சுரேஷ் - சாந்தி கிருஷ்ணா - பிரதாப் போத்தன் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்
கோலிவுட் செய்திகள்

“நின்னு ஜெயிக்கறதுதான் பெருமை” - பாசிட்டிவ்வான பாதையை மாணவர்களுக்கு சொன்ன நல்லாசிரியர் ‘பிரேம்’!

11-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பிரதாப் போத்தன் ஏற்று நடித்த பிரேம் பற்றி பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

பொதுவாக ஆசிரியர்களை கேலிக்குரியவர்களாக, மலினமாக சித்தரிப்பதே தமிழ் சினிமாவின் வழக்கம். அதிலும் தமிழாசிரியர் என்றால் கேட்கவே வேண்டாம். ஒருசில அரிதான திரைப்படங்கள்தான் கண்ணியமான முறையில் ஆசிரியர்களைக் காட்டியிருக்கிறது. அந்த வரிசையில் ஒரு நல்லாசிரியரை சித்தரித்த படம், பன்னீர் புஷ்பங்கள். பிரேம் என்கிற ஆசிரியர் பாத்திரத்தில் நடித்தவர் பிரதாப் போத்தன்.

பிரதாப் போத்தன்

பதின்ம வயதுக் காதலை இன்று வரைக்கும் கூட தமிழ்த் திரைப்படங்கள் ரொமான்டிசைஸ் செய்து கொண்டிருக்கின்றன. முதிராத வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பும் இளையதலைமுறைக்கு இவ்வகையான திரைப்படங்கள் தவறான திசையைக் காட்டுகின்றன. ஒரு கூட்டம் தீப்பந்தத்துடன் துரத்த, இளம் காதலர்கள் சூரிய உதயத்தின் பின்னணியில் ஊரை விட்டு ஓடுவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எவ்வாறெல்லாம் நடுத்தெருவில் லோல்படுவார்கள்? அந்த யதார்ததத்தை பெரும்பாலான சினிமாக்கள் காட்டுவதில்லை. பார்வையாளர்களுக்கும் அது பற்றி அக்கறையில்லை.

கண்ணியமான ஆசிரியராக பிரதாப் போத்தன்

இப்படியொரு சூழலில், பதின்ம வயதில் ஏற்படும் Infatuation-ஐ கரிசனத்தோடும் இளம் தலைமுறையின் மீதுள்ள உண்மையான அக்கறையோடும் இந்தப் படம் எண்பதுகளின் காலக்கட்டத்திலேயே பேசியிருக்கிறது. ஆசிரியரின் பாத்திரம் வழியாக இந்தச் செய்தி சரியான விதத்தில் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

பிரதாப் போத்தன் என்றவுடன் அவர் சைக்கோத்தனமான, கிறுக்குத்தனமான பாத்திரங்களில் நடித்தவர் என்பது மாதிரியான பொது சித்திரம் நமக்குள் சட்டென்று தோன்றக்கூடும். மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு என்று அவ்வகையான சில பாத்திரங்களில் அவர் நடித்தது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி விதம் விதமான பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு, ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அசட்டுத்தனமான ஒரு மிடில் கிளாஸ் கணவனின் பாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்திருந்தார். என்றாலும் அவர் கோணங்கித்தனமாக நடித்தது மட்டுமே முதலில் நினைவிற்கு வருகிறது.

தடித்த கண்ணாடி, ஸ்டெப் கட்டிங் சிகையலங்காரம், அறிவுஜீவிக்களை ஒரு ‘எலைட்’ லுக்கில் இருக்கும் பிரதாப் போத்தன், ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தார்.

பிரேம் – பிரபு – பாத்திரங்களுக்கான பெயர்க் காரணம்

இந்தத் திரைப்படத்தில் பிரதாப் அறிமுகமாகும் காட்சியே சுவாரசியமாக இருக்கும். மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு மேல்தட்டு பள்ளிக்கூடம். அங்கு ஆசிரியர் பணியில் இணைவதற்காக புதிதாக வருகிறார் பிரதாப். அவருடைய பாத்திரத்தின் பெயர் பிரேம்.  இந்தப் படத்தின் டீன்ஏஜ் ஹீரோ சுரேஷ். அவருடைய பாத்திரத்தின் பெயர் பிரபு.

