இயக்குனர் மீது போலீசில் புகார் pt desk
கோலிவுட் செய்திகள்

வேட்டையன் | கோவில்பட்டி அரசுப்பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு - இயக்குநர் மீது போலீசில் புகார்!

வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கோவில்பட்டி அரசுப் பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிசங்கர்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியானது. அந்த படத்தின் தொடக்கத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில், கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

அரசுப் பள்ளி தொடர்பான வேட்டையன் திரைப்பட காட்சி

அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவில்பட்டி காந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் அந்த பள்ளியை சித்தரிப்பதாக இருப்பதாக கூறி, ‘அதனை நீக்க வேண்டும், திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது. 2009 - 2010 ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப் பள்ளியாக, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் அந்த பள்ளியை சித்தரிக்கு வகையில் தவறாக காட்சி இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Compliant copy

மேலும், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கவில்லை என்றால் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுக்கையிட போவதாகவும் தெரிவித்துள்ளனர்