சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 அரசு சட்டக்கல்லூரிகளில் 21 முதுநிலை பாடபிரிவுகளுக்கான 420 இடங்களை நிரப்புதற்கான கலந்தாய்வு பணியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு அவர் ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் என்பது, தியேட்டர்களில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள்தான். இதற்கு தமிழக அரசு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை.
லியோ படத்திற்கும் நாளொன்று 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரைக்கும் திரையிடலாம் என்ற உத்தரவை அரசு தந்திருக்கிறது. இதை எதிர்த்து தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவு வழங்கினால் 6 காட்சிகள் நடத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்றார்.
மேலும், “திமுக ஆட்சியில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்களை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. திரையுலகம் எங்கள் நட்புலகம். சினிமாவிற்கு தடைபோட்டு திரையுலகின் விரோத போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம்” என்று கூறி, திமுக ஆட்சியில் திரைத்துறை முடக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ முன்வைத்த குற்றச்சாட்டையும் அமைச்சர் மறுத்துள்ளார்.