மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சந்தானம் ஒரு கல் ஒரு கண்ணாடி
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | OKOK | ‘நவீன அம்பி’ பார்த்தாவாக சேஷ்டை செய்யும் சந்தானம்!

சுரேஷ் கண்ணன்

‘என்னது.. மறக்க முடியாத கேரக்டர்கள் வரிசையில் சந்தானமா?’ என்று ஒரு சிலர் நெருடலும் ஆச்சரியமும் அடையக்கூடும். திறமையையும் வித்தியாசத்தையும் கொண்ட நடிப்பு எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும். இன்று நின்றிருக்கும்  இடத்தை முட்டி மோதி அடைந்தவர் சந்தானம். ‘கவுன்ட்டர்’ அடித்து கலாயப்பதில் கவுண்டமணியை நகல் எடுப்பவர் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும் விரைவிலேயே தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு முன்னணி நகைச்சுவை நடிகராக ஆனவர். இப்போது ஹீரோவாக உயர்ந்திருக்கிறார்.

சந்தானம்

ஹீரோவின் நண்பனாக காமெடியன் இருப்பது நெடுங்கால மரபு. இந்த வகையில் தாமு, சார்லி, சின்னி ஜெயந்த், விவேக் போன்றவர்கள் முன்னோடிகள். அதே வழியில் வந்தவர்தான் சந்தானமும். என்னதான் ஹீரோவிற்கு நண்பன் என்றாலும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்கள் ஓடுவதற்கு இந்த காமெடியன்கள்தான் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. 

திரைப்படங்களின் வெற்றிக்கு காமெடியன்கள் முக்கியம்

‘பாபா’ படத்தின் தோல்விக்குப் பிறகு எப்படியாவது ஒரு வெற்றியை தந்தாக வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த ரஜினி, ‘சந்திரமுகி’ படம் திட்டமிடப்பட்ட போது ‘முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு சந்திரமுகி திரைப்படம் மெகா ஹிட் ஆனதில் வடிவேலுவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. 

ரஜினி, வடிவேலு

சந்தானமும் அப்படித்தான். பெரும்பாலான ஹீரோக்களின் படங்கள், சந்தானத்தின் திறமையான நகைச்சுவையால் ‘ஹிட்’ அடைந்தன. “சந்தானத்தை ஏன் எனக்கு ரொம்ப பிடிக்கும்னா.. டைரக்டர் சொல்லி தந்ததை மட்டும் வெச்சு நடிக்க மாட்டாரு. அவரும் அவரோட டீமும் இதுக்காக ரொம்ப மெனக்கெடுவாங்க. கதையோட ஒட்டி அவரோட காமெடி சீன்களையும் வசனங்களையும் சந்தானமே உக்காந்து எழுதுவாரு. இந்த டெடிகேஷன்தான் அவரோட வெற்றிக்கு காரணம்” என்று சுந்தர் சி சொல்லிருப்பதைப் போல பல இயக்குநர்கள் சந்தானத்தின் திறமையை வழிமொழிந்திருக்கிறார்கள். 

‘சந்தானத்தோட காமெடி ஒரே மாதிரியாத்தானே இருக்குது’ என்று விமர்சிப்பவர்கள், சற்று கவனித்தால் சில படங்களின் காரெக்டர்களை தனித்தன்மையான உடல்மொழியில் டிசைன் செய்திருப்பதைப் பார்க்க முடியும். ‘தனது காமெடிதான் ஹிட் ஆகிறதே.. அப்புறம் என்ன?’ என்று ஒரே பேட்டர்னை அவர் பின்பற்றுவதில்லை. ‘வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் தொடர்ந்து நிலைக்க முடியும்’ என்கிற வெற்றியின் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர் சந்தானம். 

சந்தானம்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் அப்படியொரு வித்தியாசமான கேரக்ட்டரை  சந்தானம் படைத்தின் மூலமாக ‘பார்த்தா’ என்கிற பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

