கவிஞர் வாலி புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

MGR-ன் கோபம் to மரியான் ஆச்சர்யம் வரை | கவிஞர் வாலி 11வது நினைவு தின பகிர்வு

தன்னிகரில்லா கவிஞர் வாலியின் நினைவு தினமான இன்று அவரை குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் சிலவற்றை காணலாம்.

PT WEB
  • இவரின் இயற்பெயர் - ரங்கராஜன்

  • மாலியைப் போல சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக அவருக்கு ‘வாலி’ எனப் பெயரிட்டார், அவரது பள்ளித் தோழர் பாபு.

  • வாலி முதலில் பாடல் எழுதிய படம் ‘அழகர் மலைக் கள்ளன்’. ‘நிலவும் தாரையும் நீயம்மா - இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா’ என்று அப்பாடல் தொடங்கும்.

  • எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி தனுஷ் காலம் வரை எம்.எஸ்.வி காலம் முதல் அனிருத் காலம் வரை 5 தலைமுறைக்கு பாடல்கள் எழுதிய சிறப்புக்குரியவர் இவர்.

  • திரையுலகில் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர்.

  • சிவாஜியின் ‘அன்புக் கரங்கள்’ திரைப்படத்திற்கு வாலி பாடல் எழுதிய போது, வாலியை நோக்கி எம்ஜிஆர், “உங்கள் அன்புக் கரங்கள் எப்பொழுது ரிலீஸ் ஆகும்?” என்று கேட்டுள்ளார். தனக்கு எழுதாமல் தன் சக நடிகர் மற்றும் போட்டியாளர் சிவாஜிக்கு வாலி பாட்டு எழுதியதால், அப்படி கேட்டிருப்பார் எம்.ஜி.ஆர். அதற்கு வாலி, “உங்கள் அன்புக் கரங்களை விட்டு எப்பொழுதும் எனக்கு விடுதலையே கிடையாது” என்று எம்ஜிஆர் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தினார்.

  • திமுகவின் தீவிர பிரசாரங்களில் ஈட்பட்டிருந்த எம்ஜிஆர் வாலியினிடத்தில் ‘பொட்டு வைத்து கொள்ள வேண்டாம்’ என கூறிய போது, “நான் பொட்டு வைத்து கொள்வேன். தேவைப்பட்டால் என்னை வைத்து பாடல் எழுதிக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். இதனால் அடுத்த படங்களில் வாலி - எம்.ஜி.ஆர் கூட்டணி சேராமல் போயுள்ளது. இதனால், ‘மூன்று எழுத்துகாரர் படங்களில் 2 எழுத்துகாரர் பாடல்கள் முன்புபோல சோபிக்கவில்லை’ என்று பத்திரிகை துணுக்குகள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.

வாலி - எம்.ஜி.ஆர்
  • இதன்பிறகு எம்ஜிஆர்-க்கு பாடல் எழுதிய வாலி, “எங்கே போய்விடும் காலம்? அது என்னையும் வாழவைக்கும். உன் இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழ வைக்கும்” என்று எழுதியுள்ளார். எம்ஜிஆர் உடன் இருந்த மனக்கசப்பை போக்க இதுபோல பாடல்கள் மூலம் அவரோடு உரையாடியுள்ளார் வாலி என சொல்லப்படுவதுண்டு.

  • திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க. கூட்டத்தில், “இனிமேல் என் படத்திற்கு வாலி என்ற கவிஞர்தான் பாடல் எழுதுவார்” என்று அறிவித்தவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.

  • வாலிக்கு ‘காவியக்கவிஞர்’ என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி

  • நான் விசுவநாதனைச் சந்திக்கும் வரை சாப்பிட எனக்குச் சோறு கிடைக்கவில்லை, சந்தித்தபிறகு சாப்பிட எனக்கு நேரம் கிடைக்கவில்லை” - என்று தனக்கும் எம்.எஸ்.வி.க்கும் இருந்த உறவை பற்றி பேசியுள்ளார் வாலி

  • எம்.எஸ்.வி-யோடு இருந்தபோது கவியரசு கண்ணதாசன், வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடலைக் கேட்டுவிட்டு “இன்றைக்குக் கேட்டாலும் நான் எழுதிய இந்தப்பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, “அண்ணே அது நீங்கள் எழுதிய பாடல் அல்ல. வாலி எழுதிய பாடல்” என்றிருக்கிறார் விஸ்வநாதன். அப்பாடல் இருமலர்கள் திரைப்படத்திலிருந்து, “மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்” என்ற பாடல்.

  • இயக்குநர் வெங்கட் பிரபுவின், கோவா திரைப்படத்திற்கு பாடல் எழுதிய வாலி, “வாசப்படி தொட்டு வெற்றிக்கொடி கட்டி ஹாட்ரிக் அடி” என்று எழுதியிருப்பார். இதன் காரணம், வெங்கட் பிரபுவின் முதல் இரண்டு திரைப்படங்களான சென்னை 28, சரோஜா ஆகிய இரண்டு படங்களுமே நல்லதொரு வசூலை பெற்றன. ஆகவே, கோவா படமும் ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருப்பார் வாலி.

  • சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் வரும், மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே என்ற பாடலை வாலி எழுத முக்கிய காரணம், அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருந்த மின்சார பிரச்னையே!

  • ஜூலை 18 ஆம் தேதி வாலி மறைந்தார். அதற்கு அடுத்த நாளான ஜூலை 19 ஆம் தேதி அவர் பாடல் எழுதிய மரியான் திரைப்படம் வெளியாகிறது. அதில் வந்த பாடல் ஒன்றில், “நேற்று அவள் இருந்தாள், உன்னோடு நானும் இருந்தேன்” என இருக்கும். தனது மறைவின் முந்தைய நாளில் கூட அடுத்த நாள் நான் இவ்வுலகை விட்டு பிரிந்துவிடுவேன் என்று எழுதிய அவருக்கு ஈடுதான் ஏது?

இப்படி, நிகழ் காலத்தில் நடக்கும் பல விஷயங்களை தனது பாடல் வரிகளின் மூலம் எந்தவித தடையும் இல்லாமல், மிகவும் எளிமையான முறையில் எழுதிவிடுவார் வாலி. இந்த தன்னிகரில்லா கவிஞரின் மறைவு தினமான இன்று, சிறந்த கவிஞரை பிரிந்து வாடுகிறது தமிழ்த்திரை உலகம்.