கமல், நாகேஷ் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘மைக்கேல் மதன காமராஜன்’ நாகேஷ்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் ‘நாகேஷ்’ ஏற்று நடித்திருந்த ‘அவினாஷி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

“பார்றா.. பார்றா… அவனை..  எப்படி நடிக்கறான்… பார்.. அவன் நடிக்கறதுல பத்து பர்செண்ட் நீ நடிச்சா கூட போதும். முன்னுக்கு வந்துடலாம்..” - இந்த மாதிரியான புகழுரைகளையும் ஒப்பீட்டையும் கேட்டு கேட்டு கமல்ஹாசனுக்கு காது புளித்திருக்கும். காது புளித்தது மட்டுமல்ல, அதிலிருந்து புகையே வந்திருக்கும்.

இயக்குநர் பாலசந்தரால் பட்டை தீட்டப்பட்டவர் கமல் என்பது நமக்குத் தெரியும். இளம் நடிகராக பாலசந்தரிடம் அவர் பணியாற்றிய போது ஒரு குறிப்பிட்ட நடிகரின் நடிப்பை வாயார தொடர்ந்து புகழ்ந்து கொண்டே இருப்பார் இயக்குநர்.

கே பாலசந்தர் - கமல்

பாலசந்தரிடம் பாராட்டு வாங்குவதென்பது அத்தனை எளிதான சமாச்சாரமில்லை. தன்னிடம் வரும் இளம் நடிகர்களிடம் எல்லாம் அந்தக் குறிப்பிட்ட நடிகரின் நடிப்பை உதாரணம் காட்டி “எப்படி நடிக்கறான் பாரு.. பார்த்துக் கத்துக்கங்க” என்று மேற்கோள் காட்டிக் கொண்டேயிருப்பார்.

பாலசந்தரால் அப்படி அடிக்கடி பாராட்டப்பட்ட நடிகர், வேறு யாருமல்ல.
நாகேஷ். 

நாகேஷ் மீது பொறாமைப்பட்ட கமல்

அவரைக் கொன்னுடலாமான்னு கூட எனக்கு சமயங்கள்ல தோணும்.. எங்க டைரக்டர் கிட்ட ஒரு சின்ன பாராட்டாவது கிடைக்காதான்னு நான் உள்ளுக்குள்ள தவிச்சிட்டே இருப்பேன்.. ஆனா அவரோ நாகேஷோட நடிப்பைக் காட்டி ஒப்பிட்டு பாராட்டறதைப் பார்த்தா அத்தனை பொறாமையா இருக்கும்” என்று கமல் ஒரு நேர்காணலில் சிரித்தபடி சொன்ன நினைவிருக்கிறது. தன்னை நிரூபிக்கப் போராடும் ஓர் இளம் நடிகனுக்கு, அடுத்தவரை அடிக்கடி பாராட்டுவது உள்ளூற எரிச்சலூட்டும் விஷயமாகத்தான் இருக்க முடியும். 

நாகேஷ், கே பாலச்சந்தர்

ஆனால் இந்தக் கோபம், பொறாமையெல்லாம் தற்காலிகம்தான். ஒரு கலைஞனின் மேதைமை இன்னொரு நடிகனுக்கு நிச்சயமாகப் புரியும். ஒரு கட்டத்தில் நாகேஷின் அபாரமான நடிப்புத் திறமையை மனமார உணர்ந்த கமல், தானும் நாகேஷிற்கு மிகப் பெரிய ரசிகனாக மாறி விட்டார். மேடைகளில் அவர் நினைவுகூரும் முன்னோர்களின் பட்டியலில் சிவாஜி, பாலசந்தருக்குப் பிறகு நாகேஷூம் தொடர்ந்து இடம் பெறுவதைக் கவனிக்க முடியும். 

முன்னோர்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வது மட்டுமல்லாமல், தன்னுடைய திரைப்படங்களில் அவர்களின் திறமையை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் நல்ல பழக்கமும் கமலிடம் உண்டு. அந்த வகையில் கமல் தயாரிக்கும் படங்களில் எல்லாம் நாகேஷ் கட்டாயமாக இடம் பெறுவார். இந்த திறமையான நகைச்சுவை நடிகனை ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக்கியும் அழகு பார்த்தார் கமல். 

