“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை இயக்கியுள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த மனோபாலாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று (03.05.2023) திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று இரவு பிரபல நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, சங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் நட்டி, அப்புக்குட்டி, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள், சின்னத்திரை கலைஞர்கள், நண்பர்கள் உறவினர்கள் என பலரும் நேற்று மதியத்தில் இருந்து மனோபாலாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவருடைய பூத உடலுக்கு அவரது இல்லத்தில் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. பின்பு அவரது உடல் அமரர் ஊர்தி வாகனம் மூலம் வீட்டில் இருந்து காலை 11 மணிக்கு மேல் எடுத்து செல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் மனோபாலாவுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். ஏராளமான காவலர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். மனோபாலாவின் உடலுக்கு அருகேயே கண்ணீர் மல்க அழுத படியே மனைவி மற்றும் மகன் மயானத்துக்கு வந்தனர்.
வளசரவாக்கம் மயானத்திலும் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு உள்ளிட்ட பலர் வந்தனர். அங்கும் இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர்.
மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவின் உடலை சுமந்து சென்ற அமரர் ஊர்தியின் ஓட்டுநரும், உரிமையாளருமான சாந்தகுமார் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தொழிலை நான் 44 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொருவரின் இறுதி ஊர்வலத்தையும் எங்களது குடும்ப உறுப்பினர்களின் ஊர்வலம் போல் எடுத்து செல்கிறோம். சிவாஜி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களின் இறுதி ஊர்வலத்தை நடத்தி இருக்கிறேன். ஒருவரை சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி அனைவரையும் சிரிக்க வைத்தவர் மனோபாலா” என்றார்.