பெரிய வரவேற்பைப் பெற்ற ‘பார்த்தா’வின் காரெக்டர்

இதன் பின்னணி பற்றி ஒரு நேர்காணலில் பேசிய சந்தானம், “ராம்குமார்ன்னு எனக்கொரு பிரெண்டு இருந்தான். ‘நேத்து எங்க வீட்ல பூசணிக்கா சாம்பார்.. ஒரே பார்ட்டிதான்’ன்னு சொல்லுவான்.. ‘பூசணிக்கா சாம்பார்ல என்ன பார்ட்டி’ன்னு எனக்கு வேடிக்கையா இருக்கும். ஒரு முறை என்னை ‘புடலங்காய்ன்னு’ அவன் திட்டிட்டான். அதைப் பார்த்த அவனோட அப்பா. ‘என்னடா.. பேட் வேர்ட்ஸ்லாம் பேசறேன்னு’  அவனைக் கண்டிச்சாரு. இதையெல்லாம் வெச்சுதான் ‘பார்த்தா’ என்கிற பார்த்தசாரதி கேரக்ட்டரை உருவாக்கினேன்” என்று விளக்கியிருந்தார் சந்தானம். ஒரு நடிகனுக்கு அப்சர்வேஷன் எத்தனை முக்கியம் என்பதற்கான உதாரணம் இது. 

சந்தானம்

சமர்த்துப் பிள்ளை போல இடது பக்கம் வகிடு எடுத்து படிய வாரப்பட்ட தலைமுடி, நெற்றியில் சந்தனப்பொட்டு, பிராமண வழக்கில் வாயைச் சுழித்துக் கொண்டு கொழகொழவென்று வசனம் பேசுகிற பாணி, விநோதமான கலர் காம்பினேஷனில் ஆடைகள், பயந்த சுபாவம், ஆனால் உசுப்பி விட்டால் வருகிற வீரம், நட்பிற்காக எதையும் செய்கிற தியாகம், அதில் ஏற்படும் துரோகத்தால் வரும் வேதனை என்று ஒரு ‘அம்பி’யின் பாத்திரத்தை ‘பார்த்தா’வின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சந்தானம்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடிதான்’ உதயநிதியின் அறிமுகத் திரைப்படம். ‘என்னை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு சந்தானத்தின் நகைச்சுவைதான் பெரிய உறுதுணையாக இருந்தது’ என்று இன்றைக்கும் நன்றி மறவாமல் சந்தானத்தைப் பாராட்டுகிறார் உதயநிதி. காமெடியன் என்றாலும் படம் முழுவதும் ஹீரோவின் கூடவே பயணப்படுவது மாதிரியாக நடிப்பதின் மூலம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது ‘பார்த்தா’தான். 

உதயநிதி, சந்தானம்

‘பார்த்தா’வின் வித்தியாசமான உடல்மொழி

தன்னுடைய காதலிக்கு பாண்டிச்சேரியில் திருமணம் என்பதை அறியும் சரவணன், அதைத் தடுத்து நிறுத்துவதற்காக தனது பால்யகாலத் தோழனான ‘பார்த்தா’ என்கிற பார்த்தசாரதியின் உதவியை நாடுகிறான். “நீ என்ன பண்றே.. உன் காரை எடுத்துக்கிட்டு வந்துடு. நாம பாண்டிச்சோி போறோம். பொண்ணைத் தூக்கறோம்” என்று சொல்லி வைத்து விடுகிறான். 

சாலையில் ஓர் ஆடம்பரமான கார் வருவது காட்டப்படுகிறது. அதில்தான் ஹீரோவின் நண்பன் வருகிறான் என்று பார்த்தால் இல்லை. திருமண ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு கார் பின்னால் வருகிறது. அதில் அமர்த்தலாக வருகிறான் பார்த்தா. இங்கு துவங்கும் சரவணன் + பார்ததா அலப்பறைகள் படம் முழுதும் நிறைந்திருக்கின்றன. 

“என்னது பொண்ணைத் தூக்கறதா.. சீர்வரிசைக்கு தர்ற கட்டில், பீரோவைக் கூட என்னால தூக்க முடியாது. மீசை வளர்ந்தா.. பெரிய பசங்க சண்டைக்கு கூப்பிடுவாங்கன்னுதான்.. மீசையே வளர்க்காம இருக்கேன்” என்று பம்முகிறான் பார்த்தா. தனது தோற்றத்தையே வசனத்திலும் பொருத்தமாகப் பயன்படுத்திக் கொண்டது சந்தானம் செய்த சுவாரசியம்.

