இயக்குநர் வெற்றிமாறன் முகநூல்
கோலிவுட் செய்திகள்

HBD வெற்றிமாறன் | பாதிக்கப்படும் மக்களுக்காக திரையில் ஒலிக்கும் காத்திரக் குரல்..!

இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுள் முக்கியமான ஒருவர்தான் வெற்றிமாறன். அவருக்கு இன்று பிறந்தநாள்.

Rajakannan K

இன்றைய தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குநராக விமர்சன ரீதியாகவும், கமெர்ஷியல் ரீதியாகவும் சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக கொடுத்து வருபவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் மொத்தம் 6 படங்களே இதுவரை ரிலீஸ் ஆகி இருந்தாலும் அவர் தொட்டிருக்கும் உச்சம் ஆச்சர்யத்திற்குரியது.

வடசென்னை படத்தில் 6 இயக்குநர்களை வைத்து இயக்கி மெய்சிலிருக்கும் வகையில் ஒரு படைப்பை கொடுத்ததில் இருந்தே வெற்றிமாறனின் திறமையை நாம் புரிந்து கொள்ளலாம்.. வெற்றிமாறன் குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக அவரது படைப்புகளில் பேசப்பட்டுள்ள அரசியல் குறித்தும், படைப்பு ஆக்கம் குறித்தும், அவர் தயாரித்த படங்கள் குறித்தும் நிறைய பேசலாம். அவற்றில் சிலவற்றை, இங்கே விரிவாக பார்க்கலாம்..

படைப்புகளும் கொடுக்கும் அர்ப்பணிப்பும் காலமும்..

மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகே 2007 ஆம் ஆண்டு தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன் படம் ரிலீஸ் ஆகிறது. படம் மிகப்பெரிய வெற்றி. மற்ற இயக்குநர்களாக இருந்தால் உடனடியாக அடுத்த ஒரு வருடத்திற்குள் மற்றொரு வெற்றிப்படத்தை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், வெற்றிமாறன் மதுரையை மையமாக கொண்ட சேவல் சண்டை கதையை கையில் எடுத்து அதன் உண்மைத் தன்மைக்காக மதுரையிலேயே தங்கி 2 வருடங்கள் ஆய்வு செய்கிறார். மதுரை மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கிறார். ‘சென்னையிலேயே வளர்ந்த ஒருவரா மதுரை மண்ணின் வாசத்தோடு இப்படியொரு படத்தை கொடுத்தார்’ என்று பலரும் வியக்கும் வகையில் ஆடுகளம் படம் இருக்கும்.

மதுரையில் குறுக்குவெட்டு தோற்றத்தையும், மனிதர்களின் அக உணர்வுகளையும் கிட்டதட்ட ஆடுகளம் படத்தில் கொண்டு வந்திருப்பார். தெருக்களின் பெயர்கள் முதற்கொண்டு அவர் குறிப்பிடும் விதம் அதை சொல்லும். குறிப்பிட்டு, ‘என் வெண்ணிலவே’ பாடலை கவனித்தால் மதுரையை எந்த அளவிற்கு அவர் உள்வாங்கி இருக்கிறார் என்பது தெரியும். ‘நீ ஏன் எரித்தாய் மீனாட்சி? உன் நிழலில் வாரும் மதுரையடி’ என்ற வரிகளைவிடவா மதுரையை சொல்லிவிட முடியும்?

7 தேசிய விருதுகளை ஆடுகளம் திரைப்படம் அள்ளியது. ஆனாலும் தனது அடுத்த படமான விசாரணையை 2016 ஆம் ஆண்டுதான் திரைக்கு கொண்டு வந்தார். இடையில் தயாரிப்பு பணிகள், வட சென்னை படத்திற்கான வேலைகள் எல்லாம் சென்றது. தனுஷ் என்ற பெரிய ஹீரோவை வைத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பின்னர் தினேஷை வைத்து விசாரணை படத்தை கொடுப்பதற்கு எல்லாம் ஒரு மிகப்பெரிய தைரியமும் படைப்பு மீதான உறுதியும் வேண்டும்.

மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகுதான் வடசென்னை படம் ரிலீஸ் ஆனது. வடசென்னை படம் உருவான விதம் குறித்தும் அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் சந்தித்த மனிதர்கள் குறித்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே செல்லாம்.

வட சென்னையின் உண்மையான உலகை தெரிந்து கொள்வதற்கு அப்படியொரு சிரத்தையை எடுத்துள்ளார் வெற்றிமாறன். கிட்டதட்ட ஹாரி பார்ட்டர் போல் சீரியல் படங்கள் எடுக்கும் அளவிற்கு கதைகளை தயார் செய்து வைத்துள்ளார். பொல்லாதவன் படமே அதற்கான முயற்சியின் ஒரு துண்டு கதைதான். அவர் எந்த அளவில் ஸ்க்ரிப்டிற்கான மெனக்கெட்டிருக்கிறார் என்று, வடசென்னையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் படைத்திருக்கும் விதமே சொல்லும்.