பிரதாப் போத்தன்

இங்கு இடைச்செருகலாக ஒரு தகவல். பிரேம், பிரபு என்கிற இந்த இரண்டு பாத்திரங்களும் கங்கை அமரனுடைய மகன்களின் பெயர்கள். (வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி). படம் துவங்கி தொடர்வதற்கு கங்கை அமரன் மிகப்பெரிய உறுதுணையாக இருந்ததால் அவரது மகன்களின் பெயர்களை பாத்திரங்களுக்கு சூட்டி விட்டனர், இந்தப் படத்தின் இயக்குநர்களான பாரதி – வாசு. (சந்தான பாரதி, P.வாசு). எனவே ஆசிரியரை பிரேம் என்றும் மாணவனை பிரபு என்றும் குறிப்பிட்டு கட்டுரையைத் தொடர்வோம்.

புதிய ஆசிரியரான பிரேம் வருகிறார். வழியில் பிரபு உள்ளிட்ட மாணவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ‘உன்னால இதே இடத்துல உக்காந்து பத்து ரூவா சம்பாதிக்க முடியுமா?’ என்று சக மாணவனுக்கு சவால் விடுகிறான் பிரபு. அந்த நண்பனும் இந்தச் சவாலை ஏற்கிறான். “அதோ ஒரு பேக்கு வருது. அது கிட்ட டிரை பண்ணு” என்று பிரபு சொன்னதும், அந்த மாணவன் ஆசிரியரை அணுகி  “சார்.. பத்து ரூபாய்க்கு சில்லறை இருக்கா?” என்று கேட்டு சில்லறையை வாங்கி விட்டு அமைதியாக திரும்ப “தம்பி.. நான் சில்லறை கொடுத்துட்டேன்.. நீ நோட்டு தரலையே?” என்று பிரேம் கேட்க “இப்பத்தானே கொடுத்தேன்.. என்ன சார்.. சின்னப்பையனை ஏமாத்தறீங்களே?” என்று அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல, மற்ற மாணவர்களும் அதற்கு தாளம் போடுகிறார்கள். ‘ஓஹோ.. அப்படியா சங்கதி?’ என்று அவரும் சென்று விடுகிறார்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

மறுநாள் வகுப்பிற்கு புதிதாக வரும் ஆசிரியர் யார் என்கிற ஆவலில் மாணவர்கள் காத்திருக்கும் போது உள்ளே நுழைபவர் பிரேம். பிரபுவின் கேங் திருட்டு முழி முழிக்கிறது. “தம்பி.. பத்து ரூவாக்கு சேஞ்ச் இருக்கா.. ஓகே. நான் நோட்டு கொடுத்துட்டேன்ல” என்று ஏமாற்றப்பட்ட பணத்தை சாமர்த்தியமாக திரும்ப வாங்கி விடுகிறார் பிரேம். பார்ப்பதற்கு ‘ஒரு மாதிரியாக’ இருந்தாலும் ஆசிரியர் அத்தனை முட்டாள் அல்ல என்பதை நிரூபிக்கும் காட்சி இது. அது மட்டுமல்லாமல் பிரேமிற்கும் பிரபுவிற்கும் இடையே ஒரு கசப்பான புள்ளி ஆரம்பிப்பதை நிறுவும் காட்சியும் கூட.

பிரபுவின் பொசசிவ்னஸ் – அதனால் ஏற்படும் விரோதம்

அதே பள்ளியில் படிக்கும் உமாவின் மீது பிரபுவிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.  உமாவின் பாத்திரத்தில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கை. ‘பன்னீர் புஷ்பங்கள்’தான் தமிழில் அவர் அறிமுகமான படம். அவர் மட்டுமல்ல சுரேஷ் அறிமுகமான படமும் இதுதான். முதலில் மோதலும் பிறகு நட்பும் ஈர்ப்புமாக உமாவும் பிரபுவும் பழக ஆரம்பிக்கிறார்கள்.