சந்தானம், உதயநிதி

இன்ஸூரன்ஸ் பேப்பர் இல்லாமல் டிராஃபிக் போலிசிடம் மாட்டிக் கொள்ளும் சரவணன், ‘ஒரே போனு.. உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்’ என்று ‘மினிஸ்டருக்கு’ போனைப் போட, அப்படியாக நடிக்கும் பார்த்தா, “சொல்டா.. எந்த சிக்னல்ல மாட்டினே?” என்று கேட்பதன் மூலம் இவர்கள் இதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சட்டென்று தனது குரலை அதிகாரமான தொனியில் மாற்றிக் கொள்ளும் பார்த்தா ‘யோவ் இன்ஸ்பெக்டரு.. பெரிய இடத்து பசங்க கூட ஏன்யா பிரச்சனை பண்றே. இன்னும் ரெண்டு நிமிஷத்துல அவனை கிளியர் பண்ணு.. தேவையில்லாம என்னைக் கெட்ட வார்த்தை பேச வெச்சிடாத’ என்று பந்தா செய்கிறான் பார்த்தா. 

‘கோபால் கடைல வாத்து பிரியாணியா?”

இதற்குள் பார்த்தா இருக்கும் இடத்தை டிரேஸ் செய்து விடுகிறது காவல்துறை. இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில் மற்ற அக்யூஸ்களோடு ‘குத்த’ வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவன் வேகமாக அபானவாயுவை வெளிறே்ற மூக்கைப் பொத்திக் கொண்டாலும் “என்ன கோபால் கடைல வாத்து பிரியாணியா?” என்று கேட்கும் பார்த்தா, “எப்படி கண்டுபிடிச்சேன்.. பார்த்தியா?” என்று சரவணனைப்  பெருமையாகப் பார்க்கும் காட்சி ‘கலீஜாக’ இருந்தாலும் சுவாரசியமானது. ‘என்னய்யா.. அங்க குசுகுசுன்னு பேசிட்டிருக்கீங்க?’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க “அய்யா.. அது நான் இல்லைங்க.. இவன்தான் குசுகுசு” என்று மேலும் கவுன்ட்டர் அடிப்பான் பார்த்தா. 

உதயநிதி, சந்தானம்

“சார்.. இவன்தான் இந்த டெக்னிக்கை சொல்லிக் காெடுத்து ஏரியா பசங்களை கெடுத்து வெச்சிருக்கான். எனக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லி சரவணன் எஸ்கேப் ஆக முயல, “டேய். என்னதிது” என்று அவனுடைய கையோடு தன் கையைக் கோர்த்துக் கொள்வான் பார்த்தா. இது போன்ற சின்னச் சின்ன ரியாகஷன்களில் சந்தானம் அசத்தியிருப்பார். 

“இவன் நல்லா மிமிக்ரி பண்ணுவான் சார்” என்று சரவணன் கோர்த்து விட

“இன் அவர் அசோசியேஷன், ஆன் சிவராத்திரி  ஃபங்ஷன் டே, ஐ டூ மிமிக்ரி சார்.. அந்தப் பழக்கம் விட்டுடக்கூடாதுன்னுதான்” என்று கையைக் கட்டிக் கொண்டு கான்வென்ட் பிள்ளை மாதிரி ஆங்கிலம் கலந்து பேசுவான் பார்த்தா. அதிகாரத்தைப் பார்த்தால் தப்புத் தப்பாக ஆங்கிலம் கலந்து பேசி தன்னுடைய மதிப்பை ஏற்றிக் கொள்ள நினைப்பது மிடில்கிளாஸ்தனமான வழக்கம். 

உதயநிதி, சந்தானம்

பார்த்தாவின் மிமிக்ரி திறமையைப் பார்த்து வியந்து ரசித்து மகிழும் இன்ஸ்பெக்டர் விடிய விடிய அதைச் செய்யச் சொல்லி பார்த்தாவை டார்ச்சர் செய்வார். விடியற்காலையில் தூங்கி எழுந்திருக்கும் சரவணன், அழுது கதறிக் கொண்டிருக்கும் பார்த்தாவைப் பார்த்து “என்ன மச்சி.. அடுத்து சிவாஜி சார் வாய்ஸ் டிரை பண்றியா?” என்று கேட்பது அல்டிமேட் காமெடி. இருவரையும் மன்னித்து அனுப்பும் இன்ஸ்பெக்டர், பார்த்தாவை மட்டும் அழைத்து “என்னமோ ஒரு வார்த்தை வாய்ல நல்லா வந்துடும்னு சொன்னியே. என்னது அது?” என்று கேட்க “வேணாம் சார்..” என்று முதலில் வெட்கப்படும் பார்த்தா, பிறகு அந்த வார்த்தையை ஸ்பஷ்டமாகச் சொல்லி இன்ஸ்பெக்டரிடம் அறை வாங்குவான். 