மிகக்குறுகிய காலத்தில் வெற்றிமாறனால் எடுக்கப்பட்ட படம் என்றால் அது அசுரன்தான். ஆனாலும், கரிசல் காட்டின் மணம் மாறாமல் அசுரனை படைத்து இருப்பார். பேச்சு வழக்கு முதல் காடுகள், வயல்களை போன்றவற்றை நேர்த்தியாக கொண்டு வந்திருப்பார். விடுதலை படத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

கிட்டதட்ட 4 வருடங்களுக்கு பிறகு வந்த படம். சூரியை வைத்து சிறிய பட்ஜெட்டில் திட்டமிட்டு ஆனால், மிகப்பெரிய விரிவாக எடுக்கப்பட்ட படம், விடுதலை. ஒரு இடத்தை தேர்வு செய்து விட்டால் அதற்கே உரிய நியாங்களை சேர்ப்பதற்கு வெற்றிமாறன் காட்டும் சிரத்தை அபாரமானது. யாதார்த்தத்திற்கு நெருக்கமாக படைப்பை கொண்டுவர அவ்வளவு முயற்சிகள் மேற்கொள்வார்.

நாவல், சிறுகதைகளும் வெற்றியின் படைப்புகளும்..

அடிப்படையில் வெற்றிமாறன் லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவரது தாய் ஒரு நாவல் ஆசிரியர். இப்படி இலக்கிய பின்னணி கொண்டவரிடம் இருந்து இலக்கியங்களை தழுவி படங்கள் வருவது ஆச்சர்யத்திற்கு உரியது அல்லதான். மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலை தழுவி விசாரணை, பூமணி எழுதிய வெக்கை குறுநாவலை தழுவி அசுரன், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி விடுதலை ஆகிய படங்களை எடுத்திருந்தார்.

இதற்கு போவதற்குள் ஆடுகளம் படமும் ரூட்ஸ் நாவலின் சில பகுதிகளை ஒத்திருக்கும் என்பது பலரும் அரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், தமிழில் ஏழு தலைமுறை என்ற பெயரில் வந்தது அந்த நாவல். ஆப்பிரிக்காவில் கடத்தி செல்லப்பட்டு அமெரிக்காவில் பல பகுதிகளில் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்தவர்கள் பற்றிய கதைதான் ஏழு தலைமுறைகள்.

ஏழு தலைமுறைகள்

அமெரிக்காவில் நடக்கும் கதையில்தான் சேவல் சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். சினிமாவை இருக்கை நுனியில் பார்க்கும் அளவிற்குதான் அந்த நாவலில் சேவல் சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த நாவலை படித்தவர்கள் ஆடுகளம் படத்தை பார்த்தால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், மதுரை மண்ணில் இருந்து அதன் தன்மைக்கு ஏற்ப கதை எடுத்ததுதான் வெற்றிமாறனின் திறமை.

விசாரணை நாவலை பொறுத்தவரை நாவலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு கதை அமைத்திருப்பார். ஆந்திராவில் வேலைக்காக செல்லும் சாமானிய தொழிலாளிகள், காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பித்து இருப்பார்.

அசுரன் படத்தைப் பொறுத்தவரை வெக்கை நாவலின் கதை சூழல் மட்டுமே இருக்கும். கிட்டதட்ட 20 சதவீதம்தான் நாவலோடு ஒத்துப் போகும். மற்றபடி கீழ்வெண்மனி உள்ளிட்ட பல சம்பவங்களை சரடாக கோர்த்து இருப்பார். பஞ்சமி நிலம் குறித்து எல்லாம் பேசியிருப்பார்.

வெக்கை - அசுரன்

வெக்கையின் பிளாட் மட்டும் அப்படியே அசுரனில் இருக்கும். பேசப்பட்டிருக்கும் விஷயமும் முற்றிலும் வேறாக இருக்கும். வெக்கையில் சாதிய அடிப்படையிலான விஷயங்களே கிட்டதட்ட இருக்காது. ஆனால், அசுரன் முழுக்க சாதிய கொடுமைகளை தோலுரித்து காட்டுவதோடு திருப்பி அடிக்கும் வகையில் இருக்கும். வெக்கை நாவலின் பெரும்பகுதி சிதம்பரம் கதாபாத்திரத்தின் அட்வென்சர் போலதான் இருக்கும்... ஆனால், அசுரன் வேறு தளத்தில் உருவாகி இருக்கும்.

