இரண்டு நண்பர்கள் நெருக்கமாக இருந்து, அதில் ஏதோவொரு நண்பர் தொடர்ந்து தவறு செய்தால், இன்னொருவரை நோக்கி “ஏம்ப்பா.. செவ்வாழ.. கூடவே இருக்கியே.. நீயாவது அவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லக்கூடாதா?” என்று கேட்பது நடைமுறையில் வழக்கமாகி விடும் அளவிற்கு ‘செவ்வாழை’ என்கிற பாத்திரம் மக்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. பருத்திவீரன் திரைப்படத்தில் சரவணன் நடித்த பாத்திரம் இது.
தொன்னூறுகளில் அறிமுகமாகிய சரவணன் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். பிறகு அவர் தயாரித்த சில படங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவே சிறிது காலத்திற்கு காணாமல் போனார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் ‘நந்தா’ படத்தின் மூலமாக வில்லன் பாத்திரத்தின் மூலம் திரும்பி வந்தார். அந்தச் சமயத்தில் அவர் நடித்த ‘பருத்தி வீரன்’ பாத்திரம் ரசிகர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. பருத்தி வீரனுக்கு முன்னாலும் பின்னாலும் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சரவணனுக்கு பிரத்யேகமான அடையாளத்தை உருவாக்கித் தந்தது ‘செவ்வாழை’தான். அந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் சிறப்பாக வடிவமைத்திருந்தார் இயக்குநர் அமீர். அதில் செவ்வாழையின் பங்களிப்பு தனித்துவமானது.
எந்தவொரு சிறுவனுக்கும் சித்தப்பா, தாய்மாமன் போன்ற உறவுகள் எப்போதுமே ஸ்பெஷல். அப்பாவிடம் இருக்கும் கண்டிப்பு இவர்களிடம் அறவே இருக்காது. மாறாக அதிக அன்பும் செல்லமும் கிடைக்கும். பல சமயங்களில் நண்பர்கள் போலவே நெருக்கமாகப் பழகுவதுண்டு. கூடப்பிறந்த உறவின் மகன் என்பதால் சித்தப்புக்களும் மாமூக்களும் அதிகமாக பாசத்தைக் கொட்டுவார்கள்.
‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘வீரன்’ பாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக்கு தந்தை கிடையாது. சாதிப்பிரச்சினை காரணமாக கொல்லப்பட்டிருப்பார். எனவே சித்தப்பாவான செவ்வாழைதான் சிறுவன் வீரனை பாசமாக வளர்ப்பார். வீரனோ சிறுவயதிலேயே பயங்கர அராத்தாக இருப்பான். சண்டியராக இருக்கும் சித்தப்பாவின் அலப்பறைகள் அவனுக்குள்ளும் பரவி விடும். வீரனை எங்கும் விட்டுக் கொடுக்காமல் பேசுவதோடு அவனுக்கு பல சமயங்களில் ஆதரவாக இருப்பவர் ‘செவ்வாழ’தான். சில்லறைக் குற்றங்களை கற்றுத்தரும் குருவும் கூட. ஆனால் வீரனோ பல சமயங்களி்ல் குருவை மிஞ்சி விடும் சிஷ்யனாக ஆகி விடுகிறான். விரோதம் காரணமாக யாரிடமாவது சண்டை இழுத்து விட்டு ஜெயில் பறவைகளாக சுற்றுவதுதான் இவர்களது முக்கியமான பொழுதுபோக்கு. இதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் வாழும் சண்டியர்களின் வாழ்க்கைமுறையை சிறப்பாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் அமீர்.
வீரன் சித்தப்பாவிடம் தொடர்ந்து கேட்கும் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றுண்டு. “சித்தப்பா.. கமுதி கோர்ட்டு, மதுர ஜெயிலுன்னு பார்த்து பார்த்து போராடிக்குது.. பெரிசா ஏதாவது செஞ்சுட்டு ஒரு முறையாவது மெட்ராஸ் ஜெயிலைப் பார்த்துடணும்.. பேப்பர்ல போட்டோ பெரிசா வரணும்.. ஜீப்ல டாட்டா காட்டிக்கிட்டே ஏறணும்..” என்று ஐஸ்கிரீம் கேட்கும் சிறுவன் போல வீரன் ஆசைப்பட “என் கிட்ட சொல்ட்ட இல்லடா.. செஞ்சுடுவோம்’ என்று இரண்டு விதமான மாடுலேஷன்களில் சொல்லி, தன் மகனை ‘செவ்வாழ’ செல்லம் கொஞ்சுவதே பார்ப்பதற்கு தனி அழகாக இருக்கும்.
படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே சிறுவன் குட்டிசாக்கு, சித்தப்பூ உதவியுடன் ஒரு விரோதக்காரனின் பின்புறத்திலேயே குத்தி விடுவான் வீரன். “ஏண்டா.. மவனே.. அது ஒரு இடம்ன்னு அங்க போய் குத்தினியே?” என்று அங்கலாய்ப்புடன் விசாரிப்பார் செவ்வாழை. ஆயுதத்தைக் கொண்டு போய் கஞ்சா கருப்புவின் ராட்டினத்தில் அவர் ஒளித்து வைக்க போலீஸ் கருப்புவை கைது செய்து காவல் நிலையத்திற்குள் கொண்டு வரும். “எப்படி சார்.. ஆளைக் கரெக்ட்டா கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்தீங்க?” என்று செவ்வாழை கண்ணடித்துக் கொண்டே குறும்புடன் விசாரிப்பது ரசிக்கத்தக்க காட்சி. கைதிகளை அமர வைத்து போலீஸ் போட்டோ எடுக்கும் காட்சியில் “இவன் அந்தளவுக்குல்லாம் ஆள் கிடையாது. கத்திய ராட்டினத்தில நான்தான் வெச்சேன்” என்று கஞ்சா கருப்புவை கழற்றி விடுவார் செவ்வாழை. அந்தப் பெருமை தங்களுக்கு மட்டுமே சேர வேண்டும் என்று வீரனும் செவ்வாழையும் கெத்தாக புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்கள்.
பிளாஷ்பேக் காட்சியில் சிறுமி முத்தழகிக்கு வீரன் முத்தம் கொடுத்து விட்டதாக ஒரு பிராது வரும். பொணந்தின்னியை அழைத்துக் கொண்டு செவ்வாழையின் வீட்டிற்கு பஞ்சாயத்து கேட்பதற்காக வீராவேசமாக வருவார் முத்தழகியின் தந்தையான கழுவன். “இருங்கய்யா.. இவ்ள ஆளுங்க.. மீசையும் கீசையுமா வந்தா பய படுப்படுவான்ல” என்று வீரனுக்கு ஆதரவாக நிற்கும் செவ்வாழை, பிறகு தனியாக சென்று “ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்கள்லாம் வந்திருக்காங்க.. போயி மன்னிப்பு கேளு” என்று சிறுவன் வீரனிடம் சொல்ல, அவனோ “போங்க.. சித்தப்பா.. இவிய்கள்லாம் ஒரு ஆளுன்னு” என்று அலட்சியமாகப் பேச “டேய். என் கிட்டேயேவா” என்று செவ்வாழை இழுவையாக கேட்பது ஒரு நல்ல காட்சி. பொதுவாக அமீரின் படத்தின் பாத்திரங்கள் எல்லாம் ஒரு ரசிக்கத்தக்க இழுவையுடன் கூடிய வசன உச்சரிப்பைக் கையாள்வார்கள்.
வீரன் பாத்திரத்தில் நடித்த கார்த்தியையாவது வெயிலில் காய வைத்து அழுக்குத் துணியைத் தந்து அந்தப் பாத்திரத்தில் பொருத்தினார்கள். ஆனால் சரவணனுக்கு அந்தக் கஷ்டமேயில்லை. அவரது நிறமும், தோற்றமும், மொழியும் அந்த மண்ணின் மனிதனுக்கு கச்சிதமாகப் பொருந்தியது. கோழி இறகால் காதைக் குடைந்து கொண்டே எதையும் அலட்சியமாகப் பேசும் உடல்மொழியை சரவணன் மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்.
