சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா கோப்புப்படம்
கோலிவுட் செய்திகள்

அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

எட்டாவது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா ஏற்று நடித்த கண்ணம்மா பற்றி பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

முதலாளி – தொழிலாளி உறவு என்பது ஒரு காலத்தில் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக வீடுகளில் பணிபுரியும் பெண்கள், ஏறத்தாழ அந்தக் குடும்பத்தின் உறவினர் போலவே இருந்துள்ளனர். அந்த வீட்டின் சுக, துக்கங்களை தன்னுடையதாகவே பாவி்ததுக் கொண்டிருந்துள்ளனர்.

குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் வீட்டுப் பணியாளர்கள்தான். இப்போதும் கூட அப்படிப்பட்ட பணியாளர்களைப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட விசுவாசமான பணியாளர்களின் ஒரு பிரதிநிதிதான், ‘கண்ணம்மா’
சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா

கண்ணம்மா!

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா நடித்த பாத்திரத்தின் பெயர் இது. கேட்டவுடனேயே ‘நீ கம்முனு கெட’ என்கிற வசனம் இந்நேரம் உங்களின் காதுகளில் தன்னிச்சையாக ஒலித்திருக்கும்தானே?! ஆயிரம் படங்களுக்கு மேலாக மனோரமா நடித்திருந்தாலும், சில திரைப்படங்களின் பாத்திரங்கள் மறக்கவே முடியாதபடி ஆகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘கண்ணம்மா’.

விசு எழுதிய நாடகமான ‘உறவுக்கு கை கொடுப்போம்’, 1975-ல் ஒ.ஜி.மகேந்திரனின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் வெற்றியடையவில்லை. பின்னர் விசு திரைப்படத்துறையில் நுழைந்து இயக்குநராக பின்பு இதே நாடகத்தை தன்னுடைய டைரக்ஷனில் மீண்டும் திரைப்படமாக்க முடிவு செய்தார். ஏற்கெனவே வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம், மீண்டும் அதே மொழியில் ரீமேக் செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் நடந்தது.

உறவுக்கு கை கொடுப்போம் Vs சம்சாரம் அது மின்சாரம் படம்

‘சம்சாரம் அது மின்சாரம்’ வெளியானது; மகத்தான வெற்றியை அடைந்தது. விசுவின் இயக்கமும் வசனமும் குறிப்பாக இதன் யதார்த்தமான கிளைமாக்ஸூம் மக்களைக் கவர்ந்தன.

இறுதிநேரத்தில்தான் கண்ணம்மா உருவானாராம்!

இந்தத் திரைப்படத்தில் ‘கண்ணம்மா’ என்கிற கதாபாத்திரமே முதலில் கிடையாது. தயாரிப்பாளரான சரவணன், ‘ரொம்பவும் சீரியஸாக போகிறதே. நகைச்சுவைப் பகுதியை இணையுங்கள்’ என்று இயக்குநரிடம் ஆலோசனை சொன்னார். ‘படத்தின் தீவிரம் பாதிக்கப்படலாம்’ என்று நினைத்து முதலில் தயங்கிய விசு, பின்னர் வீட்டின் பணியாளராக ‘கண்ணம்மா’ என்கிற பாத்திரத்தை உருவாக்கினார். இது படத்தின் சுவாரசியத்திற்கு மிகவும் பலமாக அமைந்தது.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா

அட்டகாச கவுண்ட்டர்களின் ராணி, கண்ணம்மா!

கண்ணம்மா அந்த வீட்டின் வேலைக்காரி மட்டுமல்ல. வீட்டிலுள்ள அனைவரிடமும் உரிமையாக கிண்டலடித்துப் பழகுகிறவர். நல்லதை எடுத்துச் சொல்கிறவர். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கிறவர். வீட்டில் உள்ளவர்களும் கண்ணம்மாவை பணியாளராகப் பார்க்காமல் தங்கள் வீட்டு உறுப்பினராகவே பார்க்கிறார்கள். கடைசியாக இணைக்கப்பட்ட பாத்திரம் என்பதால் சில காட்சிகளில் மட்டுமே மனோரமா வருவதைப் பார்க்க முடியும். ஆனால் தான் வந்த காட்சிகள் அனைத்தையும் முக்கியமானதாக மாற்றியது, மனோரமாவின் ரகளையான நடிப்பு.

