விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆயுதபூஜையையொட்டி கடந்த அக்டோபர் 19 அன்று, திரையரங்குகளில் வெளியாகியிருந்தது லியோ.
இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத் உட்பட பலரும் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் லியோ குறித்து சமீபத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், ‘படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தானும் நடித்தபோதும்கூட, தன்னால் த்ரிஷாவுடன் நடிக்க முடியவில்லை’ என்பதை மிகவும் மோசமாகவும், தரக்குறைவாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அப்படி அதை பார்த்த த்ரிஷா, மன்சூர் அலிகானின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘இப்படியானவரோடு நான் இணைந்து நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டதோடு, அவரின் பேச்சுக்கு கண்டனத்தையும் பதிவுசெய்திருந்தார் த்ரிஷா.
தன் பதிவில் த்ரிஷா, “நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாகவும் மற்றும் கேவலமான எண்ணத்துடனும் அவர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதகுலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவுக்கு ஆதரவு குரல்கள் எழுந்துவருகின்றனர். இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி என பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, மன்சூர் அலிகானும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.
இதில் லோகேஷ் கனகராஜ் இட்டுள்ள பதிவில், “நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியவர்கள். மன்சூர் அலிகானின் இந்த பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து, கோபமடைந்தேன்.
எந்தவொரு துறையிலுமே பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை கொடுக்கப்படவேண்டும். அது இன்றியமையாதது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்”
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள பதிவில், “பல வகைகளில் இது மோசமான பேச்சு. பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது.
அதையும் மீறி என்ன தைரியத்தில் (!) இதையெல்லாம் எந்தவித யோசனையும் இல்லாமல் பொதுவெளியில் பேசுகிறார்? Shame on you” என்றுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் பதிவில், “ஒரு கேவலமான மனிதர். Shame on you மன்சூர் அலிகான்” என்றுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன் பதிவில், “மன்சூர் அலிகானின் இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். இவ்விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் த்ரிஷாவின் பக்கம் நிற்கிறேன்” என்றுள்ளார்.