நாகேஷ், கமல்

கமலுடன் இணைந்து நாகேஷ் நடித்த படங்களில் எத்தனையோ அருமையான பாத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் மறக்க முடியாததொரு காரெக்டர் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். 

அவினாஷி - தில்லானா மோகனாம்பாள் வைத்தியின் நவீன வடிவம்

அவினாஷி - எட்டுப் பெண்களுக்கு தகப்பன். இரண்டு பெண்களுக்கு எப்படியோ திருமணம் செய்து விட்டார். மூன்றாவது பெண்ணுக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மிடில் கிளாஸ் வாழ்க்கையால் ரத்தம் சுண்டிப் போயிருக்கிறவர். எனவே யாரிடம் ரத்தம் வளமாக இருக்கிறதோ, அங்கு அட்டையாக ஒட்டிக் கொள்ளும் பச்சோந்தி. 

நாகேஷ்

பார்ப்பதற்கு அப்பாவியாகத் தெரிந்தாலும், அவினாசி அடிப்படையில் ஒரு ஃபிராடு ஆசாமி. ‘இதர செலவுகள்’ என்கிற தலைப்பில் 25 லட்சம் ரூபாயை அசால்ட்டாக உருவியிருக்கும் ஏமாற்றுக்காரர். முதலாளியின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் மதன் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து பல விஷயங்களைச் சரி செய்கிறான். அதில் ஒன்று அவினாஷியின் ‘miscellaneous expenses’ மோசடி. 

திருடினேன்னு ஒத்துக்கங்க. உங்க பொண்ணு கல்யாணத்தை நான் நடத்தி வைக்கறேன்” - இதுதான் மதனகோபால் அவினாஷியிடம் வைக்கும் ஒரே நிபந்தனை. “முப்பது வருஷமா உங்க அப்பா கிட்ட மாடா ஒழைச்சு ஓடா தேய்ஞ்சிருக்கேன்” என்று அவினாஷி கெஞ்சுவதால் இந்தக் குறைந்தபட்ச கருணையைக் காட்ட மதன் முற்படுகிறார். 

ஆனால் கல்லுளி மங்கனான அவினாஷியோ “நான் திருடலை சார்..” என்பதை விதம் விதமாகச் சொல்லி அழிச்சாட்டியம் செய்வார். இப்படியாக பயணிக்கும் இருவருக்குமான இந்த டிராக் படம் பூராவும் தொடர்வது, மைக்கேல் மதனகாமராஜன் திரைப்படத்தின் சுவாரசியங்களுள் ஒன்று. 

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல், நாகேஷ்

வில்லத்தனம், தந்திரம் குயுக்தி, குழைவு, பச்சோந்தித்தனம் போன்றவற்றை கலந்து நகைச்சுவை செய்வதென்பது நாகேஷிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அத்தனை இயல்பாகவும் அநாயாசமாகவும் செய்வார். இதற்கான சிறந்த உதாரணம், தில்லானா மோகனாம்பாள் ‘வைத்தி’ பாத்திரம். வைத்தி கேவலமான ஆசாமியாக இருந்தாலும் அவரை வெறுக்க முடியாதபடி அத்தனை சுவாரசியமாக மாறுவதற்கு காரணம், நாகேஷின் நடிப்புத் திறமைதான்.

வைத்தியின் நவீன வடிவம்தான் இந்த  ‘அவினாஷி’. என்னதான் பேண்ட், சட்டை, டை, டக்இன் என்று நாகரிகமான தோற்றத்தில் இருந்தாலும் அதே வைத்திதான், இங்கு நவீன தோற்றத்தில் அட்டகாசம் செய்கிறார். 

“நான் அடிச்சத சொல்லல.. நீங்க அடிச்சத சொல்றேன்”

வெளிநாட்டிலிருந்து புதிய முதலாளி வந்ததும், சட்டென்று கட்சி மாறி அவருடன் ஒட்டிக் கொள்வதற்காக அவினாஷி செய்யும் ஆரம்பக் காட்சிகளின் அலப்பறைகளே படு ஜோராக இருக்கும்.