அம்மையப்ப முதலியாரின் (விசு) மகளை பெண் பார்க்க ஒரு வரன் வருவதாக தரகர் சொல்லி விட்டுச் செல்வார். ‘மாடு மேய்ச்சாப்பலயும் ஆச்சு.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’ என்கிற பழமொழி போல, மகளின் பெண் பார்க்கும் வைபத்தை தன்னுடைய நாக்கு ருசிக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் விசு, தன் மனைவியிடம் ‘கோதாவரி.. நீ என்ன பண்றே... வரவங்க ஒவ்வொவருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி டேஸ்ட் இருக்கும். அதனால எல்லா பஜ்ஜிலயும் ஒவ்வொண்ணு பண்ணிடு. இந்த கேசரி இருக்கே கேசரி.. அதுல ரசகுல்லால இருந்து ஜீரா சொட்டற மாதிரி நெய் டக்கு டக்குன்னு சொட்டணும்” என்று வக்கணையாக லிஸ்ட் போட, கண்ணம்மா இடைமறிப்பார்.

சம்சாரம் அது மின்சாரம் படம்

“உடம்பு பூரா சர்க்கரை வியாதி.. ஈ மொய்ச்சிக்கிட்டு இருக்கு.. இதுல நெய் டக்கு டக்குன்னு விழணுமோ.. உடம்புல ஊசி எடுத்து குத்தினா காத்தா வெளில போகும்.. அவ்வளவு வாய்வு..  இதுல நாலு வகை பஜ்ஜி கேக்குதா.. ம்ஹூம்.. இதெல்லாம் வரவங்களுக்காக செய்யச் சொல்ற மாதிரி தெரியல... நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு இவர் சாப்பிடறதுக்கு” என்று கண்ணம்மா இடக்குப் பண்ண விசு டென்ஷன் ஆகி கண்ணம்மாவை ஜாலியாக கிணற்றில் தள்ளி விட முயல்வார். விசுவின் மனைவி கோதாவரியே சும்மா இருக்க வீட்டின் பணியாளரான கண்ணம்மாவின் கொடிதான் அங்கு பறக்கும். கண்ணம்மாவின் இத்தனை கிண்டலும் விசுவின் ஆரோக்கியம் மீதான அக்கறைதான். ‘டிகாக்ஷனை மாட்டுக்கே கொடுத்துட்டா நேரா கா.ஃபியா கறந்துக்கலாமே?’ என்று கண்ணம்மா தரும் கவுண்ட்டர் அட்டகாசம்.

பாசக்காரி!

மாமியார் கோதாவரியும் மருமகள் உமாவும் சமையல் அறையில் ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொண்டு அன்னியோன்யமாக பேசும் போது ‘யம்மா.. சட்டுன்னு உப்பு எடுத்து டப்புன்னு அடுப்புல போடு.. பட்டு பட்டுன்னு வெடிக்கட்டும். மாமியாரும் மருமகளும் உறவாடறதைப் பார்த்தா என் கண்ணே பட்டுடும் போலிருக்கு’ என்று திருஷ்டி கழிப்பார் கண்ணம்மா. அந்த வீட்டின் மீதுள்ளவர்களின் பாசம் அந்த நெகிழ்ச்சியில் தென்படும்.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா, விசு

இதற்குப் பிறகு நீண்ட நேரத்திற்கு கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சியே படத்தில் வராது. ‘கோதாவரி.. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்று மகனுடன் சண்டையிட்டு அம்மையப்ப முதலியார் டென்ஷன் ஆகி வீட்டைப் பிரித்து விடுவார். குழந்தை பெற்று வரும் மருமகளை வரவேற்பதற்கு கூட ஆள் இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் மருமகள் கிணற்றில் நீர் எடுக்க முயலும் போது பாய்ந்து வரும் கண்ணம்மா.. ‘உமாம்மா.. நான் எடுக்கறம்மா’ என்று வேலை செய்ய முயல்வார். ‘விடு.. கண்ணம்மா.. என்னை மாதிரி அநாதைகளுக்கு யார் இருக்கிறா?” என்று உமா வேதனையுடன் சொல்ல, அருகிலிருக்கும் மாமியார் துடித்து விடுவார். இதுதான் அந்த வீட்டை ஒன்றிணைக்க உமா ஏவும் முதல் சென்டிமென்ட் ஆயுதம்.

