madras movie twitter
கோலிவுட் செய்திகள்

‘சிறகடித்து வானில் பறந்த..’ அன்பு... உணர்ச்சிகரமாக உயிர்கொடுத்த கலையரசன்!

13-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் மெட்ராஸ் படத்தில் கலையரசன் ஏற்று நடித்த அன்பு பற்றி பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

தமிழ் சினிமாவில் சிறந்த முறையில் சித்தரிக்கப்பட்ட ‘காவிய நட்பை’ பேசும் போது ‘தளபதி’ திரைப்படத்தின் ‘தேவா – சூர்யா’ நட்புதான் பென்ச்மார்க்காக பேசப்படுகிறது. ஆனால் வேறு சில திரைப்படங்களும் அப்படி உன்னதமான நட்பைக் கொண்டாடியிருக்கின்றன. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் காளிக்கும் அன்புக்கும் இடையிலான நட்புணர்ச்சி மிகச்சிறந்த காட்சிகளின் வழியாக பதிவாகியிருக்கிறது. ‘அன்பு’ பாத்திரத்தில் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார் கலையரசன்.

‘அன்பு’ கலையரசன்

யார் இந்த அன்பு? மனைவி மேரி, மகன் ரொனால்டோ என்று சிறிய அன்பான குடும்பம். ரியல் எஸ்டேட் தொழில். தான் வசிக்கும் ஏரியாவில் உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே நினைப்பவன் அன்பு. அதற்காக களத்தில் இறங்கி வேலை செய்பவன். மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டாமல் அந்தப் பணத்தைக் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துபவன். ஓர் அரசியல்கட்சியின் வட்டச் செயலாளராக இருக்கிறவன். அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் மாரிக்கு விசுவாசமாக பணியாற்றுகிறவன். மாரியின் வலதுகரம். அரசியல் அடைமொழியில் தளபதி என்றும் சொல்லலாம்.

‘அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதுவதான் நம்ம மக்களோட விடுதலை. அதை நான் கைப்பற்றியே தீருவேன்’ என்று அன்பு முழங்குவதோடு அவனது அறிமுகக் காட்சி காண்பிக்கப்படுகிறது. அன்புவிற்கு இன்னொரு கனவு இருக்கிறது. அதை தீராத ஏக்கம் என்று சொல்லலாம். அன்பு வசிக்கும் ஏரியாவில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் செல்வாக்கு கணிசமாக இருந்தாலும், ஓர் ஒற்றைச்சுவர் அவர்களை நிம்மதியில்லாமல் தவிக்கச் செய்கிறது.

அந்தச் சுவற்றில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் பெரிய அளவு சித்திரமும் கட்சியின் சின்னமும் இருக்கிறது. அந்தச் சுவற்றிற்குப் பின்னால் நீண்ட கதையும் பகைமை பெருகும் வரலாறும் இருக்கிறது.

அந்த ஒற்றைச் சுவர் ஏராளமானவர்களை பலி வாங்கி இருக்கிறது. சுவற்றைக் கைப்பற்றுவதற்காக இரு கட்சிகளுக்கும் இடையில் நடந்த தகராறுகளில் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். அன்புவின் அப்பாவும் அப்படி இறந்தவர்தான். தனது முன்னோர்களின் ரத்தத்திற்குப் பழிவாங்கும் வேகமும் துடிப்பும் அன்புவிற்குள் நிறைந்திருக்கிறது. சுவற்றைக் கைப்பற்றுவதின் மூலம்தான் முன்னோர்களின் ஆன்மா குளிரும் என்று நம்புகிறான். எனவே அந்தச் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான்.

அன்புவின் உயிர் நண்பன் காளி!

ஐ.டி.துறையில் பணிபுரியும் காளிக்கு அரசியல் ஆர்வமெல்லாம் கிடையாது. ஜாலியாக இருந்து திருமணம் செய்து நன்றாக செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் அவனது பாதை. ஆனால் அன்புவின் மீது உயிராக இருக்கிறான் காளி. இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பும் பிரியமும் இருக்கிறது.

