பொதுவாக துணைப் பாத்திரங்கள் என்றாலே நாம் குணச்சித்திர நடிகர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நகைச்சுவை நடிகர்களாக பிரகாசிக்கிறவர்கள், குணச்சித்திர பாத்திரங்களை ஏற்கும் போது அதில் கூடுதல் சுவை ஏற்படுகிறது. அதற்கான சிறந்த உதாரணங்களை இந்தக் கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
பாலசந்தரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு சிறிய பாத்திரங்களில் கூட தன்னுடைய தனித்தன்மையான நகைச்சுவையைக் காட்டி கவனிக்க வைத்தார்.
பிறகு ஹீரோவுடன் பயணிக்கும் ‘நாலு நண்பர்களில்’ ஒருவராக நிறையப் படங்களில் வலம் வந்தார். சிந்தனையும் சிரிப்பும் கலந்த தனித்துவமான நகைச்சுவை காரணமாக பிரபல காமெடி நடிகராக மாறினார். இவருடைய காமெடி டிராக்குகள் பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. கமல் ஒருவரைத் தவிர பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.
பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. முன்பு போல் ‘ஹீரோவின்’ நண்பராக நடிக்க முடியாது. வயது வித்தியாசம் ஒரு தடையாக இருக்கும். ஆனால் இந்தத் தடையையும் தாண்டி ஹீரோவிற்கு வழிகாட்டும் மதிப்பிற்குரிய நபராக இருந்து தனது நகைச்சுவையைத் தொடர்ந்தார்.
என்றாலும் அந்த துள்ளலின் இளமை சற்று கூட குறையவில்லை.
இப்படியாக இளம்தலைமுறை நடிகர்களுடன் விவேக் நடித்த வரிசையில் தனுஷுடனான கூட்டணி பல படங்களில் சுவாரசியமாக அமைந்தது. குறிப்பாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் விவேக் ஏற்ற ‘அழகுசுந்தரம்’ என்கிற பாத்திரம் குறிப்பிடத்தகுந்தது.
ஏறத்தாழ பாதி திரைப்படம் முடிந்த பின்னர்தான் இவரது கேரக்டர் என்ட்ரி ஆகும். ஹீரோவின் தோல்வி, அம்மாவின் மரணம் போன்ற துயரமான சென்டிமென்ட் காட்சிகள் பார்வையாளரிடம் ஒருவித சோர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் விவேக்கின் என்ட்ரி படத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும்.
இதே சமயத்தில் ஹீரோவின் வளர்ச்சியும் இணையும் நிகழும் போது பார்வையாளனும் அந்த மகிழ்ச்சியில் பங்கு பெறுவது போல் விவேக்கின் நகைச்சுவை அமைந்திருக்கும். சீனியர் நடிகராக இருந்தாலும் தன்னை தாழ்த்திக் கொண்டு பல இடங்களில் சிரிக்க வைத்திருப்பார்.
இந்தப் படத்தில் விவேக் பேசிய சில வசனங்கள், காட்டிய முகபாவங்கள் போன்றவை மீம்ஸ் உலகிற்கு பிரபலமான தீனியாக அமைந்தது.
ஒரு கட்டுமான நிறுவனத்தில் பத்து வருடங்கள் பணிபுரியும் சீனியராக இருப்பவர் அழகுசுந்தரம். ஒரு பிராஜக்ட் விஷயமாக பாஸ் இவரை அழைக்கும் போது அந்தப் பணி தனக்குத்தான் ஒதுக்கப்படும் என்கிற பெருமிதத்துடன் அறைக்குள் செல்வார்.
“நீங்க போய் ரகுவரனைக் கூப்பிடுங்க” என்று முதலாளி சொல்ல, ‘அவனை ஏன் வரச் சொல்றாரு?’ என்று ஜெர்க் ஆகும் விவேக், பிறகு தனக்குத் தானே சுதாரித்துக் கொண்டு ‘ஓகே.. ஓகே.. நமக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்படும்ல?” என்று சமாதானப்படுத்திக் கொண்டு பெருமையாக வெளியே செல்வார்.
அந்தப் பெருமிதம் சற்றும் குறையாமல் மனைவி தங்கபுஷ்பத்தை மொபைலில் அழைத்து ‘பாயசம் செஞ்சு வை. சாயந்திரம் ஒரு ஹாப்பி நியூஸ் சொல்றேன்” என்று சொல்லி விட்டு தனுஷை அழைப்பார். “பெரிய பிராஜக்ட்டுன்னா.. இந்த ஆபிஸ்லயே சீனியர் நீங்கதான். அப்ப உங்களுக்குத்தான் இருக்கும்” என்று தனுஷ் சொல்ல அதற்கு அகம் மகிழ்ந்து போவார் விவேக்.
“அப்ப என்னை எதுக்கு கூப்பிடறாங்க?” என்று குழம்பும் தனுஷ், சட்டென்று பிரகாசமாகி “சார். உங்களுக்கு அசிஸ்டெண்ட் வேலையா இருக்கும். பாஸ் கேக்கும் போது என் பேரைச் சொல்லுங்க சார். வேணாம்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்று வேண்டுகோள் வைக்க, முகம் நிறைய சிரிப்புடன் “என்ன நடந்தாலும் நீதான் அசிஸ்டெண்ட்” என்று சொல்லி விட்டு கெத்தாக உள்ளே செல்வார், விவேக்.
நாம் எதிர்பார்த்தபடியே முதலாளியின் அறையில் விஷயங்கள் தலைகீழாக நடக்கும். “இந்தப் ஃபைல்ல எல்லா விவரமும் இருக்கு” என்று சொல்கிற முதலாளி அதை தனுஷிடம் நீட்ட, தனுஷிற்கு குழப்பம் வந்து “சார்.. நான் இந்த ஆபிஸ்ல சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுது” என்று தயக்கத்துடன் சொல்வார்...
“ஆறு மாசத்துல ஒருத்தரைப் பத்தி தெரியாதா?” என்று முதலாளி சொன்னவுடன் “நான் பத்து வருஷமா இங்க வேலை பார்க்கறேன்” என்று மைண்ட் வாய்ஸிற்குள் புலம்புவார் விவேக்.
இதற்குப் பிறகு நிகழ்வதுதான் இந்தக் காட்சியின் கூடுதல் காமெடி. இருவரும் வெளியே வந்தவுடன் “மிஸ்டர் ரகுவரன். இந்த ப்ராஜக்ட் எனக்கு கிடைக்கும்ன்னுதானே நீங்களும் நெனச்சீங்க?” என்று கேட்டு விவேக் தெளிவுப்படுத்திக் கொள்வார். ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்கிற மாதிரியான நுட்பமான காமெடி இது.
தனக்கு கீழே வேலை செய்கிற நபர், தன்னை உயர்வாக நினைத்துக் கொள்வதிலேயே விவேக்கிற்கு ஒரு மாதிரியான திருப்தி வந்து விடும். “மாமா.. பாயசத்துல முந்திரிப்பருப்பு போடட்டுமா..” என்று விவேக்கின் மனைவி தங்கபுஷ்பம் போனில் அழைத்து கேட்க “ஒரு பருப்பும் வேண்டாம்” என்று அவர் சொல்லுமிடத்தில் சிரிப்பை அடக்க முடியாது.
முகத்தில் எவ்வித எக்ஸ்பிரஷனும் தராமலேயே நகைச்சுவையை உருவாக்கி விடுவார் விவேக்!
இதன் பிறகு நடப்பதுதான் இந்த சீனின் முத்தாய்ப்பான காட்சி. கடந்து செல்லும் செல் முருகனை அழைத்து “இந்தப் போனை நீயே வெச்சுக்க” என்று வெறுப்பில் விவேக் தர, அவருடைய மனைவியின் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் “வெச்சுக்கட்டுமா சார்” என்று செல் முருகன் இரட்டை அர்த்தத்தில் கேட்க, ஒன்றும் பேசாமல் செல்போனை திரும்ப வாங்கிக் கொண்டு விவேக் சோகத்துடன் நடந்து செல்வது நகைச்சுவையின் உச்சம்.
பிறகு வெளியில் தனுஷை சந்திக்கும் கம்பெனி முதலாளியின் மகள் “பிராஜக்ட் கிடைச்சுதா?” என்று கேட்க “ஓ..குடும்பமா சேர்ந்துதான் இதைப் பண்றீங்களா?” என்று மைண்ட் வாய்ஸில் தனக்குத் தானே பேசிக் கொள்வார் விவேக். இப்படி மைண்ட் வாய்ஸில் பேசி காமெடி செய்வது பொதுவாக வடிவேலுவின் பாணி. விவேக்கும் அதை வெற்றிகரமாகப் பின்பற்றினார் எனலாம்.
முதலாளியின் மகளுடன் தனுஷ் பேசும் போதெல்லாம் விவேக் தரும் கோணங்கித்தனமான எக்ஸ்பிரஷன்கள் ரசிக்க வைப்பவையாக இருக்கும்.
அடுத்த காட்சியில் “சார்.. போன் அடிக்குது. உங்க வொய்ப்பாதான் இருக்கும். அவங்களுக்கு இன்னிக்கு பர்த்டே” என்று செல்முருகன் சொல்ல, அவரைச் சந்தேகமாக பார்க்கும் விவேக் “அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்க “நானும் அவங்களும் ஃபேஸ்புக் பிரெண்ட்ஸ்” என்று வெள்ளந்தியான முகத்துடன் சொல்வார் முருகன். என்றாலும் கூட விவேக்கின் சந்தேகம் விலகாது. தங்கபுஷ்பம் என்கிற அந்தக் கேரக்டர் முகம் காட்டாமல், குரலின் வழியாகவே காட்சிகளின் சுவாரசியத்திற்கு காரணமாக இருக்கும்.
தனுஷ் தனது வீட்டின் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் கவரால் கூரை அமைத்து அதில் தனது மினி அலுவலகத்தை அமைத்திருப்பார். “என்னதிது.. பெரிய கேரி பேக்ல குடியிருக்கீங்க?” என்று கிண்டலடித்தபடி வருவார் விவேக். தனுஷை பார்க்க ஆவலுடன் வரும் அமலாபால், விவேக் இருப்பதால் எரிச்சல் அடைந்து “எப்பவும் கூடவே இருப்பியா?” என்று ஜாடையாக திட்டி விட்டுச் செல்ல “என்னையா திட்னாங்க?” என்று விவேக் அதிர்ச்சியான பாவனையுடன் கேட்க “அய்யோ இல்லை. சார். ஹாரிபாட்டரை..” என்று தனுஷ் நாயைச் சுட்டிக் காட்டியவுடன் ‘ஓகே” என்று சமாதானம் அடைவார்.
அமலாபால் சென்றவுடன் முதலாளியின் மகள் உள்ளே வர, அவரை அமர வைப்பதற்காக தனுஷ் விவேக்கை தயக்கத்துடன் பார்க்க “நான் பக்கத்து ரூம்ல வெயிட் பண்றேன்” என்று நையாண்டியாக சொல்லும் விவேக், கூடாரத்தின் வாசலில் நின்று இருவரும் பேசிக் கொள்வதை விதம் விதமான முகபாவங்களுடன் பார்ப்பது அருமையான நகைச்சுவை.
முதலாளி மகள் சென்ற பிறகு, “வேற யாராவது வருவாங்களா.. உள்ளே வரட்டுமா?” என்று பணிவாக கேட்கும் விவேக் பிறகு இழுவையான குரலில் கேட்கும் ஒரு கேள்வியும் அதில் இருக்கும் வித்தியாசமான மாடுலேஷனும் சுவாரசியமானது.
“முதல்ல வந்து போச்சே..அதுதான் இதுவா.. இல்ல. அடுத்தது வந்துதே.. அதுதான் இதுவா..இல்ல ரெண்டுமே இதுவா?” என்று கிசுகிசுவிற்கான விடையைப் போல் கேட்க, தனுஷ் அதற்கு உணர்ச்சிகரமாக பதில் சொன்னதும் சட்டென்று முகம் மாறி “ஸாரி.. மிஸ்டர் ரகுவரன்” என்று தனது நடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தியிருப்பார் விவேக்.
கட்டுமானப் பணியில் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனுஷிற்கு, தொழில் போட்டி காரணமாக ஒரு வில்லன் முளைப்பான். அவனுடைய வில்லத்தனம் காரணமாக தனுஷ் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் சில பிரச்சினைகள் எழும். அந்தச் சமயத்தில் தனுஷிற்கு ஆதரவாக நிற்கும் விவேக், சீரியஸான முகபாவங்களைத் தந்து காட்சியின் விறுவிறுப்பிற்கு காரணமாக இருப்பார்.
தனுஷ் வில்லனிடம் நக்கலான பாவனையில் சவால் விட்டு பேசிக் கொண்டிருக்கும் போது பிரேமிற்குள் சட்டென்று உள்ளே வரும் விவேக் “இவன் ஃபேஸைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை. நான் வொர்க் ஸ்பாட்டிற்கு போறேன்” என்று விலகிச் செல்வது மின்னல் வேக காமெடி.
தனுஷ், செல்முருகன், விவேக் ஆகிய மூவரும், கட்டுமான வேலைகளைப் பார்வையிடுவதற்காக அதற்கான வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது “வொய்ப்பிற்கு ஒரு போன் பண்ணணும். என் போன் இல்ல” என்று செல்முருகனிடம் இரவல் வாங்கி டயல் செய்வார் விவேக்.
தன் மனைவியின் பெயர் ‘GF’ என்று அதில் சேவ் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும் டென்ஷன் ஆகி விடுவார், “என்னடா இதுக்கு அர்த்தம் கேர்ள் பிரெண்டா.. நீ ஏன் அவ நம்பரை சேவ் பண்ணியிருக்க?” என்று விவேக் ஆத்திரத்துடன் கேட்க “சார். தங்க புஷ்பம் சார்.. Golden Flower” முருகன் பதில் அளிப்பது புத்திசாலித்தனமான நகைச்சுவை.
விவேக் இன்னமும் ஆத்திரம் அடங்காமல் கேள்வி கேட்க “சார். என் தங்கச்சி நம்பரை நான் சேவ் பண்ணி வெச்சிக்கக்கூடாதா?” என்று செல்முருகன் சென்டிமென்ட்டாக கேட்டதும் வாயடைத்துப் போய் விடுவார்.
பிறகு “இவன் என்னடான்னா.. முதலாளி பொண்ணு அம்மா மாதிரிங்கறான்.. இவன் என்னடான்னா.. என் பொண்டாட்டிய தங்கச்சிங்கறான்.. இவனுங்க மொகரைக் கட்டைங்களையெல்லாம் பார்த்தா அப்படியொன்னும் நல்லவங்கள மாதிரி தெரியலையே” என்று வாய் விட்டு சொல்லி விட
என்று தனுஷ் சொல்லும் டைமிங்கான கமெண்ட், நடைமுறை வாழ்க்கையிலும் புகழ் பெற்ற வசனமாக மாறி விட்டது. பிறகு விவேக் தரும் எக்ஸ்பிரஷன்கள் கூடுதல் சுவையானவை.