அற்புத நடிப்புக்கு சொந்தக்காரர்!

அடுத்து வருவது ஒரு சுவாரசியமான காட்சி. குழந்தை பெற்று வந்திருக்கும் மருமகளுக்காக, லேகியம் கிண்டி தருவார் மாமியார். அதைக் கொண்டு செல்லும் கண்ணம்மா, அதை தான் கிண்டியதாக சொல்வார். குடும்பம் பிரிந்திருப்பதால் நேரடியாக தர முடியாது. ‘இந்தப் பாத்திரம் எங்க மாமியாருடையது மாதிரி இருக்கே?’ என்று உமா குசும்பாக கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பார் கண்ணம்மா.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா, லட்சுமி

“சரி இதுல.. என்னெல்லாம் போட்டே?” என்று அடுத்த கிடுக்குப்பிடி கேள்வியை உமா கேட்க கண்ணம்மா விழிப்பதே நகைச்சுவையாக இருக்கும். “ம்.. வந்து.. சேமியா... மைதா மாவு.. அப்புறம் பயத்தம்பருப்பு’.. என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்ல ‘புண்ணாக்கு...?’ என்று உமா இடக்காக கேட்க “ஆமாம்..” என்று தவறுதலாக சொல்லி விடும் கண்ணம்மாவிற்கு உமா கண்டுபிடித்து விட்டார் என்பது அப்போதுதான் புரியும். நாக்கைக் கடித்துக் கொள்வார். இந்தக் காட்சியில் லட்சுமி மற்றும் மனோரமாவின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

“ஆல்பர்ட்டு பெர்டான்டஸ்ஸை ஒரே கிழி”

அடுத்து வருவதுதான் அந்தப் புகழ் பெற்ற ‘நீ கம்முனு கெட’ காட்சி. வீட்டில் உள்ள பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க ஆரம்பிக்கும் மூத்த மருமகளான உமா, முதலில் தன்னுடைய கணவனை விட்டு வந்திருக்கும் சரோஜா பிரச்சினையை கையில் எடுப்பார். சரோஜாவின் மாமனாரை நேரடியாக சந்திக்கும் உமா, தன்னுடைய டிராமா திட்டத்தைக் கூட அவரும் ஒப்புக் கொள்வார். ‘சரிம்மா.. நல்ல காரியத்துக்காக பண்றே.. எனக்கு எதிரா உங்க வீட்டுல சண்டை போடப் போறது யாரு?” என்று அவர் கேட்க, கட் செய்தால் அடுத்த காட்சியில் கண்ணம்மாவை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வற்புறுத்துவார் உமா.

‘அய்யய்யோ.. அவரு வீட்டு சம்பந்திம்மா. பெரிய இடம்.. அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கும். அவர் கிட்ட போய்.. எப்படி?’ என்று கண்ணம்மா தயங்க ‘இந்த வீடு நல்லாயிருக்கணுமா. வேண்டாமா?’ என்று உமா சென்டியாக கேட்க “சரிம்மா” என்று ஒப்புக் கொள்வார். பிறகு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு “நீ டயலாக் பேப்பரை கொடு. அந்த ஆல்பர்ட்டு பெர்டான்டஸ்ஸை ஒரே கிழி” என்று உற்சாகத்துடன் ரெடியாகி விடுவார்.