இந்தப் படத்தில் வரும் டீக்கடை காட்சியை மறக்கவே முடியாது. கஞ்சா கருப்பு வேலைக்குச் செல்லும் இடத்தில் எல்லாம் லந்து கொடுப்பது இவர்களின் வழக்கமான பொழுதுபோக்கு. டீக்கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கஞ்சா கருப்புவை நோக்கி ‘டேய்...” என்று குறும்பாக சரவணன் தலையசைக்கும் ஸ்டைலே தனி. அடுத்த நிமிடமே அவரது பணிக்கு இவர்கள் உலை வைக்கப் போகிறார்கள் என்பதற்கான முன்னோட்ட புன்னகை அது. “என்ன மாமா சௌக்கியமா?” என்று பொன்வண்ணனை நோக்கி கார்த்தி கேட்டு சட்டென்று இன்னொருவரின் பக்கம் திரும்பி குறும்பு செய்ய அவரோ “யோவ் வாய்யா. எந்திரிச்சு போகலாம்” என்று எரிச்சல் தாங்காமல் கிளம்பி விடுவார்.
அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வசனம் வரும். வீரன் செய்யும் குறும்பைப் பார்த்து “கூடவே இருக்கியே.. செவ்வாழ.. இவனுக்கு புத்திகித்தி ஏதாச்சும் சொல்லக்கூடாதா” என்று டீக்கடை முதலாளி கேட்க “சொன்னா.. எங்கங்க. கேட்கறான். கண்ட கண்ட நாயெல்லாம் புத்தி சொல்லும். ஒழுங்கா இருடான்னா கேக்க மாட்றான்” என்று முதலாளியையே ஒரண்டை இழுப்பார் சரவணன். இப்போது டீக்கடை முதலாளிக்கும் எரிச்சல் வந்து ‘எழுந்து போங்கய்யா’ என்று துரத்தி விட, சட்டென்று ‘அத உங்க ஓனரைச் சொல்லச் சொல்லுய்யா” என்று சரவணன் கோத்து விடுவது அநியாயமான குறும்பு.
“யாருய்யா. ஓனரு..” என்று அவர் கேட்க “டக்ளஸ் அண்ணன்’ என்று செவ்வாழை பவ்யமாகச் சொல்வது ரசிக்கத்தக்க அலப்பறை, “ஏண்டா.. நீயா ஓனரு.. இப்படித்தான் வெளில சொல்லிட்டுத் திரியறியா?” என்று டக்ளஸை வேலையை விட்டு அனுப்பி விடுவார் முதலாளி. “அப்ப.. அவன் ஓனரில்லையா.. பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு” என்று டீ கிளாஸை சுழற்றிக் கொண்டே செவ்வாழை சொல்லும் போது ‘வந்த வேலை முடிந்து விட்டதின்’ திருப்தி தெரியும். ‘நீ கலக்கு சித்தப்பூ’ என்று வீரனும் சித்தப்பாவின் அலப்பறையை பார்த்து அகம் மகிழ்ந்து போவான்.
ஊரெல்லாம் சண்டியராகத் திரியும் வீரன், முத்தழகுவைப் பார்த்தவுடன் பம்மிச் செல்வதை செவ்வாழை கிண்டலடிக்கும் ரகமே தனி. “அவ அந்த வாங்கு வாங்கறா.. பேசமா இருக்கியடா மகனே?” என்று நைசாக விசாரிக்க, வீரன் அதற்கு சமாளிப்பாக எதையோ சொல்ல ‘அம்பூட்டு நல்லவனடா நீயி?” என்று செவ்வாழை கேட்கும் வசனமும் நடைமுறையில் அடிக்கடி உபயோகிக்கும் ஒன்றாக மாறி விட்டது.
சீட்டுக்கட்டு விளையாட்டில் தோற்று காசில்லா விட்டால் சித்தப்பாவாகவே இருந்தாலும் தொடர்ந்து விளையாட அனுமதிக்க மாட்டான் வீரன். அந்தச் சமயத்தில் சரியாக அங்கு வரும் கஞ்சா கருப்புவை கோத்து விடுவான் குட்டி சாக்கு. ‘மாடு வாங்கப் போறேன்” என்று கருப்பு பெருமிதமாகச் சொல்ல “ஏன்யா.. இப்ப மாடு வாங்குவே.. அப்புறம் வீடு கட்டி எலெக்ஷன்ல நின்னு.. எம்.எல்ஏ. ஆகி அப்படியே சிஎம் ஆயிடுவே.. நாங்க மட்டும் போஸ்டர் ஒட்டிக்கிட்டே திரியணுமா?” என்று செவ்வாழை தரும் பில்டப் அலப்பறை தாங்காமல் “நான் மாடுதானேய்யா வாங்கப் போறேன்னு சொன்னேன்” என்று கருப்பு பரிதாபமாக கேட்பார்.