விடுதலை முதல் பாகமும் துணைவன் கதையும் சுத்தமாக ஒத்துப் போகாது. அதாவது கதை இன்னும் தொடங்கவே இல்லை. குமரேசனுக்கும் வாத்தியாருக்கும் இடையிலான ஒரு சிறிய பயணம்தான் துணைவன் கதை. ஆனால், விடுதலையில் வரலாற்று ரீதியாக தமிழரசன் உள்ளிட்டோரை இணைத்து பெரிய கதைக்களத்தை உருவாக்கி அரியலூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் இணைத்துள்ளார். கிட்டதட்ட ஒரு காலகட்டத்தின் பதிவுதான் விடுதலை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறலால் உழைக்கின்ற சாமானிய மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், அதனால் எப்படி போராளிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் விடுதலை.

துணைவன் விடுதலை

தெளிவான அரசியல் நிலைப்பாடு!

வெற்றிமாறன் படங்களில் அவரது அரசியல் நிலைப்பாடு தெளிவாக இருக்கும். நடுநிலை என்பதை எதிர்ப்பவர். பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று அவர்களின் குரலாக கலைப் படைப்பு பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். விசாரணை படத்தில் இருந்து அதனை தெளிவாக கையாண்டு வருகிறார்.

வடசென்னையில் உழைக்கின்ற மீனவ மக்கள் எப்படி தங்களது சொந்த நிலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறார்கள் என்பதுதான் கதை. வடசென்னை முதல் பாகத்தில் அதற்கான முயற்சிகளையும் அது முறியடிக்கப்படும் விதத்தையும் காட்டி இருப்பார். உள்ளூர் அரசியல்வாதிகளையும், ரவுடிகளையும் கையில் வைத்துக் கொண்டு சில வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை அப்புறப்படுத்துவதை தெளிவாக காட்சிப்படுத்தி இருப்பார் வெற்றிமாறன். ஒரே மாதிரியாக ராஜன் மற்றும் அன்பு கதாபாத்திரங்கள் சந்திக்கும் மக்கள் கருத்துக் கேட்பு காட்சியே அவரது அரசியல் பேசும் இடங்கள். தங்களுக்கு இருக்கும் திறமைகளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் வாழ்க்கை திசைமாறிவிடக் கூடாது என்பதையும் அழுத்தமாக சொல்லி இருப்பார்.

அசுரனில் சிறிய நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகள், பணம் படைத்த மேட்டுக்குடி வர்க்கத்தினரால் எப்படி நசுக்கப்படுகிறார்கள். அவர்களது நிலம் எப்படி பிடுங்கப்படுகிறது, சாதிய கொடுமைகள் எந்த அளவிற்கு கட்டவிழ்த்தப்படுகிறது என்பதையெல்லாம் காத்திரமாக பேசியிருப்பார்.

பார்க்கும் பார்வையாளர்களையும் சாதிக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதுதான் அசுரன் படைப்பின் வெற்றி. விடுதலையிலும் அவரது அரசியல் நிலைப்பாடு தெளிவாக இருக்கும். கிட்டதட்ட தமிழ் தேசிய அரசியலை விடுதலையில் பேச முற்பட்டிருப்பார்.

பாவக்கதைகள் ஆந்திராலஜி கதையிலும் ஆணவப் படுகொலை குறித்து மிக காட்டமான படைப்பை கொடுத்து இருப்பார். சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து குறுகிய நேரத்தில் சாதியத்தின் தீவிரத்தன்மையை நம் மனதிற்குள் கடத்தி இருப்பார்.

ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சார்பாக தன்னுடைய படைப்பை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் தனிச் சிறப்பு இதுதான்!

வெற்றிமாறனைப் பொறுத்தவரை திரைமொழியிலும் கதைக் கருவிலும் சிறப்பாக திகழ்வதே அவரது தனித்தன்மை. சமூக அக்கறை கொண்ட கதைகளை கையில் எடுத்து அதை மக்களுக்கு நெருக்கமான திரைமொழியில் கொண்டு சேர்ப்பதாலே தோல்வியே சந்திக்காமல் வெற்றி’மாறனாக அவர் திகழ்கிறார். அவரது ஒவ்வொரு கதை உலகமும் தனித்தன்மை வாய்ந்தவை. பேசப்படும் கருவும் மக்களுக்கு தேவையாக கருத்துக்களையே கொண்டவை. இப்படி இரண்டிலும் வெற்றி பெற்ற இயக்குநர்கள் மிக சொற்பமானவர்களே. அப்படியான இயக்குநராக, பாலுமகேந்திரா பட்டறையில் உருவான அரிய படைப்பாளிதான்...

வெற்றி’மாறன்!