நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூலி என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டீசர் ஒன்றை உருவாக்கியிருந்தார். அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் வெளியான அந்த டீசரில் இளையராஜாவின் இசையில் வெளியான ‘டிஸ்கோ டிஸ்கோ’ என்ற பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த டீசர் மற்றும் இசை ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா, கூலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் நிறுவனத்திற்கு தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் இளையராஜா தரப்பில் இளையராஜாவின் வழக்கறிஞர் தியாகராஜன், “கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் ‘தங்க மகன்’ படத்தில் இடம்பெறும் ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலில் இடம்பெறும் குறிப்பிட்ட வரிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான முறையான எந்த அனுமதியும் சம்பந்தப்பட்ட யாரும் என் (இளையராஜா) தரப்பிடம் பெறவில்லை. எனது அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் நானே. ஆனால், எனது உரிமை பெறாமல் என் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது சட்டப்படி குற்றம். குறிப்பாக பதிப்புரிமை சட்டம் 1957 இன் கீழ் குற்றமாகப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இதுபோன்று அனுமதி இல்லாமல் அல்லது அனுமதி பெறாமல் எனது பாடல்களை பயன்படுத்தி வருகிறார்
என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ‘விக்ரம் விக்ரம்’ என்ற பாடலையும், அவர் தயாரிப்பில் வெளியான 'பைட் கிளப்' என்ற படத்தில் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலின் இசையையும் மறு உருவாக்கம் செய்திருந்தனர். இதற்கும் அவர்கள் அனுமதி பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, கூலி படத்தின் டீசரில் இடம் பெறும் இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதியை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என சன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.