சீட்டுக்கட்டு விளையாட்டின் மூலம் கஞ்சா கருப்புவிடமுள்ள பணத்தையெல்லாம் ஏமாற்றி வீரன் பிடுங்கிக் கொள்வான். ஆனால் இவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வார், விசாரணைக்கு வரும் ஒரு கான்ஸ்டபிள். “ஏங்க.. நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா எப்படி,? கொடுங்க” என்று அவரின் பாக்கெட்டில் உரிமையாக செவ்வாழை கை வைத்து கன்னத்தில் அறை வாங்குவார். உடனே வீரனுக்கும் செவ்வாழைக்கும் போதையில் மண்டைக்குள் பிசாசு ஏறி விடும். கான்ஸ்டபிளை மாடு போல கொம்பில் கட்டி தூக்கிச் செல்வார்கள். போலீஸ்காரரனின் கூலிங்கிளாஸை போட்டுக் கொண்டு ‘ஐயகோ.. அவமானம்..” என்று செந்தமிழில் செவ்வாழை வசனங்களை சொல்லும் காட்சியில் அசல் குடிகாரர்கள் கடும் போதையில் செய்யும் அநியாயமான குறும்புகள் தெரியும்.
இப்படி தன் ‘மவனோடு’ தொடர்ந்து அலப்பறை செய்யும் செவ்வாழை, தலைகீழாக மாறும் ஒரு சம்பவம் நடக்கும். சித்தப்பா என்கிற முறையில் அவருடைய பொறுப்புணர்வை முத்தழகு கோபத்துடன் உணர்த்தும் காட்சி அது. “அவன் சித்தப்பன் மாதிரியா இருக்கே.. தெருப்பொறுக்கி மாதிரில்ல இருக்கே” என்று முத்தழகு கோபத்துடன் கேட்க, மிரட்சி அடையும் செவ்வாழை ‘ஏன்.. நான் கரெக்ட்டாதானே செய்யறேன்.. அவனுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டுத்தானே இருக்கேன்” என்று சொல்லும் காட்சியில் சரவணின் நடிப்பு நன்றாக இருக்கும்.
'உண்மையிலேயே தன் அண்ணன் மகனை மகிழ்ச்சியாகத்தானே வைத்திருக்கிறோம், இவள் ஏன் ஆத்திரப்படுகிறாள்?' என்கிற குழப்பமான முகபாவத்தை சரியாக தந்திருப்பார். "காலம்பூரா கூடவே வெச்சுக்கிட்டு சுத்தலாம் பார்க்கறியா?" என்று ஒரு வில்லங்கமான வெடிகுண்டு கேள்வியை முத்தழகு கேட்க, கோபம் வந்து அவளை அடித்து விடுவான் வீரன். அவள் அழுது கொண்டே தன் தரப்பு காதலைச் சொல்ல செவ்வாழையின் முகத்தில் திகைப்பு ஏற்படும். அவர்களைத் தனியாக விட்டு விட்டு யோசனையுடன் வானத்தைப் பார்த்துக் கொண்டே சரவணன் நடந்து செல்லும் காட்சி அற்புதமானது. செவ்வாழை என்னும் மனிதனுக்குள் நிகழ்ந்த அகமாற்றத்தை தனது நடிப்பின் வழியாக வெளிப்படுத்தியிருப்பார். இனிமேல் வீரன் தன் கைப்பிடியில் இருக்க மாட்டான் என்பதை அவர் உணர்ந்து கொள்ளும் தருணம் அது. மட்டுமல்லாமல் வீரன் மீது முத்தழகு வைத்திருக்கும் ஆழமான காதலும் புரியும் தருணம்.