அன்புவின் அன்பான குடும்பம்:

தகராறுகளில் பகையைச் சம்பாதித்துக் கொண்டு வருவதால் அன்புவின் மனைவி மேரி கோபமாக இருக்கிறாள். காளியுடன் வீட்டிற்குள் நுழையும் அன்பு “மச்சான்.. வந்திருக்கிறான். சோறாக்கிப் போடு” என்று அதட்டலாகச் சொல்ல, மேரி எரிந்து விழுகிறாள். ஆத்திரத்துடன் அன்பு எழுந்து வர பயந்து போகும் மேரி, சமையல் அறையின் சுவற்றோடு போய் ஒட்டிக் கொள்ள, ‘யேய்.. பயந்துட்டியா?’ என்று சிரித்தபடியே கேட்கிறான் அன்பு. வெளியில் முரட்டுத்தனமாக பேசினாலும் மனைவி மேரியின் மீது மிகுந்த பாசத்துடன் அன்பு இருக்கிறான் என்பதை இந்தச் சிறு காட்சியிலேயே வலிமையாக நிறுவி விடுகிறார் இயக்குநர் ரஞ்சித். அன்புவாக நடித்த கலையரசனுக்கும் மேரியாக நடித்த ரித்விகாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அவர்களின் நடிப்பில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

அன்புவின் குடும்பம்

இன்னொரு காட்சி. பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிற, தனக்குப் பிடித்தமான நடிகருக்கு மேரி முத்தம் தர, “கட்ன புருஷன் குத்துக்கல்லு மாதிரி பக்கத்துல இருக்கறப்ப, என்னடி தலைவர் படத்திற்கு முத்தம் கொடுக்கற?” என்று செல்லமான கோபத்துடன் கேட்கிறான் அன்பு. “ஹங்.. கட்ன புருஷன் குத்துக்கல்லு மாதிரி இருந்தா தலைவர் படத்திற்குத்தான் முத்தம் கொடுப்பாங்க” என்று அவனைச் சீண்டுவது போல் மேரி சொல்வதில் குறும்பு பொங்கி வழிகிறது. ‘அப்படியா சொன்ன..?’ என்று பாய்ந்து மேரியை இறுக்கமாக கட்டியணைத்து ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது சமயா சந்தர்ப்பமில்லாமல் நண்பன் காளி வீட்டினுள் நுழைகிறான்.

“காளி வரான்.. நான் தூங்கற மாதிரி இருக்கேன்’ என்று சட்டென்று கட்டிலில் அன்பு படுத்துக் கொள்வதும், துரித கணத்தில் உடையைச் சரி செய்து கொண்டு எதுவும் நடக்காதது போல் மேரி அமர்ந்திருப்பதும் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்திலும் கட்டாயம் நடந்திருக்கும் காட்சி. “அப்பா தூங்கலை.. இப்பத்தான் அப்பா அம்மாவுக்கு முத்தா கொடுத்துட்டு இருந்தாங்க..” என்று மகன் ரொனால்டோ சொல்லிக் கொடுத்து விட ‘என்னா மச்சி.. காலைலயே ரொமான்ஸா?’ என்று காளி இடுப்பில் குத்த, சங்கடமான சிரிப்புடன் அன்பு சமாளிக்கும் காட்சியில் அந்த மகிழ்ச்சி பார்வையாளனுக்குள்ளும் பரவுகிறது.

அன்பு – காளி – உன்னதமான நட்பு

தனக்கு திருமணம் ஆகாதா என்கிற ஏக்கத்தில் இருக்கும் காளிக்கு, அந்த ஏரியாவில் உள்ள கலையரசி என்கிற பெண்ணுடன் இணைத்து நண்பர்கள் கோர்த்து விடுகிறார்கள். “ஏங்க.. உங்க மேல இவனுக்கு லவ்வாம்” என்று சாலையில் நடந்து செல்லும் கலையை நோக்கி அன்பு குறும்பாக கத்த “ஏண்டா. இப்படிப் பண்றே?” என்று சங்கடத்துடன் கேட்கிறான் காளி.

“கலைகிட்ட போய் பேசினேன் மச்சான்.. என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா. நான் சாவறேன் மச்சான்” என்று மது குடித்து விட்டு டிசைன் டிசைனாக அனத்தும் காளியை அன்பு தேற்றும் காட்சி சுவாரசியமானது. ஒவ்வொரு நண்பர் வட்டாரத்திலும் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் நடந்திருக்கும். அப்படியான குறும்புகளை இந்தக் காட்சி சரியான தொனியில் பதிவு செய்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய சுவற்றை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்கிற வேகத்தில் இருக்கிற அன்புவிடம் நண்பர்கள் ஆளுக்கொன்றாக சொல்லி குழப்புகிறார்கள். “சாதாரண சுவத்துக்கு அடிச்சுக்கறது இந்த ஒலகத்துலயே நாமாளத்தான் இருப்போம்” என்று ஒரு நண்பன் சொல்ல “சாதாரண... அது சுவர் மட்டும் இல்ல. அதிகாரம். அதுக்காக எத்தனை பேர் செத்திருக்காங்க தெரியுமா” என்று வெடிக்கிறான் அன்பு. ‘சாதாரண..’ என்பதை இழுவையான மாடுலேஷனில் அன்பு சொல்வது நன்றாக இருக்கும். மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது உறுதியான ஆதரவு தருகிறான் காளி. “நான் உன் கூட நிக்கறேன். நீ செய் மச்சான்” என்று நட்புக்கரம் நீட்டுகிறான்.