நீங்க 30 வருஷமா பார்த்த கணக்கை நான் மூணே நாளில் பார்த்துட்டேன்” என்று புதிய மடிக்கணியைத் தட்டும் மதன் “இதர செலவுகள் வகையில் 25 லட்சம் ரூபாய் உதைக்குது” என்று சொன்னதும் மெல்ல முகம் மாறும் அவினாஷி, “இது இப்ப நீங்க அடிச்சது” என்று சொல்லி தப்பிக்க முயல “நான் அடிச்சத சொல்லல. நீங்க எங்க அப்பா கிட்ட இருந்த அடிச்சதைச் சொல்றேன்” என்று  மதன் கிடுக்குப்பிடி போட்டுப் பேசும் வசனத்தில் கிரேசி மோகனின் நகைச்சுவை முத்திரை அழுத்தமாக பதிந்திருக்கும். 

மைக்கேல் மதன காமராஜன் படம்

திருடினேன்னு ஒத்துக்கங்க…” என்று மதன் வலியுறுத்த, “சார்.. நான் திருடவேயில்லை சார்..” என்பதை விதம் விதமான மாடுலேஷன்களில் உடல் அசைவுகளில் நாகேஷ் சொல்வது சுவாரசியமான காட்சிகளாக அமைந்திருக்கும். முதலாளியின் பின்னாலேயே சோபா விட்டு சோபா தாண்டி ஓடும் காட்சியில் நாகேஷின் slapstick comedy துள்ளல் அப்படியே இருப்பதைப் பார்க்க முடியும்.

“சார்.. இந்த அவினாஷி.. ஒரு விசுவாசி” என்று இவர் பச்சையாகப் புளுக முயல “விசுவாசம்ன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா.. தெரியாது.. நான் காட்டறேன்” என்னும் மதன், தன்னுடைய பாடிகார்ட் பீம்பாயை அழைத்து “பீம்.. மேலே இருந்து குதி” என்று கட்டளையிட மறுபேச்சு பேசாமல் முதல் மாடியில் இருந்து குதித்து விடுவான் பீம். 

என்ன.. சார். குதிச்சிட்டான்..?” என்று அதிர்ச்சியடைவார் அவினாஷி. “இதுதான் விசுவாசம். லுக்.. உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரேன்” என்று மதன் அடுத்த விஷயத்திற்கு நகர முயல “மேலே இருந்து குதிக்கறதுக்கா.. ஒரு வருஷம் பிராக்டிஸ் பண்ணாலும் என்னால முடியாது” என்று இடைமறித்து நாகேஷ் சொல்லும் டைமிங்கான வசனத்தில் அவரது நீண்டகாலம் அனுபவம் பிரகாசமாக வெளிப்படும்.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல், நாகேஷ்

ஜன்னலின் வழியாகவே பீம் மேலே வர, அதைப் பார்த்து மதன் சிரிக்கும் போது, தானும் சிரித்து “என்ன. சார்.. அப்படியே மேலே வந்துட்டான்” என்று முதலாளியுடன் ஈஷிக் கொள்ள அவினாஷி முயல்வது சுவாரசியமான காட்சி. 

“பீம்பாய்.. பீம்பாய்.. லாக்கர்ல இருந்து ஆறு லட்சம் எடுத்து”...

எத்தனையோ விதமாக திருட்டுக் கெஞ்சு கெஞ்சினாலும் முதலாளி கறாராக இருப்பதால், ஜெயில் தண்டனையை தவிர்ப்பதற்காக ஒரு குறுக்குவழியை கையாள முயல்வார் அவினாஷி. திருடிய பணத்தில் மிச்சமிருக்கும் ஆறு லட்சம் ரூபாயை முதலாளியிடம் திருப்பிக் கொடுத்து குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவர் மனம் மாறி பணத்தை தன்னிடம் திருப்பிக் கொடுத்து விடுவார் என்பது அவினாஷியின் கணக்கு.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல், நாகேஷ்

ஆனால் இந்தக் கணக்கும் தவறாகி, பூமராங் போல திருப்பியடிக்கிறது. அவினாஷி 6 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தரும் போது அங்கிருப்பது முதலாளி மதன் அல்ல. உருவ ஒற்றுமையில் இருக்கும் ராஜூ. “பணத்தை வாங்கி சேஃபா வை” என்று ராஜூ சொல்ல, “சேஃப்ல வைக்கணுமா பாஸ்?” என்னும் பீம்பாய், லாக்கருக்குள் பணத்தை வைக்க அவினாஷி பதறிப் போவது சுவாரசியமான காட்சி. 