சுரேஷ் - சாந்தி கிருஷ்ணா

இந்தச் சமயத்தில்தான் ஆசிரியர் பிரேமின் என்டரி நடக்கிறது. உமாவின் வீட்டில் உள்ள அவுட்ஹவுஸில் அவர் தங்குகிறார். எனவே பள்ளிக்கு வரும் போதும் கிளம்பும் போதும் உமாவுடன் பயணிக்கிறார். இதனால் உமாவுடன் பழகக்கூடிய நேரங்கள் பிரபுவிற்கு கணிசமாக குறைகின்றன. தன்னுடைய ‘காதலுக்கு’ தடையாக இருக்கும் பிரேமின் மீது கோபமும் பொறாமையும் பிரபுவிற்கு வருகிறது.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

‘இந்த வானரப் பசங்க எப்படி சார் உங்க கிட்ட மட்டும் மரியாதையா நடந்துக்கறாங்க?” என்று சக ஆசிரியர் பிரேமிடம் வியப்பாக கேட்கிறார். கட் செய்தால் இரண்டு காட்சிகள் வருகின்றன.

வகுப்பில் பேசும் மாணவர்களை ‘கெட்அவுட்’ என்று கேள்வி கேட்ட ஆசிரியர் வெளியே துரத்த ‘யாரந்த ஜென்டில்மேன் பேசிட்டு இருக்கறது..? நீங்க பேசி முடிக்கற வரைக்கும் நான் பாடத்தை நிறுத்தறேன்” என்பதாக பிரேமின் அணுகுமுறை இருக்கிறது. “வீட்டுப் பாடம் செய்யலையா.. கையை நீட்டு” என்று பிரம்பால் அடிக்கிறார் அந்த ஆசிரியர். ஆனால் பிரேமோ “கிளாஸ் முடிஞ்சப்புறம் நீங்க ஹோம்ஒர்க் முடிச்சுட்டுதான் கிளம்பணும். உங்க கூட நானும் இருக்கேன்” என்று கண்டிப்பு காட்டும் அதே சமயத்தில் கரிசனமும் காட்டுகிறார்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

“ஸ்டூடண்ட்ஸ் கிட்ட விவகாரம் வரலாம். விரோதம் வரக்கூடாது. கையை ஓங்கலாம். ஆனா அதுவே அடியா விழக்கூடாது. கத்திப் பேசலாம். ஆனா வார்த்தைல விஷம் இருக்கக்கூடாது. எல்லாத்துக்கும் மேல நாம சொல்லிக் கொடுக்கற பாடத்துல நமக்கே சந்தேகம் இருக்கக்கூடாது” என்று பிரேம் சொல்லச் சொல்ல சந்தேகம் கேட்ட ஆசிரியர் பிரமிப்புடன் பார்க்கிறார்.

உளவியல் ரீதியாக மாணவர்களை அணுகும் ஆசிரியர்

உமா தன்னிடமிருந்து விலகி, ஆசிரியருடன் இருப்பதால் சோகமாக இருக்கிறான் பிரபு. “அவ உண்மையா உன்ன விரும்பறான்னா டியூஷன் படிக்கும் போது கையைப் பிடிச்சு இழுத்துரு..” என்று சக மாணவர்கள் கோளாறாக ஐடியா சொல்கிறார்கள். இந்தச் செயலை எதிர்பாராத உமா, ஆத்திரம் அடைந்து பிரபுவின் கன்னத்தில் அடித்து விடுகிறாள்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

மனஉளைச்சலுக்கு ஆளாகும் பிரபு, பள்ளியில் முரட்டுத்தனமான செயல்களைச் செய்கிறான். நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகிறான். மற்ற ஆசிரியர்கள் பிரபுவின் மீது கோபமாக புகார் செய்கிறார்கள்.

