டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின்ன் நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம், வாழை. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை, ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகம் செய்கிறது. இப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை கண்ட எம்.பி திருமாவளவன், மாரி செல்வராஜின் வீட்டுக்கே சென்று மனம் நெகிழ அவரை வாழ்த்தியிருக்கிறார். மேலும் வாழை படம் தொடர்பாக தன் எக்ஸ் தளத்தில் நெகிழ்வுடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் எம்.பி திருமாவளவன்.
அதன்படி தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எம்.பி திருமாவளவன்,
“நாடே கொண்டாடும் "வாழை"!
கண்ணீரில் கருக்கொண்ட காவியம்.
கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம்.
உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல... வாழ்க்கையே பெருஞ்சுமை.
புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் மாரியின் வேர்களில் மார்க்சியம்.
‘போதாது கூலி’ என போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு!
வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு!
விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம். பச்சிளம் குழந்தை பருவத்திலும் குடல் முறுக்கும் பசியடக்கி கொடுந்துயர தடைநொறுக்கி வெகுண்டெழுந்து போராடி வெற்றி இலக்கை எட்டித் தொட்ட ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு.
இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும், ஒரு சமூகத்தின் உயிர்வலி!”
என்று கூறி நெகிழ்ந்துள்ளார்