Ponniyin Selvan II Madras Talkies
கோலிவுட் செய்திகள்

4 நாட்களிலேயே கோடிகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன் 2’ - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 4 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

சங்கீதா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’. வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 4 நாட்களில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முதல்நாளில் 64.14 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 45.46 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 65.05 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 39.55 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்திய அளவில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம், தமிழ்நாட்டில் 67.55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

எனினும், 3 நாட்களிலேயே ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம், உலகம் முழுவதும் 202.87 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்தது. அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, இரண்டாம் பாகம் வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது என்றே கூறலாம்.

‘பொன்னியின் செல்வன் 1’ முதல் நாளில் 78.29 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 60.16 கோடி ரூபாயும், 3-ம் நாளில் 64.42 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக ரூ. 202.87 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.