“பிரபுவை ஸ்கூலை விட்டு அனுப்பிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். அவனோட கிளாஸ் மாஸ்டரா உங்க ஒப்பினியன் என்ன?” என்று பிரேமிடம் பிரின்ஸிபல் கேட்கிறார். “என் அனுபவத்துல பிரபு ஒரு நல்ல ஸ்டூடண்ட். தப்பு செய்யற பையன்தான். ஆனா திருத்த முடியாத முரடன் இல்ல.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

அவனோட பிரச்சினை என்னன்னு தெரியாம தண்டனை தர்றது சரியில்ல. அவன் ஒரு கஷ்டமான பருவத்தைத் தாண்டிட்டு இருக்கான். அடலசன்ஸ் பீரியட் சிலருக்கு ஈஸியா இருக்கும். சிலருக்கு கஷ்டமா இருக்கும். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. நான் பேசிப் பார்க்கறேன்” என்கிறார் பிரேம். ஓர் ஆசிரியர், வளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களை எப்படி கரிசனத்துடன் அணுக வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.  

பிரேம், பிரபுவைச் சந்தித்து ‘என்னதான் உன் பிரச்சினை?’ என்று பேச முயலும் போது, “நீங்கதான் என் பிரச்சினை. இத்தனை நாள் என்னோட பழகிட்டு இருந்த உமா இப்ப என்னை விட்டுப் பிரிஞ்சிட்டா” என்று கோபமாகப் பேசி அவரை அவமானப்படுத்துகிறான் பிரபு. உமாவுடன் பிரேம் ஒன்றாக இருப்பதை மலினமாக குறிப்பிட்டு ஆட்சேபிக்கிறான். என்றாலும் பிரேம் தனது நிதானத்தை இழப்பதில்லை.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

“லுக். பிரபு.. இந்த வயசுல பார்த்து தெரிஞ்சுக்கற விஷயங்களை விட விட்டு விலக வேண்டிய விஷயங்கள்தான் அதிகம். உமாவோ நானோ உனக்கு பிரச்சினை இல்ல. உன் எண்ணங்கள்தான் பிரச்சினை. நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே. உமா என் ஸ்டூடண்ட். அவ்வளவுதான். என்னை மாதிரி ஆகணும்னு நெனக்காதே. உனக்குள்ள ஒரிஜினல் திறமைகள் இருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடி. you should be original.’ என்று அறிவுறுத்துகிறார்.

பெற்றோர்களின் மிகையான கண்டிப்பினால் நிகழும் கோளாறு

தான் சந்தேகப்பட்டது போல் எதுவுமில்லை என்பது பிரபுவிற்கு புரிந்ததும் மகிழ்ச்சியடைந்து படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். மாணவர்களின் பிரச்சினைகளுக்காக முன்னே நின்று போராடுகிறான். இது தொடர்பாக உமாவும் பிரபுவும் பழையபடி ஒன்றாகப் பழகத் துவங்குகிறார்கள்.

‘உமா... பிரபு.. காதல்..’ என்று ஒரு மாணவன் குறும்பாக பள்ளிச் சுவர்களில் எழுதி வைக்க அந்த வதந்தி பள்ளி முழுவதும் மட்டுமல்லாது, உமாவின் வீட்டிற்குள்ளும் தீயாகப் பரவுகிறது.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

இதனால் உமாவின் அம்மாவிற்கு கவலை ஏற்பட்டு பிரேமிடம் இது பற்றி விசாரிக்கிறார்.

“ஒண்ணும் தெரியாத சின்னப்பசங்க மீது வீண் பழி போட்டு நாமளே அவங்களை பெரிய மனுஷங்க ஆக்கிடக்கூடாது. அவங்க வெறும் நண்பர்கள். அவ்வளவுதான். என் ஸ்டூண்ட் பத்தி எனக்குத் தெரியும். அவங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று தன்னுடைய மாணவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார் பிரேம்.

