Singer Velmurugan pt desk
கோலிவுட் செய்திகள்

சென்னை: மெட்ரோ திட்ட உதவி மேலாளரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது புகார்

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

சென்னை வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வழிப்பாதையாக மாற்றியுள்ளனர்.

Virugambakkam police station

இந்நிலையில், வளசரவாக்கம் - ஆற்காடு சாலை வழியாக நேற்று மாலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தனது காரில் சென்றுள்ளார். இதையடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணியாளர்களிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை, வேல்முருகன் அவதூறான வார்த்தையால் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த வடிவேல், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதையடுத்து அதிகாரி வடிவேல், விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேல்முருகன்

ஏற்கனவே இதே போன்று பாடகர் வேல்முருகன், கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.