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக, பறிகொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக தவியாகத் தவிக்கிறார் அவினாஷி. மகள் திருமணத்திற்கான வரதட்சணைப் பணம் அது. 

தனது சம்பந்தியிடம் அது பற்றி பதட்டத்துடன் விளக்கம் சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கும் போது அவினாஷியின் கண்களில் ஓர் உருவம் தென்படுகிறது. திருமண ஊர்வல காரில் சென்று கொண்டிருக்கும் மாப்பிள்ளை, தனது முதலாளி மாதிரியே அச்சு அசலான தோற்றத்தில் இருப்பதைப் பார்க்க அவினாஷியின் மூளையில் ஒரு குறுக்கு யோசனை ஓடுகிறது.

நாகேஷ்

பாலக்காட்டுத் தமிழ் பேசும் காமேஸ்வரனை, மதனாக உருமாற்றி அழைத்துச் சென்று “பீம்பாய்.. பீம்பாய்.. லாக்கர்ல இருந்து அந்த ஆறு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து இந்த அவினாஷி நாய் மேல விட்டெறி” என்கிற வசனத்தை சொல்ல வைத்து விட்டால் பிரச்சினை ஓவர். இதுதான் அவினாஷியின் புதிய கணக்கு. ஆனால் இந்தக் கணக்கிலும் பயங்கர குளறுபடிகள் ஏற்படுகின்றன. அதுவே சிரித்து சிரித்து வயிற்றைப் புண்ணாக்கும் நகைச்சுவைக்கு வழி வகுக்குகிறது. 

“ஃபர்ஸ்ட் நைட்ல மூணு பேரு.. நான் கேட்டதே இல்லையாக்கும்”

பாட்டியிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் தந்து ஆசை காட்டி, மதனாக காமேஸ்வரனை நடிக்க வைக்க ஒப்புதல் வாங்குகிறார் நாகேஷ். முதலிரவு அறையில் இது தொடர்பாக நடக்கும் காமெடிகள் சுவாரசியமானவை. “என்னதிது.. கட்டில்ல அவரை உக்காரச் சொல்லிட்டு என்னை எழுந்துக்கச் சொல்றேள்..  யாருக்காக்கும் ஃபர்ஸ்ட் நைட்?” என்று காமேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்பதும் “ஃபர்ஸ்ட் நைட்ல மூணு பேரு.. நான் கேட்டதே இல்லை” என்று பதட்டத்துடன் அனத்துவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சி.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல், நாகேஷ்

காமேஸ்வரா.. இப்படியொருத்தன் இருப்பியா?” என்று கட்டிலில் சாய்ந்து கொண்டே சிவபூஜை கரடியாக புன்னகைப்பார் அவினாஷி.

பேலன்ஸ் அஞ்சாயிரத்தை உடனே கொடுங்க” என்று பாட்டி அழிச்சாட்டியம் செய்வதும் அதை அவினாஷி விதம் விதமாக சமாளிப்பதும் இன்னொரு விதமான காமெடி டிராக். உண்மையில் திருட்டுப் பழக்கமுள்ள பாட்டியின் வேடத்தில்தான் நாகேஷ் நடிக்க விரும்பினாராம். இது கமலே ஒரு நேர்காணலில் சொன்ன தகவல். 

எட்டுப் பெண்களைப் பெற்ற தகப்பனாயிற்றே... என்று அவினாஷி மீது பரிதாபம் வரும். ஆனால் 25 லட்ச ரூபாயை லவட்டியதால் கோபமும் வரும். அதை ஒப்புக் கொள்ளாமல் விதம் விதமாக சமாளிக்க முயல்வதால் எரிச்சலும் வரும்.

இப்படியொரு கலவையான பாத்திரத்தை அட்டகாசமான நகைச்சுவை உடல்மொழியுடன் வெளிப்படுத்த நாகேஷால் மட்டுமே முடியும். அந்த வகையில் ‘அவினாஷி’ ஒரு மறக்க முடியாத துணைக் கதாபாத்திரம்.