மஞ்சள் வீரன், செல்அம் pt web
கோலிவுட் செய்திகள்

மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து டிடிஎஃப் நீக்கம்... வாசனுக்கே தெரியாமல் அறிவித்த இயக்குநர்!

"`மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளார். ஹீரோ என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை" என இயக்குநர் செல்அம் அறிவிப்பு

Angeshwar G

சர்ச்சைகள், சிக்கல்கள், காவல் புகார்கள், ரசிகர் பட்டாளங்கள்... என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்..? டிடிஎஃப் வாசன் என்போர் கைதூக்கவும்.

டிடிஎஃப் வாசனை அவரது ரசிகர்களையும் தாண்டி ஒருவர் கொண்டாடினார் என்றால், அது மஞ்சள் வீரன் பட இயக்குநர் செல்அம்தான். ஆனால் அந்த இயக்குநரே, தன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

TTF Vasan

பைக் ரைட், அதனால் ஏற்படும் சிக்கல்கள், சிக்கல்களுக்கு விளக்கமளிக்கும் வீடியோ என 2கே கிட்ஸ் தாண்டி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். சிக்கல்களும் சர்ச்சைகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க, செல்அம் என்பவரது ‘மஞ்சள் வீரன்’ எனும் திரைப்படத்தில் வாசன் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இதைக்கேட்டு 2கே கிட்ஸ்கள் ஹார்டீன்களை தெறிக்கவிட்டனர்.

படத்திற்கான அப்டேட்களைத் தாண்டி, வாசன் குறித்து இயக்குநர் கொடுத்த ஹைப் ‘அப்பப்பா’ என சொல்லவைத்தது. ‘நீ போடுற பிட்டு நங்கூரம் போல நச்சுன்னு இருக்கனும்’ என வடிவேலு சச்சின் திரைப்படத்தில் சொல்லுவார். அதேபோல், மஞ்சள் வீரன் திரைக்கதை வாசனுக்காகவே எழுதியது என இயக்குநர் சொல்ல நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? யாரப்பா அந்த இயக்குநர் செல்அம் என தேடிப்பார்த்தனர். அவர் இயக்கிய முதல் திரைப்படம் கண்ணில்பட்டது. திருவிக பூங்கா. படத்தில் இடம்பெற்ற ‘நாளை எல்லாம் நலம்தானே’ பாடல் இதன்பின்னரே செம்ம வைரலானது..(!)

டிடிஎஃப் வாசன், இயக்குநர் செல்அம் இணைந்தற்கு ஒரு பக்கம் ட்ரால்கள் என்றால், மறுபக்கம் வாசனை ஹீரோவாக பார்ப்பதில் அவரது ரசிகர்களான 2கே கிட்ஸ்களுக்கு இருந்த ஆவல் சொல்லி மாளாது. இந்நிலையில்தான், அதிர்ச்சிகரமான செய்தியாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் செல்அம். இதில் என்ன ட்விஸ்ட் என்றால் இதை வாசனிடமே அவர் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

இதுதொடர்பாக செல்அம் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், “தயாரிப்பு நிறுவனம் என்னுடையது. எனவே ‘மஞ்சள் வீரன்’ பெயரை என்னுடைய நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்துள்ளேன். எனவே பெயருக்கு பிரச்னை வராது. படத்தில் இருந்து நானும் வாசனும் பிரிந்துள்ளோம். இதுபற்றி இன்னும் அவரிடம் தகவல் தெரிவிக்கவில்லை.

மற்றபடி தம்பி என்கிற உறவு அவருடன் எனக்கு தொடரும். இது ஒரு வாழ்வியல் படம். என்கூடவே என் ஹீரோ பயணிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் இந்த முடிவுக்கு காரணம். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்.