Actor vijay pt desk
கோலிவுட் செய்திகள்

சம்பளத்தில் இரட்டை சதம் விளாசல்? - தமிழ் சினிமாவில் புதிய உச்சம் தொடும் விஜய்!

விஜய்யின் 68-வது படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் உலா வருகின்றது.

சங்கீதா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தனது 67-வது படமாக உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, விஜய்யின் 68-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்க, விஜய்யின் 68-வது படமாக உருவாக உள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக நடிகர் விஜய், 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏனெனில், விஜய்யின் 67-வது படமான ‘லியோ’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னதான (ப்ரீ ரிலீஸ் பிசினஸ்) வியாபாரத்தில் (எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவிற்கு) 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும், படம் வெளிவந்த பின்னர், தமிழ் சினிமாவில் அதிக வசூலை ஈட்டும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், விஜய்யின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் இந்த தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த ‘பிகில்’ படம், விஜய்யின் கேரியரிலேயே முதன்முதலில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியப் படம் என்றுக் கூறப்பட்டாலும், அந்தப் படத்தால் அந்நிறுவனம் கடுமையான நிதிநிலை நெருக்கடியை சந்தித்தாகவும், அதனாலேயே விஜய்யை வைத்து இரண்டாம் முறையாக படம் எதுவும் தயாரிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில், விஜய்யை வைத்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அந்நிறுவனம், விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மை எனும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் அதிக வாங்குவதில் புதிய உச்சத்தை தொடுவார் நடிகர் விஜய்.

ஏனெனில், ‘பிகில்’ படத்திற்கு பிறகுதான் விஜய்யின் ஃகிராப் மற்றும் சம்பளம் ஏறிக்கொண்டே சென்றதாகவும் சொல்லப்பட்டு வந்தது. ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டு, கொரோனா காலம் என்பதால், ‘பீஸ்ட்’ படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், அதற்கு அடுத்து வந்த பைலிங்குவல் படமான ‘வாரிசு’ படத்திற்கு 120 முதல் 125 கோடி ரூபாய் வரை சம்பளமாக விஜய் வாங்கியதாகவும் கூறப்பட்டது. விஜய்யின் ‘பிகில்’ படத்தை அடுத்து, ‘வாரிசு‘ படமே 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், கதையை விட தனி ஒருவரின் மார்க்கெட்டுக்காக இவ்வளவு சம்பளமா என்றும் பேசப்படுகிறது. ஒருவருக்கே சம்பளம் பேசப்படும்போது, அதனால் தயாரிப்பு பணிகளில் அதிகளவு செலவிட முடியாமல் போகலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.