நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகளை திரையிடலாம் என்றும், முதல் காட்சியை காலை 9 மணிக்குதான் திரையிட வேண்டுமென்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி கேட்டும் காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே முதல் காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டுமென செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி இன்று காலை இந்த வழக்கை விசாரிப்பதாக நேற்று கூறினார்.
நீதிமன்ற உத்தரவு என்ன?
அதன்படி இந்த வழக்கு அனிதா சுமந்த் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், “இந்த படம் 2.45 நிமிடம் ஓடும் என்று தெரிந்திருந்தால் கூடுதல் காட்சிக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். இதற்கு முன்பாக ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போது, ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல் லியோ பட ட்ரெய்லர் வெளியீட்டின் போது தியேட்டர் நாசம் செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை காப்பது மற்றும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாக உள்ளது. அதனால் அதிகாலை காட்சிக்கு அனுமதிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து லியோ பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக, “தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது. பூஜை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களும் வருகிறது. அதனடிப்படையில் கூடுதல் காட்சிக்கு அனுமதி கேட்கிறோம்” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ரசிகர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதேபோல் படம் வெளியிடுவதே ரசிகர்களின் விருப்பத்திற்காகதான். அதனால் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை.
காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு அரசை அணுகலாம். அதன் மீது நாளை மதியத்திற்குள் அரசு முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு முழுமையாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.