தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களின் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வருகிறார். இவரது கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இருப்பினும்கூட ஒரு தரப்பினர், “இவரின் படங்கள் அனைத்திலும் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு, ரத்தம் தெரிக்கும் காட்சிகள் போன்றவையே அதிகம் இடம்பெறுகிறது” என விமர்சனங்களை வைக்கின்றனர்.
மற்றொரு தரப்பினர், “அதையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் காட்சிப்படுத்துகிறார். படத்தில்கூட கடைசியில் அவை ஒழிக்கப்படுவது போலவே காட்சிகள் இருக்கும்” என்கின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லோகேஷ் தனக்கென ஒரு யுனிவர்ஸை உருவாக்கி, தன் பட்டாளங்களை அதனுள் கொண்டு வந்துவிடுவார். அதாவது, இவரது ஒரு படத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றொரு படத்திலும் எங்காவது வந்து லீட் கொடுக்கும்...! குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பில் லீட் கொடுக்கும்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இதில் நடிகர் ரஜினி தங்கத்தில் ஆன சைங்கிலிகளை கையில் பிடித்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஆகையால், கூலி திரைப்படமும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடையதா என லோகேஷ் ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்தது. குறிப்பாக இதுவும் lcu-க்குள் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதற்கான பதிலை சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜே தெரிவித்துள்ளார். அதில், “ரஜினி சாரின் படத்துக்கு நிகரான மாஸ் எலிமெண்டுகளுடன் கூடிய ‘பக்கா’ கமர்ஷியல் படமாக கூலி இருக்கும். இது lcu-ல வராது.”என்று தெரிவித்துள்ளார்.
கூலி திரைப்படத்தை பொறுத்தவரை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி தன் நண்பர் சத்யராஜூடன் இணைகிறார் என்று கூறப்படுகிறது. இவர்கள் கடைசியாக 1984 ஆம் ஆண்டு ’மிஸ்டர் பாரத்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கூலி திரைப்படத்தில், சத்யராஜ் முக்கிய வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.