‘அடை.. தேன் அடை.. ‘ - சப்புக் கொட்டி காதலிக்கும் பார்த்தா

சரவணன் காதலிக்க முயற்சிக்கும் பெண்ணின் வீட்டில், தங்களைக் கவனிக்காமல் இருக்கும் அம்மாவையும் பெண்ணையும் பார்த்து ‘மயிலாப்பூர் ஆங்கிலத்தில்’ பார்த்தா வசனம் பேசும் காட்சியும் ரகளையானது. தூக்கத்தில் கூட தன்னுடைய பெயரைச் சொல்லி அனத்தும் நண்பனின் நட்புணர்ச்சி பார்த்து உருகும் பார்த்தா, “நீ இன்னமும் சாகலியா?” என்று சரவணன் எழுந்ததும் தன்னைக் கேட்பதைப் பார்த்து திகைத்துப் போவது நல்ல நகைச்சுவையான காட்சி. 

உதயநிதி, சந்தானம்

சிக்னலில் தான் கலாய்த்த பெண், தன்னுடைய காதலில் புகுந்து சொதப்புவதைப் பார்த்து சரவணன் டென்ஷன் ஆகிறான். ‘அவர் சொல்லித்தான் செஞ்சேன்’ என்று அந்தப் பெண் சொல்ல, அந்த ‘அவர்’ யாரென்று பார்த்தால் பஜாஜ் கூட்டரில், மஞ்சள் பேண்ட், நீல நிற டிஷர்ட் என்று விநோதமான கலர் காம்பினேஷனில் அதிரடி பாடல் ஒலிக்க ஸ்டைலாக வருகிறான் பார்த்தா. பிறகு ஸ்கூட்டரை தடுமாறி நிறுத்தி விட்டு ‘செல்லக்குட்டி. அம்முக்குட்டி.. ஜாங்ரி. பூங்ரி’ என்று அந்தப் பெண்ணை செல்லம் கொஞ்சுவதைப் பார்த்து ‘இந்தப் பொண்ணு ஜாங்ரியா.. கர்மம்” என்று டென்ஷன் ஆகிறான் சரவணன். 

சந்தானம்

“என் லவ்ல தலையிடறதுக்கு நீ யார்ரா?” என்று சரவணன் டென்ஷனாக கேட்க “மச்சான். ஐ ஆம் யுவர் பார்த்தா” என்று இவன் சொல்ல, ‘போடாங்…’ என்று சரவணன் சொன்னவுடன் அவமானப்பட்டு பார்த்தா வாயை மூடிக் கொள்ளும் காட்சி சுவாரசியமானது. 

காதல் பிரேக் அப்பும் இந்தியப் பொருளாதாரமும்

காதலர்களை சோ்த்து வைக்கும் முயற்சியில் ‘சரவணன் டல்லா இருக்கறதால.. இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது. நிறைய தொழிலாளர்கள் பணியிழந்திருக்கிறார்கள்’ என்று சரவணனின் காதலியிடம் பார்த்தா விளக்கும் காட்சி வாய் விட்டு சிரிக்க வைப்பதாக இருக்கும். 

சந்தானம், உதயநிதி

“இந்தப் பொண்ணைப் போய் எப்புட்றா லவ் பண்ற?” என்று சரவணன் எரிச்சலுடன் கேட்க “என் ஆளுக்கு என்னடா குறைச்சல்.. தேன் அடை” என்று சப்புக் கொட்டிக் கொண்டே பார்த்தா சொல்வது மீம் உலகில் பிரபலமான அடையாளமாக மாறி விட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபடும் (?!) சரவணனைக் காப்பாற்றுவதற்காக பார்த்தா செய்யும் சாகசக் காட்சியும் சுவாரசியமானது.

“உன் முன்னாடியே என் காதலைக் கட் பண்றேன். நட்புதான் மச்சான் முக்கியம்” என்று சவால் விட்டு அழைத்துச் செல்லும் சரவணன், காதலியைக் கண்டதும் பிளேட்டை மாற்றிப் பேச ‘யார் யாரோ நண்பன் என்று’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க பார்த்தா செய்யும் சேஷ்டைகளுக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது. 

மதுமிதா, சந்தானம், உதயநிதி

காதலுக்கும் நட்பிற்கும் இடையில் பல்டியடித்துக் கொண்டேயிருப்பான் சரவணன். இதனால் முதலில் கோபப்பட்டாலும் பிறகு நட்பிற்காக எதையும் செய்யுத் துணியும் ‘பார்த்தா’ என்கிற நவீன அம்பியின் பாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார் சந்தானம்.