என்றாலும் தன்னுடைய தாயின் தொடர்ந்த கண்டிப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாக “நீங்க கண்டிக்கறதாலதான் எனக்கு பிரபுவைப் பார்க்கணும் போல இருக்கு. அவனோட பழகணும் போல இருக்கு” என்று தன் தாயிடம் கோபத்தில் கத்துகிறாள் உமா.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

மாணவர்களின் காதல் வதந்தி பள்ளி நிர்வாகத்திற்கு எட்டுகிறது. பிரபுவை பள்ளியில் இருந்து வெளியேற்றலாம் என்று முடிவு செய்கிறார் பிரின்ஸிபல். “பிரபுவை டிஸ்மிஸ் பண்ணாதீங்க.. குற்றவாளிகளை நாமதான் உருவாக்கறோம்.. ஒரு சின்னப்பையனோட வாழ்க்கையை அழிச்சிடாதீங்க.. இதே உங்க பையனா இருந்தா.. இதைச் செய்வீங்களா.. பிரபுவோட பெயரை எடுக்கறதா இருந்தா, என்னோட பேரையும் டீச்சர் லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க.. நான்..ரிசைன் பண்றேன். குட்பை.” என்று தனது பணியை ராஜினாமா செய்து விட்டு ரயிலில் கிளம்புகிறார் பிரேம்.

பெரியவர்கள் தங்களைப் பிரித்து விடுவார்கள் என்று எண்ணுகிற பிரபு, ‘எங்காவது போய் விடலாம்’ என்று உமாவை அழைக்கிறான். பெற்றோரின் மிகையான கண்டிப்பு காரணமாக கோபத்தில் இருக்கும் உமாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

நண்பர்களின் உதவியுடன் இருவரும் ரயிலில் ஏறி பயணிக்கிறார்கள். எதிர் இருக்கையில் தங்களின் ஆசிரியர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து எழுந்து நிற்கிறார்கள். பிரேமிற்கும் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆசிரியரின் அற்புதமான அட்வைஸ்

“நான் ஏன் இந்த டிரையின்ல போயிட்டு இருக்கேன்னு தெரியுமா...? உங்களாலதான். பாசஞ்சரா போக வேண்டிய என்னை பைத்தியக்காரனா அனுப்பறீங்க. உன் துணிச்சலைப் பாராட்டறேன்.. பிரபு.. ஆனா.. நாலு பேரு உன்னை அடிச்சுப் போட்டுட்டு இந்தப் பொண்ணை தூக்கிட்டுப் போனா என்ன பண்ணுவே? உன்னால காப்பாத்த முடியுமா? நாலு பேருக்குத் தெரியாம ஓடறதுல இல்ல பெருமை.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

நின்னு ஜெயிக்கறதுதான் பெருமை. உங்க உணர்வுகள் புரியுது. ஆனா இப்ப அதுக்கான நேரம் கிடையாது. அந்த நேரம் வரும். ஒண்ணாகலாம். நிச்சயமா இப்ப இல்ல” என்று இருவருக்கும் தகுந்த உபதேசத்தைச் சொல்லி திரும்ப அழைத்து வருகிறார். இவர்களைத் தேடி பதட்டத்துடன் காத்திருக்கும் பெற்றோர்கள் நிம்மதியாக புன்னகைக்கும் காட்சியோடு படம் நிறைகிறது.

பதின்ம வயதில் ஓர் ஆணும் பெண்ணும் இயல்பாகப் பழகுவதை காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு மிகையான கண்டிப்பைக் காட்டினால் அவர்கள் உண்மையிலேயே காதலில் விழுவார்கள். மாறாக அவர்களுக்கு இதமாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம்

அப்படியொரு பாசிட்டிவ்வான பாதையை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன பிரேம் என்கிற ஆசிரியரின் பாத்திரம் மறக்க முடியாதது. இந்தப் பாத்திரத்தை அற்புதமாக கையாண்ட பிரதாப் போத்தனையும் மறக்க முடியாது.