மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சென்னை அடையாறில் உள்ள NFDC ஃபிலிம் சென்டரில் நேற்று நடிகர் கமல்ஹாசன் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, “நான் நடித்த படமாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் நடித்த படமாக இருந்தாலும் சரி... அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் யோசனையாக இருக்கும். பொன்னியின் செல்வன் அப்படி அமைந்துள்ளது. தமிழ் சினிமாவிற்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க தனி துணிச்சல் வேண்டும்.
கருத்து வித்தியாசம் அனைத்து படங்களிலும் வந்தாலும் கூட பொன்னியின் செல்வனை மக்கள் ஆதரிக்கிறார்கள்.கமல்ஹாசன்
இப்படியான படத்தை எடுத்திருக்கக்கூடிய மணிரத்னத்திற்கு என் பாராட்டு. அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நட்சத்திர பட்டாளங்களையும் படத்தில் காண்பதில் மகிழ்ச்சி.
தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் துவங்கி விட்டது. படம் முடிந்து அதில் பணியாற்றியவர்கள் என ஆயிரக்கணக்கான பெயர்கள் இடம் பெற்று இருப்பதை திரையில் பார்க்கையில் முழு இந்தியாவும் கண்முன் வந்து நிற்கிறது.
வட மற்றும் தென்னாட்டில் இருந்து பல தொழில்நுட்ப வல்லுநர்கள் படத்திற்காக பாடுபட்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல; போற்றப்பட வேண்டிய வெற்றி இது” என தெரிவித்தார்.