விடுவது போல் ஓடின. அதற்கு இளையராஜாவின் பாடல்கள் அடித்தளமாக அமைந்தன. ஏப்ரல் 14, 1987-ல் வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்கிற திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியாக மாறியதற்கு பாடல்கள் முக்கியமான காரணம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் முன்பு வெளிவந்த ‘கற்பகம்’ என்கிற திரைப்படத்தை கங்கை அமரன் அப்படியே உருவியிருந்தாலும் ஜனரஞ்சக அம்சங்கள் காரணமாக இந்தப் படம் சூப்பர் ஹிட் அந்தஸ்தை அடைந்தது.

பார்த்திபன் இயக்கிய முதல் திரைப்படமான ‘புதிய பாதை’, ஏப்ரல் 14, 1989ல் வெளியாகி, அட்டகாசமான திரைக்கதை மற்றும் பார்த்திபனின் அசத்தலான நடிப்பு காரணமாக பெரிய வெற்றியைப் பெற்றது. இதே நாளில் கமல் நடிப்பில் ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்துடன் போட்டியிட்டு தாக்குப் பிடித்ததை பார்த்திபனின் அசாரணமான சாதனையாக சொல்லலாம்.

பாலசந்தர் பாராட்டிய புது வசந்தம்

‘பழம் தின்னு கொட்டை போட்ட டைரக்டர்கள் கூட இப்படியொரு கோணத்துல படம் எடுத்ததில்ல’ என்று இயக்குநர் பாலசந்தர் வாயால் பாராட்டு வாங்கிய படமான ‘புது வசந்தம்’, ஏப்ரல் 14, 1990-ல் வெளியானது. ஆண் - பெண் நட்பின் உன்னதத்தை மிகச் சிறப்பான திரைக்கதையுடன் சுவாரசியமாக இயக்கியிருந்தார் விக்ரமன். நாலு ஆண்கள், ஒரு பெண் என்கிற பாணியில் அமைந்த திரைக்கதைகள் இதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் ஏராளமான வெளியாகின.

கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன்நடிகர் விஜயகாந்த்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’, ஏப்ரல் 14, 1991-ல் வெளியானது. இதற்குப் பிறகுதான் ‘கேப்டன்’ என்கிற அடைமொழி அவருடன் ஒட்டிக் கொண்டது. ஆர்.கே.செல்வமணியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாகவும் பரபரப்பாகவும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.

ரஜினிகாந்த்திற்குள் இருந்த நகைச்சுவை நடிப்பை சிறப்பாக வெளியே கொண்டு வந்த திரைப்படங்களுள் ஒன்று ‘வீரா’. ஏப்ரல் 14, 1994-ல் வெளியானது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதே மாதிரி விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படத்திற்கான திரைக்கதையை சுரேஷ் கிருஷ்ணா எழுதி முடித்தார். அதுதான் ‘பாட்சா’. ஆனால் ‘தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்கள் வேண்டாம். நடுவில் ஒரு மென்மையான நகைச்சுவையை படத்தைச் செய்யலாம்.’ என்று ரஜினிகாந்த் ஆலோசனை சொல்ல, இயக்குநருக்கு முதலில் தயக்கம்தான். என்றாலும் ரஜினிகாந்த்தின் ஐடியாதான் வெற்றி பெற்றது.

தமிழின் முதல் பிளாக் காமெடி திரைப்படம்

மௌனராகம், நாயகன் என்று தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் படங்களாக எடுத்துக் கொண்டிருந்த மணிரத்னம், ‘ரோஜா’ திரைப்படத்திற்குப் பிறகு நேஷனல் டிராக்கிற்கு மாறினார். இந்திய அளவில் அவரது படங்கள் வெற்றி பெற்றதால் தீவிரவாதம், மதம் என்று அவரது ஸ்டைல் வெகுவாக மாறியது. நீண்ட காலத்திற்குப் பிறகு அவரது வழக்கமான ஸ்டைலில் உருவான ‘அலைபாயுதே’ தமிழில் வெளியான போது ‘ அப்பாடா! மணிரத்னம் is back’ என்று ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். இது ஏப்ரல் 14, 2000 அன்று வெளியானது.

அலை பாயுதே

கமல் நடிப்பில் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தை இப்போது ஏறத்தாழ எல்லோருமே மறந்து போயிருப்பார்கள். ‘பிளாக் காமெடி’ என்னும் வகைமையை தமிழில் முதன் முதலில் முயற்சித்துப் பார்த்த படம் என்று இதைச் சொல்லலாம். வழக்கம் போல் கமலின் ‘பரிசோதனை ஆர்வத்தை’ மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் படம் ஏப்ரல் 14, 2005ல் வெளிவந்து வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இதே நாளில் வெளியான இன்னொரு படம் அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்றது. அது சந்திரமுகி.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்த சந்திரமுகி

‘அவ்வளவுதான்.. ரஜினிகாந்த்தின் பயணம் இத்தோடு முடிந்தது’ என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட ‘பாபா’ படத்தின் கடுமையான தோல்வி அப்படியொரு நிலைமையை ரஜினிகாந்த்திற்கு ஏற்படுத்தியிருந்தது. ‘நான் குதிரை மாதிரி. டக்குன்னு எழுந்திடுவேன்’ என்று முழங்கிய ரஜினி, சந்திரமுகி திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் அதை உண்மையாக்கினார். இந்தப் படமும் ஏப்ரல் 14, 2005ல்தான் வெளியானது.

சந்திரமுகி

அட்லி இயக்கத்தில் வெளியான ‘தெறி’ ஏப்ரல் 14, 2016-ல் வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்று விஜய்யின் முன்னணி அந்தஸ்தை உறுதி செய்தது. தனுஷ் முதன்முதலாக இயக்கிய ‘பா. பாண்டி’ திரைப்படம், ஏப்ரல் 14, 2017-ல் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதற்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டில் வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றதாக தெரியவில்லை.

தெறி

அது பண்டிகை நாளோ அல்லது விடுமுறை நாளோ, எந்த நாளில் வெளியானாலும் சுவாரசியம், திறமை, புதுமை போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும் திரைப்படங்களுக்குத்தான் மக்கள் வெற்றியளித்திருக்கிறார்கள். பண்டிகை நாட்களோடு ஒன்றிப் பிணைந்திருக்கும் தமிழ் சினிமாவின் போக்கு முன்பு போல் உற்சாகமாக இல்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக மங்கிப் போய் விடவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.