அழுத்தமான கதைக்களத்தை எடுத்து படமாக்குவது மட்டுமில்லாமல், அதை ரசிகர்களுக்கும் எளிமையான முறையில் எடுத்துச்சென்று நெருக்கமான சினிமாவாக காட்டுவதில் மேலும்மேலும் தேர்ச்சி பெற்றவராக மாறிவருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் மீண்டுமொரு அழுத்தமான கதைக்களத்தை படமாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் நேர்மறையான விமர்சனங்களை அள்ளிவருகிறார் அவர்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படமான ‘வாழை’ இன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். உடன் கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்ட பலபேரும் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரியின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. இப்படம் இன்று (ஆகஸ்ட் 23-ம் தேதி) தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஸ்பெஷல் ஷோ பிரபலங்களுக்கு நேற்று திரையிடப்பட்டது.
படத்தை பார்த்தபின் இயக்குநர் பாலா பேசமுடியாமல் இயக்குநர் மாரி செல்வராஜை முத்தமிட்டு, கட்டியணைத்து கைகளை இறுகப்பற்றி வாழ்த்தினார். இதேபோல படத்தை பார்த்த பிறகு நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி இருவரும் வாழை படத்தையும், மாரி செல்வராஜையும் புகழ்ந்துள்ளனர்.
வாழை திரைப்படம் குறித்தும், மாரி செல்வராஜ் குறித்தும் எக்ஸ்தள பக்கத்தில் புகழ்ந்திருக்கும் நடிகர் தனுஷ், “சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச்செய்யும் உலகத்திற்குள் நுழைய தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்” என பாராட்டியுள்ளார்.
யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய மற்றொரு நடிகரான கார்த்தி, மாரி செல்வராஜின் வாழை திரைப்படத்தை எக்ஸ் தள பதிவில் புகழ்ந்து பேசியுள்ளார்.
வாழை குறித்து பேசியிருக்கும் கார்த்தி, “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது. அவ்வளவு யதார்த்தமாக உள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்தபின் மாரிசெல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” என்று பதிவுசெய்துள்ளார்.