அதன் பிறகு நடப்பதுதான் ரகளையான காட்சி. சரோஜாவின் மாமனாராக நடித்திருக்கும் கிஷ்மு வீட்டின் உள்ளே நுழைய, அவரைப் பயத்துடன் கும்பிடு போட்டு விட்டு “பேசுங்க..” என்று சைகை செய்வார் கண்ணம்மா. ‘இவரை எதிர்த்து சண்டை போடுவதா?’ என்கிற தயக்கம் கண்ணம்மாவிற்குள் ஆரம்பத்தில் இருந்தாலும் பிறகு அடித்து இறங்கி விளையாடுவார்.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா, கிஷ்மு

“எங்க பொண்ணு.. நைட்டு பதினோரு மணிக்கு வரும்.. பன்னிரெண்டு மணிக்கு வரும்.. சில நாளு வரவே வராது.. அது எங்க பொம்மனாட்டி சுதந்திரம்.. அதுக்குப் போய் நீ என்னமோ கேள்வி கேட்டுக்கினாயாமே.. எங்க பொண்ணுக்கு நான்தான் வக்கீலு.. நீ மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா, நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கற ஆம்பளையா இருந்தா விவாகரத்து பேப்பரைக் கொண்டா.. கையெழுத்து போட்டுத் தரோம்” என்று சரமாரியாக அடித்து விளாசும் காட்சியில் மனோரமாவின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கும்.

தங்கள் வீட்டு சம்பந்தியை கண்ணம்மா கிழித்து தோரணம் கட்டுவதைப் பார்த்து சரோஜாவும் கோதாவரியும் ‘கண்ணம்மா’ என்று அழைத்து ஆட்சேபம் தெரிவிக்க முயல ‘நீ கம்முனு கெட’ என்று மனோரமா சொல்லும் ஸ்டைலே அத்தனை ரகளையாக இருக்கும்.

டயலாக்கில் இல்லாத வசனத்தையெல்லாம் இணைத்து “இந்த மீசைக்காரனுக்காச்சு.. எனக்காச்சு.. மரமண்டை, கௌவன்..” என்றேல்லாம் கண்ணம்மா அடித்து விட ‘என்னம்மா இது?’ என்பது மாதிரி இந்த நாடகத்தின் டைரக்டரான உமாவை பரிதாபமாகப் பார்ப்பார் கிஷ்மு. ‘அட்ஜட்ஸ் பண்ணிக்கங்க சார்’ என்று ரகசியமாக கெஞ்சுவார் உமா. கண்ணம்மாவால் கிழிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் ஆல்பர்ட் பெர்னான்டஸ், ஜன்னலின் பின்னால் ஒளிந்திருக்கும் உமாவிடம் ‘கண்ணம்மா பிச்சிட்டா’ என்று பாராட்டி விட்டுச் செல்வார். ‘சும்மாவா சார்.. 25 வருஷமா நடிச்சிட்டு இருக்கா.. அவ வீட்டுகிட்ட நடக்கற தெருக்கூத்துல’ என்று உமா படத்தில் பாராட்டுவது நிஜமான மனோரமாவின் சாதனையைப் பற்றியது.

மினி கிளைமாக்ஸ்!

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் முதுகெலும்பே இதன் வித்தியாசமான கிளைமாக்ஸ். அதுவரையான குடும்பச் சித்திரங்களில் வரும் வழக்கமான கிளைமாக்ஸை தவிர்த்து விட்டு முற்றிலும் யதார்த்தமானதொரு முடிவைத் தந்ததற்காக விசுவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த கிளைமாக்ஸிற்கு முந்தைய காட்சியில் ஒரு ‘மினி கிளைமாக்ஸ்’ வரும். படத்தின் முக்கியமான திருப்பங்களில் அதுவும் ஒன்று. அதில் அருமையாக நடித்திருந்தார் மனோரமா. அம்மையப்ப முதலியார் தன்னுடைய பிடிவாதத்தை உதறி தன் மகனை மன்னிப்பதற்கு இந்தக் காட்சிதான் அடிப்படையாக இருக்கும்.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா, விசு

அதற்கு முன்னால் இந்தக் காட்சி தொடர்பான ஒரு பின்னணித் தகவலை பார்த்து விடுவோம். மிக சுவாரசியமானது அது. ‘பணத்தை திருப்பித் தந்தாச்சு.. அந்தக் குடும்பத்தை வீட்டை விட்டு போகச் சொல்லு. அது வரைக்கும் நான் கோவில்ல வெயிட் பண்றேன்’ என்று சொல்லி விட்டு கிளம்புவார் விசு. பிறகு மூத்த மருமகளான லட்சுமி, தன் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று மாமனாரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதாகத்தான் விசு முதலில் திரைக்கதையை அமைத்திருந்தார்.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா

நாளைக்கு படப்பிடிப்பு என்னும் போது விசுவிற்கு திடீரென்று மூளையில் ஒரு மின்னல் அடித்தது. ‘இந்த சீனில் ஏதோவொரு லாஜிக் சரியாக இல்லையே?’.. யெஸ்.. இதற்கு அடுத்த காட்சியில் அதே மருமகள்தான் வீட்டை விட்டு பிரிந்து போகப் போகிறார்.. எனில் அவரே குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சென்டிமென்ட் பேசி வீட்டை ஒன்றாக்கினால் சரியாக வருமா? இல்லை சரியாக வராது. எனவே இதற்கான மாற்று ஐடியாவை யோசித்தார். தீர்மானித்து விட்டார்.

அதற்கு முன் லட்சுமியிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இது அவர் நடிக்க வேண்டிய காட்சி.  தான் செய்திருக்கும் மாற்றத்தை லாஜிக் காரணத்துடன் லட்சுமிக்கு போனில் விளக்கிச் சொல்கிறார் விசு. லட்சுமிக்கு இது உடனே புரிந்து விட்டது. “அப்படின்னா... கோயிலுக்கு போகப் போற கேரெக்ட்டர் யாரு?’ என்று கேட்ட லட்சுமி. அடுத்த நொடி அவரே சரியாக யூகித்து ‘அப்ப மனோரமாவா.. அடிச்சது லக்கி பிரைஸ் அய்யோ.. பிச்சுடுவாரே..’ என்று பாராட்டியிருக்கிறார். விசு அதைச் சொல்வதற்கு முன்பே யூகித்தது லட்சுமியின் புத்திசாலித்தனத்தை மட்டும் காட்டவில்லை, தான் நடிக்கும் படத்தின் கதையில் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் காட்டுகிறது.

சம்சாரம் அது மின்சாரம் படம் - மனோரமா, லட்சுமி

இன்னொரு படப்பிடிப்பில் இருந்த மனோரமாவை அவசரமாக வரவழைத்து இந்தக் காட்சியை படம் பிடித்தார்கள். குறுகிய அவகாசமே இருந்தாலும் சட்டென்று அந்தக் காட்சிக்குள் புகுந்து பட்டையைக் கிளப்பி விட்டார் மனோரமா. லட்சுமியின் மொழியில் சொன்னால் ‘பிச்சு உதறிட்டாங்க’

“மல்லு கட்டற வயசு 25, மன்னிக்கிற வயசு..65”

கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் விசுவின் காலடியில் குழந்தையைப் போட்டு விட்டு “அவங்க வீட்டு பொருளை எல்லாம் அவங்க எடுத்துட்டுப் போயிடுவாங்க. இந்தக் குழந்தை யாரோட பொருள்? பேரன்தான் தாத்தாவோட நெஞ்சில் எட்டி உதைப்பான். நீங்கதான் வித்தியாசமான தாத்தாவாச்சே.. பேரனோட நெஞ்சில் எட்டி உதைக்கறீங்க.. மல்லு கட்டற வயசு 25, மன்னிக்கிற வயசு..65.. என்ன பண்ணப் போறீங்க?’ என்று முடிவை விசுவிடம் விட்டு கிளம்பி விடுவார். வீட்டின் கோடு மறைந்து குடும்பம் ஒன்றிணைந்ததும் லட்சுமி ஆரம்பிக்கும் புதிய டிவிஸ்ட்டைக் கேட்டு ‘உமாம்மா.. வெண்ணை வர்ற நேரத்துல தாழியை உடைக்கறியே.. இந்தக் குடும்பம் சேர்றதுக்குத்தானே நீதானே இவ்வளவு பாடுபட்டே?’ என்று கண்ணம்மா பதறி விடுவார்.

‘இப்படியொரு பணியாளர் நமக்கு கிடைக்கமாட்டாரா’ என்று ஒவ்வொரு வீட்டிலும் நினைக்கும் அளவிற்கு பாசம், நெகிழ்ச்சி, துணிச்சல், நகைச்சுவை என்று அனைத்தையும் கலந்து கட்டி அடித்த ‘கண்ணம்மாவை’ மறக்கவே முடியாது.