தனுஷ்- நயன் தாரா - விக்னேஷ் சிவன் - எஸ் எஸ் குமரன் web
கோலிவுட் செய்திகள்

“உங்கள் அதிகார திமிருக்கு எந்த கடவுளிடம் செல்வீர்கள்?” - நயன்தாராவுக்கு எதிராக பொங்கிய தயாரிப்பாளர்!

“இன்று தனுஷ் செய்ததற்கு பொங்கும் நீங்கள், முன்னர் எனக்கு உங்கள் கணவர் செய்ததற்கு எந்த கடவுளிடம் செல்ல சொல்வீர்கள்” என பூ மற்றும் களவாணி திரைப்படத்தின் இசையமைப்பாளர் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Rishan Vengai

NAYANTHARA BEYOND THE FAIRLYTALE என்கிற பெயரில் நயன்தாராவின் ஆவணப்படமானது வருகின்ற நவம்பர் 18ம் தேதி அதாவது நயன்தாராவின் பிறந்தநாளன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த ஆவணப்படத்திற்கான ட்ரைலர் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது.

இந்தநிலையில், இந்த ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் மீது காட்டமான விமர்சனம் ஒன்றை நயன்தாரா முன்வைத்திருக்கிறார்.

அதில் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை எனவும், அந்த படத்தில் இருந்து 3 நொடி காட்சியை பயன்படுத்த, தயாரிப்பாளரான தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

உங்களின் கீழ்த்தரமான செயல்..

தனுஷ் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. உங்களின் கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது” என கடுமையான கருத்துகளை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு எதிராக திரும்பிய இசையமைப்பாளர்..

தனுஷ் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கும் நயன்தாராவுக்கு அவரின் பதிவை லைக் போட்டு நடிகைகள் நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், பார்வதி, அஞ்சு
குரியன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பூ மற்றும் களவாணி படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான எஸ்.எஸ் குமரன் “முன்பு எனக்கு நீங்கள் செய்ததுதான், தற்போது உங்களுக்கு தனுஷ் மூலம் திரும்பி வந்துள்ளது” என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எஸ் எஸ் குமரன்

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம்.

மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் திரு. தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் திரு. விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த திரு.விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு திரு.விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலைதானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் திரு.விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.

எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் L160 பொருட்செலவோடும்தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்புலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பின்னர் புதியதலைமுறையிடம் பேசியிருக்கும் எஸ் எஸ் குமரன், தன்னுடைய விசயத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். அதை இங்கே காணலாம்: