சொர்ணமால்யா அலைபாயுதே
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பூரணத்துவமான அக்கா ‘பூர்ணி’யாக... ‘அலைபாயுதே’ சொர்ணமால்யா!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ‘சொர்ணமால்யா ’ ஏற்று நடித்திருந்த ‘பூர்ணி ’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த திரைக்கதைகளுள் ஒன்று ‘அலைபாயுதே’.  மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கும் சொர்ணமால்யா, இந்த திரைப்படத்தில்தான் அறிமுகமானார்.

சொர்ணமால்யா

படிப்பு, நடனம் ஆகியவற்றில் மட்டுமே பிரதான ஆர்வம் கொண்டிருந்த சொர்ணமால்யா, பாரதிராஜா, பாலசந்தர் போன்ற பல பெரிய இயக்குநர்கள் நடிப்பதற்காக அழைத்த போது அந்த அழைப்புகளை  மறுத்து விட்டார்.  இந்த தொடர் நிராகரிப்பு குறித்த குற்றவுணர்ச்சி காரணமாக மணிரத்னம் அழைத்த போது சில நிபந்தனைகளுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சன் டிவியில் ‘இளமை புதுமை’ என்கிற நிகழ்ச்சியை  சொர்ணமால்யா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அதைப் பார்த்த மணிரத்னம் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ‘பூர்ணிமா’ என்கிற பாத்திரத்தில் நடிப்பதற்காக சொர்ணமால்யாவை அணுகினார். முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது சொர்ணமால்யாவிற்கு பதினெட்டு வயது மட்டுமே ஆகியிருந்தது. 

பூர்ணி - பூரணத்துவமான அக்கா பாத்திரம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ ‘அக்கா’ கதாபாத்திரங்கள் வந்திருக்கும். ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான அக்காவாக பூர்ணியின் பாத்திரம் அமைந்திருந்தது. அலைபாயுதே படத்தின் நாயகியான சக்திக்கு (ஷாலினி), அக்காவாக மட்டும் அல்லாமல் நெருங்கிய தோழியாகவும் பூர்ணி இருந்ததால் இந்தப் பாத்திரம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சொர்ணமால்யாவின் இயல்பான அழகும் ஒரு கூடுதல் காரணம் எனலாம். 

ஷாலினி - சொர்ணமால்யா

பொதுவாக எந்தவொரு குடும்பத்திலும் மூத்த குழந்தைகள் பொறுப்புணர்ச்சி, நிதானம், கடமை, சகிப்புத்தன்மை போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள்.  இதன் எதிர்முனையில் கடைசிப் பிள்ளைகள் அறுந்த வாலாக, குறும்புக்காரர்களாக, பெற்றோர்களை எதிர்த்துப் பேசுபவர்களாக இருப்பார்கள். இது பொதுவான நம்பிக்கையில் அமைந்த கருத்து மட்டுமே. அந்த வகையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மூத்த மகளாக பூர்ணியின் பாத்திரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  

‘எங்க வீட்டு குத்து விளக்கு.. நீ கெடைச்சா வாழ்க்கை கெத்து’ என்கிற பாடல் வரி மாதிரி, இந்தப் படத்தில் பார்ப்பதற்கு அத்தனை அம்சமாக இருப்பார் பூர்ணி. அந்தப் பெயரே அத்தனை ஸ்பெஷலாகத் தெரியும். அலைபாயுதே படத்தை முதன்முறையாக மட்டுமல்ல,  பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஷாலினியை விடவும் சொர்ணமால்யாவையே நான் அதிக நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்பது இந்தக் கட்டுரைக்குத் தேவைப்படாத அநாவசியமான உபதகவல். 

ஷாலினி - சொர்ணமால்யா

இப்படியொரு அக்கா தனக்கும் இருக்கக்கூடாதா என்று ஒவ்வொரு இளம் பெண்ணும் ஏங்குமளவிற்கு பாசமான சகோதரி மற்றும் நெருங்கிய தோழி பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியிருந்தார் சொர்ணமால்யா. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இரண்டு சகோதரிகளின் எதிரெதிர் குணாதியங்களை அவர்களின் அம்மா பேசும் வசனத்தின் மூலம் சரியாக காட்சிப்படுத்தியிருந்தார் மணிரத்னம். 

அமைதியான அக்கா, அடங்காப்பிடாரி தங்கை

‘தினமும் உப்புமாவா?’ என்று சலித்துக் கொண்டே தங்கை சாப்பிட ஆரம்பிக்க, பூர்ணியோ எந்த புகாரும் இல்லாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

“முடியைப் பாரு.. அவளை மாதிரியே அடங்காப்பிடாரியா இருக்கு” என்று சின்னவளைத் திட்டும் அம்மா,

“பூர்ணியைப் பாரு. எத்தனை ஒழுங்கா  தலையை பின்னி வாரியிருக்கா?” என்று ஒப்பிடவும் சக்திக்கு கோபம் அதிகமாகிறது.

“நீங்க ரெண்டு பெரும் ஒருநாளாவது சண்டை போடாம இருக்க மாட்டீங்களா?” என்று பூர்ணி கேட்க

“அவளும் உன்னை மாதிரியே இருந்தா, நான் ஏன் திட்டப் போறேன்?” என்கிறாள் அம்மா. 

ஷாலினி - ஜெயசுதா - சொர்ணமால்யா

வங்கிப் பணியில் இருக்கும் பூர்ணி, கிளம்பும் போது பயபக்தியுடன் சாமி கும்பிட, பரீட்சைக்கு கிளம்பும் சக்தியோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்மாவிடம் மல்லுக்கட்டிக் கொண்டே அவசரம் அவசரமாக கிளம்புகிறாள். பரீட்சைக்கு வாழ்த்து சொல்ல வரும் முறைப்பையனுக்கு (வழக்கத்திற்கு மாறாக விவேக்கிற்கு இதில் சீரியஸான ரோல்) இருக்கும் திக்குவாய்ப் பிரச்சினையை சக்தி கிண்டலடிக்க, அவளை மெலிதாக கண்டிக்கிறாள் பூர்ணி. 

உன் முகத்துல திடீர்ன்னு நாற்பது வாட்ஸ் வெளிச்சம் கூடியிருக்கு” என்று தன் தங்கை காதலில் விழுந்திருப்பதை முதலில் அடையாளம் கண்டுபிடிப்பவள் பூர்ணிதான். ஆனால் அதை பாவனையாக மறுக்கிறாள் சக்தி. தங்களின் வீட்டைச் சுற்றி சுற்றி வரும் கார்த்திக்கிடம் “யாரு.. வேணும்.. சக்தியா?” என்று குறும்பு செய்பவளும் இதே பூர்ணிதான். 

மாதவன் - ஷாலினி - சொர்ணமால்யா

இதன் பிறகுதான் அந்தப் புகழ்பெற்ற வசனம் வருகிறது. ரயில் நிறுத்தங்களின் இடையில் சக்தியின் எதிரே வரும் கார்த்திக் “நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நான் உன்னை லவ் பண்ணலே.. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு” என்று தன் காதலைச் சொல்லி விட்டு சட்டென்று அகன்று விடுகிறான். 

ஒரிஜினல் ஸ்கிரிப்டின் படி, இந்தக் காட்சியின் பிரேமில் சொர்ணமால்யா கிடையாதாம். ஆனால் ரயிலில் நிற்க இடமில்லாததால் ஷாலினியின் பக்கத்தில் வந்து நின்ற அவருடைய எக்ஸ்பிரஷன்கள் அத்தனை இயல்பாக இருந்தன. இந்தக் காட்சியின் முத்தாய்ப்பாக, கார்த்திக் சொன்ன அதே வசனத்தை ஆண் குரலில் பூர்ணி மிமிக்ரி செய்து சொல்லிக் காட்டுவது சுவாரசியமான தருணம். 

மாதவன் - ஷாலினி - சொர்ணமால்யா

தங்கையின் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அக்கா

பூர்ணிக்கு முன்பாகவே  சக்தியுடன்  தன்னுடைய ரொமான்ஸை நிகழ்த்துவான் கார்த்திக். இதை ஒருவிதமான மௌனச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பாள் பூர்ணி.  ஒரு அக்காவாக, தங்கையின் காதலை ஏன் பூர்ணி கண்டிக்கவில்லை, ஆட்சேபிக்கவில்லை என்கிற கலாசாரக் கேள்வி எழலாம். ஆனால் சக்தியின் அக்காவாக அல்லாமல் நெருங்கிய தோழி போலவே பழகுகிறாள் பூர்ணி. 

மேலும் கார்த்திக் நல்ல பையன் என்று நம்புகிறார். அதனால் கார்த்திக்கின் பெற்றோர், சக்தியைப் பெண் பார்க்க வரவிருக்கும் தகவலை தன் அப்பாவிடம் மெல்ல ஆரம்பித்து சொல்கிறாள் பூர்ணி. மூத்தவளுக்கே திருமணம் ஆகாத நிலையில் இளையவளுக்கு பெண் கேட்டு வரும் செய்தி இவர்களின் அம்மாவிற்கு ஆத்திரத்தைத் தருகிறது. “நீ படிக்கணும்ன்னு இவ கல்யாணம் கட்டாம ஆபிஸ் போயிட்டு வந்துட்டிருக்கா..  இந்த வருஷ பீஸ், இவ ஆபிஸ்ல இருந்து லோன் வாங்கி கட்டினது.. உன் படிப்புக்காக அவ கல்யாணம் கட்டாம காத்திட்டிருக்கா.. உனக்கு என்னடி அவசரம்?” என்று சக்தியை அம்மா பயங்கரமாக கோபித்துக் கொள்ள, தங்கைக்கு ஆதரவு “அம்மா.. கார்த்திக்.. ரொம்ப நல்லவன்” தெரிவித்து அவளைப் பாதுகாக்க முயற்சிக்கிறாள் பூர்ணி

ஷாலினி - சொர்ணமால்யா

உயர்வு மனப்பான்மைக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் காரணமாக பெண் பார்க்கும் படலம் படுபயங்கரமாக தோற்றுப் போகிறது. ‘இது சரிப்பட்டு வராது.. நாம பிரிஞ்சுடலாம்’ என்று அரைமனதாக கார்த்திக்கிடம் சொல்லி தன் காதலை முறித்துக் கொள்கிறாள் சக்தி. “எலெக்ட்ரிக் டிரையினை அவாய்ட் பண்ணிட்டு எத்தனை நாளைக்கு இப்படி பஸ்ல போகப் போறே?” என்று தங்கையை கிண்டல் செய்கிறாள் பூர்ணி. 

ரகசியத் திருமணமும் சகோதரிகளின் பரஸ்பர சிரிப்பும்

என் பையனுக்கு சக்தியை கல்யாணம் பண்ணித் தரேன்னு வாக்குத் தந்திருக்கே. மறந்துடாதடா” என்று சக்தியின் அப்பாவிடம், அவரது தங்கை அவ்வப்போது நினைவுப்படுத்தி நெருக்கடி தந்து கொண்டேயிருப்பார். “பழைய கதைல்லாம் பேசிப் பேசி சேதுவுக்கு உன்னை கல்யாணம் பண்ணித் தர பார்க்கறாங்க.. ஜாக்கிரதை” என்று தன் தங்கைக்கு எச்சரிக்கை தருகிறாள் பூர்ணி. 

ஷாலினி - சொர்ணமால்யா

கார்த்திக்கை விட்டு தன்னால் பிரிந்திருக்க முடியாததை உணரும் சக்தி, அவன் சொல்லும் ஒரு விபரீதமான திட்டத்திற்கு அரைமனதாக ஒப்புக் கொள்கிறாள். இரு குடும்பத்தாருக்கும் தெரியாமல் இப்போதைக்கு பதிவுத் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாகவே வழக்கம் போல் வாழ்வது என்பது அந்தத் திட்டம்  இதன் மூலம் தங்களை எவரும் பிரித்து விட முடியாது என்று நம்புகிறார்கள். இந்த விஷயங்களையெல்லாம் நேரடியாக விளக்கிக் கொண்டிருக்காமல் தவளைப் பாய்ச்சலில் காட்சிகளை வைத்து அசத்தியிருப்பார் மணிரத்னம். 

திருமணம் நடக்கவிருக்கும் நாள். “என்ன கல்யாணப் பொண்ணே..?” என்று தங்கையைக் கிண்டல் செய்கிறாள் பூர்ணி. ஆனால் சக்தியோ மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாள். பேருந்தில் ஏறும் போது “இது வேண்டாம். திரும்பிப் போயிடலாம்” என்று சக்தி குழப்பத்தில் சொல்ல, “சரி.. வா.. போயிடலாம்” என்று பூர்ணி குறும்பு செய்ய, இருவரும் சிரிப்புடன் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கு பதிவுத் திருமணம் நடக்கிறது. பூரிப்பான பாசத்துடன் பின்னால் நிற்கிறாள் பூர்ணி. 

ஷாலினி - சொர்ணமால்யா

திருமணம் முடிந்து அவரவர்களின் வீடுகளுக்கு இருவரும் கிளம்பி விடுகிறார்கள். இந்தச் சமயத்தில் ஓர் அருமையான காட்சி வருகிறது. பேருந்தில் அக்காவும் தங்கையும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பார்த்து குழந்தைத்தனமாக  சிரித்துக் கொள்ளும் அந்தக் காட்சி அற்புதமான விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும். ‘எத்தனை பெரிய காரியத்தை ரகசியமாக செய்திருக்கிறோம்?’ என்கிற குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் படபடப்பும் அந்த இருவரின் சிரிப்பிலும் தெரியும். 

சக்திக்கு திருமணமாகி விட்ட செய்தி அம்பலமாகும் காட்சி எழுதப்பட்டிருக்கும் விதமும் அருமையானது. பூர்ணியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், திடீரென தங்களின் இளைய மகனுக்கு சக்தியை வரன் கேட்க, சக்தியின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சக்தி திகைப்புடன் நிற்க, அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு பூர்ணியும் கலங்கிப் போகிறாள். இந்த ஹைவோல்டேஜ் டிராமாவை சிறப்பான முறையில் படமாக்கியிருப்பார் மணிரத்னம். 

ஷாலினி - சொர்ணமால்யா

உடைந்த குடும்பமும் விரிசல் அடையும் உள்ளங்களும்

சக்தியும் கார்த்திக்கும் தங்களின் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் செய்கின்றனர். காதலின் மயக்கங்கள் கலைந்து அவர்களுக்குள் அவ்வப்போது அகங்கார உரசல்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை ரயிலில் பயணிக்கும் போது நீண்ட நாட்கள் கழித்து தன் அம்மாவையும் அக்காவையும் பார்க்கிறாள் சக்தி. தன் அக்காவை சோகத்துடன் உற்றுப் பார்க்கிறாள். பிறகு தாவிச் சென்று தன் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறாள். கடந்த கால கோபதாபங்கள் மெல்ல கரைகின்றன. 

“பூர்ணி.. நீ எப்படியிருக்கே.. எத்தனை முறை மளிகைக்கடைக்கு போன் பண்ணியிருப்பேன்.. ஒரு முறையாவது நீ பேசினியா?” என்று சக்தி கேட்க மௌனத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள் பூர்ணி. கதாபாத்திர வடிவமைப்பின் படி இந்த விஷயம் சற்று முரணாக இருக்கிறது. குடும்பத்திற்கே தெரியாமல் தன் தங்கைக்கு துணிச்சலாக திருமணம் செய்து வைத்த பூர்ணி, பிறகு ஏன் தங்கையிடம் தொடர்பு கொள்ளாமலே இருக்கிறாள்?  அவர்களின் பெற்றோர் அந்த அளவிற்கு அவளை எமோஷனல் பிளாக்மெயில் செய்திருப்பார்களா?

சொர்ணமால்யா - ஜெயசுதா

சக்திக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான மோதலின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த விரிசலை சரி செய்ய நினைக்கிறான் கார்த்திக். தங்களால்தான் பூர்ணியின் திருமணம் நின்று போனது என்பதால் ஒரு குறும்பான ஐடியாவைச் செய்கிறான். பூர்ணியையும் அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் குரலை மாற்றிப் பேசி சந்திக்க வைக்கிறான். பெண் பார்த்த சம்பவத்திற்குப் பிறகுதான் தன் குடும்பம் உடைந்து போனது என்று கருதும் பூர்ணி, தன்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளைப் பையனிடம் சிடுசிடுப்பாக பேச “ஹலோ.. நீங்கதான் பார்க்கணும்ன்னு என்னை வரச் சொன்னீங்க” என்று அவன் திகைப்புடன் பேச.. 

பூர்ணியின் வாழ்க்கையில் நுழையும் புதிய ஒளி

தூரத்தில் ஒளிந்து நின்று கொண்டிருக்கும் கார்த்திக்கைப் பார்த்ததும் பூர்ணிக்கு எல்லாம் தெளிவாகி விடுகிறது. “இதெல்லாம் உன் வேலையா.. ஜோடி சேர்த்து வெக்கறியா… இல்ல.. தரகர் வேலை பார்க்கறியா?” என்று கார்த்திக்கை கோபத்துடன் கடிந்து கொள்கிறாள் பூர்ணி. தர்மசங்கடத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறான் கார்த்திக். “ஐ ஆம்.. ஸாரி” என்று மாப்பிள்ளைப் பையனிடம் மன்னிப்பு கேட்கிறாள் பூர்ணி. அவன் மகிழ்ச்சியுடன் “இட்ஸ்… ஓகே” என்கிற மாதிரி அசட்டுத்தனமாக சிரிக்கிறான்.

மாதவன் - சொர்ணமால்யா

உண்மையில் கார்த்திக்கின் ஐடியா வேலை செய்கிறது. பூர்ணியும் மாப்பிள்ளைப் பையனும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டாலும் அவரவர்களின் மனதிற்குள் இருந்த திருமண ஆசையும் காதலும் விழித்துக் கொள்ள இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஜோடியை ஒரு நாள் சாலையில் பார்த்து விடும் கார்த்திக் “ரெண்டு பேருக்கும் ஒரே ஐஸ்கிரீமா.. அநியாயமா இருக்கே.. எப்படி.. எப்படி… அன்னிக்கு என்னவெல்லாம் சொன்னாங்க.. தரகர் வேலை பார்க்கறேன்னா?” என்று கார்த்திக் குறும்பு செய்ய வெட்கம் தாங்காமல் சிரிக்கும் காட்சியில் அத்தனை அம்சமாக இருப்பார் சொர்ணமால்யா. 

மாதவன் - சொர்ணமால்யா

இன்னொரு தருணத்தில் சாலையில் நடந்து செல்லும் தன் தங்கையை கத்தி அழைத்தபடி பின்னால் ஓடி வரும் பூர்ணி, “எங்கிட்ட இருந்து ஓடி ஒளியறியா என்ன?” என்று கேட்டபடி தன்னுடைய புதிய காதல் வாழ்க்கையை தங்கையிடம் வெட்கப்பட்டபடி பகிர்ந்து கொள்ளும் காட்சியும் அருமையானது.

“கழுத வயசுல வெட்கம் வேற” என்று சிரித்தபடி சொல்லும் பூர்ணி, இந்த இணைப்பிற்கு கார்த்திக்தான் காரணம் என்று சொல்ல அதைக் கேட்டு சக்தி திகைப்படைகிறாள்.

ஷாலினி - சொர்ணமால்யா

“ஆமாம்… எப்படியோ முட்டி மோதி எங்களை சேர்த்து வெச்சிட்டாரு” என்று மாப்பிள்ளைப் பையனும் சிரிப்புடன் சொல்ல, தன் அக்காவிற்கு இத்தனை நல்லதா கார்த்திக் செய்திருக்கிறான் என்பதை அறியும் சக்திக்கு அவன் மீதுள்ள அத்தனை கோபமும் சந்தேகமும் அந்த ஒரே கணத்தில் தீர்ந்து போகிறது. ‘ஆல் தி பெஸ்ட்’ என்று தன் சகோதரிக்கு வாழ்த்து சொல்லும் சக்தி மிக்க மகிழ்ச்சியுடன் கிளம்புகிறாள்.  அப்போதுதான்… 

நாயகிக்கு நிகரான வசீகரம் - சொர்ணமால்யா

கல்லூரிக்குச் செல்லும் இளம் வயதில் இருந்த சொர்ணமால்யாவிற்கு முதல் படத்தில் ‘அக்கா’ வேடம் என்பதெல்லாம் மிக  அநியாயம். இந்த விஷயத்தில் மணிரத்னம் செய்தது அபாண்டம் என்றே சொல்லலாம். பல பிரேம்களில் ஓரமாக இருந்தாலும் அத்தனை வசீகரமாக இருந்தார் சொர்ணமால்யா. சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல், நடிப்பு பற்றி ஒரு விஷயமும் அறியாமல் சினிமாக்காரர்களின் வற்புறுத்தல் காரணமாக நடிக்க வந்தவர் சொர்ணமால்யா.

சொர்ணமால்யா

“இப்படியொரு படத்துல நடிக்கறேன்.. என் கேரக்டர் இப்படியெல்லாம் பேசப்படும்ன்னு எனக்கு அப்ப தெரியவே தெரியாது. படிப்புதான் முக்கியம்ன்ற ஃபீல்ல இருந்தேன்” என்று நேர்காணல்களில் சிரித்தபடி சொல்கிறார் சொர்ணமால்யா. ஆனால் அவரிடமிருந்து இத்தனை இயல்பான நடிப்பு வெளிப்பட்டதற்கு, அவருக்குள் உறைந்திருக்கும் தன்னிச்சையான கலைத்திறனும் மணிரத்னத்தின் டைரக்ஷன் திறமையும்தான் காரணமாக இருந்திருக்க முடியும். 

நடிப்பதற்கு கணிசமான வாய்ப்புகள் துரத்தினாலும் தன்னுடைய கல்வியும் கலையும்தான் முக்கியம் என்று அவற்றிற்கு முக்கியத்துவம் தந்த சொர்ணமால்யாவின் பயணம் பாராட்டத்தகுந்தது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ ‘அக்கா’ பாத்திரங்கள் இருந்தாலும் ‘பூர்ணி’ என்கிற பாத்திரம் மிக மிக ஸ்பெஷலானது.

தனது வசீகரமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் இந்தப் பாத்திரத்தை மறக்க முடியாதபடி செய்து விட்டார் சொர்ணமால்யா.