“என்ன இருந்தாலும் நீ அவளை அடிச்சிருக்கக்கூடாதுடா” என்று முதன்முறையாக நல்ல புத்திமதி சொல்வார் செவ்வாழை. "நீயாவது எனக்கு அண்ணன் மவன்டா.. ஆனா உன்னைப் பொறுத்துக்கணும்னு அவளுக்கு என்ன தலையெழுத்து.. என்னை என்ன வேணா பேசிட்டுப் போகட்டும். ஆனா அவ உன் மேல வெச்சிருக்கிற பாசம் நெசம்டா" என்று உணர்ச்சிகரமாக சித்தப்பு சொல்லும் போதுதான் வீரனின் மனநிலையிலும் அழுத்தமான மாற்றம் வரும். அதுவரை தன்னுடனே சுற்றிக் கொண்டிருந்த வீரன், தனியாக கிளம்பிச் செல்லும் போது "யேய்.. கிழவி.. அவன் என்னை மாதிரில்லாம் ஆக மாட்டான். நல்லா வருவான்" என்று மகிழ்ச்சியும் பெருமிதமும் முகத்தில் பொங்க செவ்வாழை சொல்லும் போது சரவணனின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.
முத்தழகை பெண் கேட்க வீடு தேடிச் செல்வான் வீரன். வார்த்தைகள் இறைபட்டு கைகலப்பு நிகழும் போது வீரனைத் தேடி பதட்டத்துடன் ஓடி வரும் செவ்வாழை "ஏண்டா. அவனா வீடு தேடி வந்து பொண்ணு கேட்கறது.. உங்களுக்கு இளக்காரமா போச்சா?" என்று கழுவனை நோக்கி ஆத்திரத்துடன் கேட்பதில் வீரனின் மீதுள்ள பாசம் வெளிப்படும். 'முத்தழகுவை கூட்டிக் கொண்டு எங்காவது சென்று விடு. இங்க வாழ விட மாட்டாங்க" என்று சித்தப்பா அறிவுரை சொல்ல "சித்தப்பா.. வாழணும்னுதான் சொன்னேன். பயந்துக்கிட்டு வாழணும்னு சொல்லல.." என்று தன் சுபாவத்தின்படி வீறாப்பாக எகிறுவான் வீரன். "வீரம் பெரிசில்லடா. விவரமா இருக்கணும்" என்று சூழலின் ஆபத்தை விளக்குவார் செவ்வாழை.
அப்போது முத்தழகு செய்யும் காரியம் எதிர்பாராதது மட்டுமில்ல. சுவாரசியமானதும் கூட. "யோவ்.. எந்திரிய்யா.. எந்திரின்னு சொல்றேன்ல" என்று அவள் மிரட்ட 'நான் என்ன பண்ணேன். உனக்குத்தானே சப்போர்ட் பண்ணி பேசறேன்" என்று மிரண்டு போவார் செவ்வாழை. சட்டென்று அவருடைய காலில் விழும் முத்தழகு "ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா' என்று கேட்டவுடன் திகைப்பும் சங்கடமும் முகத்தில் பெருகி வழிய "எந்திரி.. நல்லா இருப்ப எந்திரிம்மா" என்று வாழ்த்தும் காட்சியிலும் சரவணனின் நடிப்பு அருமையாக இருக்கும். "டேய் வீரா.. சித்தப்பனா.. நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்ல. இவளை எங்காவது கூட்டிட்டுப் போய் நல்லா வாழுடா" என்று தகுந்த சமயத்தில் சரியான உபதேசம் செய்யும் சித்தப்புவை முத்தழகுவிற்கு மட்டுமல்லாமல் நமக்கும் அப்போது பிடித்து விடும்.
'செவ்வாழ' என்பது நடிகர் சரவணனுக்கு ஒரு லைஃப் டைம் கேரக்ட்டர். இதற்காக அவர் இயக்குநர் அமீருக்கு காலம் முழுவதும் நன்றி சொல்ல வேண்டும் என்றாலும் தனக்கு தரப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டதில் சரவணனின் நடிப்புத்திறமைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அப்பாவின் அன்பிற்கு நிகராக, ஏன் பல சமயங்களில் அதையும் மீறி விடும் சித்தப்பாக்களின் பாசத்தை மிக அற்புதமாக வெளிப்படுத்திய 'செவ்வாழை'யை நம்மால் என்றும் மறக்க முடியாது.