கூட்டமாக கிளம்பிச் செல்கிறார்கள். பிரச்சினைக்குரிய சுவற்றில் முதன் முதலாக தனது கட்சியின் பெயரை பதட்டத்துடன் பதிவு செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கான இடத்தைப் பிடிக்கிறான் அன்பு. அந்த ஏரியாவில் தங்களின் கட்சிக்கு என்று இருக்கும் ஒரே சுவர் பறிபோனால் எதிர் தரப்பு பார்த்துக் கொண்டிருக்குமா?

அங்கிருந்து பஞ்சாயத்திற்கான அழைப்பு வருகிறது. “ஏன் போறே... பார்த்து பேசு.. சண்டை வலிக்காத” என்று மிரட்சியுடன் தடுக்கும் மேரியை சமாதானப்படுத்தி விட்டு நண்பர்களுக்கும் தகவல் சொல்லி விட்டு கிளம்புகிறான் அன்பு.

ஒற்றைச் சுவருக்குப் பின்னால் ஏராளமான பகை

சுவர் பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெருமாள் கோபத்துடன் காத்துக் கொண்டிருக்கிறான். “இத்தனை வருஷமா நீங்க வெச்சுட்டு இருந்தீங்க.. இனி எங்களுக்குத்தான். அதுக்காக எங்க அப்பன் செத்திருக்காரு” என்று ஆத்திரத்துடன் மறுத்துப் பேசுகிறான் அன்பு. “அந்தச் சுவத்துல எங்க தாத்தா இருக்காரு” என்று பெருமாள் சொல்ல, பின்னால் வரும் காளி, “பக்கத்து சுவத்துல உங்க பாட்டி இருக்காங்களா?” என்று நக்கலாக கேட்கிறான்.

பெருமாளின் வலதுகரமாக இருப்பவன் விஜி. பெரிய அயிட்டம்காரனாக ஆகி ஏரியாவில் கெத்தாக சுற்ற வேண்டும் என்கிற விருப்பத்துடன் இருக்கிறான். அரசியல் ரீதியாக அன்புவின் எதிர்க்கட்சிதான். ஆனால் அன்புவின் அதே சமூகத்தைச் சேர்ந்தவன். உரையாடலில் ஆவேசம் கூடுவதால் விஜி எகிறிக் கொண்டு வர “இர்றா. உனக்கும் சோ்த்துதான் பேசிட்டிருக்கேன்”.என்று அன்பு பேசும் வசனத்தில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் நின்றால்தான் முன்னேற முடியும். ஆனால் பிரிவினைவாத அரசியல் அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் கையாள்கிறது.

பெருமாளின் ஆட்களில் ஒருவன், அன்புவை நோக்கி ஆபாசமான வசையை வீச, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காளி, அந்த ஆசாமியை ஆத்திரத்துடன் அடித்து விடுகிறான். “ஏய். என்னடா பேசிட்டு இருக்கும் போதே கையை நீட்றீங்க..?” என்று ஆத்திரம் அடையும் பெருமாள் அங்கிருந்து ஆட்களுடன் கிளம்பி விட, காளியின் துடுக்குத்தனத்தை அன்பு வன்மையாக ஆட்சேபிக்கிறான்.

“சமாதானம் பேச வந்தவங்களை அடிச்சிட்டாங்கன்னு சொல்லுவாங்கடா” என்று அன்பு சொல்லும் சரியான காரணத்தை காளியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “என் கிட்டயே எகிர்றியா..?” என்று கோபமாக கிளம்ப, “டேய்.. பார்த்து இருடா. எங்கயும் தனியா போகாத” என்று அந்தச் சமயத்திலும் நட்பு கலந்த கவலையுடன் சொல்கிறான் அன்பு.

அந்த ஏரியாவில் அன்பு பெரிய ஆளாக மாறி வருவது எதிர்க்கட்சிக்கு உறுத்துகிறது. ‘மாரியோட சப்போர்ட்லதான் அவன் ஆடறான்” என்று ஒருவர் சொல்ல, “மாரி இல்லைன்னாலும் அவன் அப்படித்தான் இருப்பான்” என்கிறார் பெருமாளின் தந்தை கண்ணன். இந்த அனைத்து நாடகத்திற்குப் பின்னாலும் உள்ள சூத்திரதாரி இவர்தான்.

அன்புவை வட்டமிடும் எதிரிகள்:

பெருமாளின் தரப்பு ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல்துறையை ஏவி அன்புவை லாக்கப்பில் வைத்து அடித்து தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அது நடக்கிறது. “அன்புவை போலீஸ் பிடிச்சிட்டுப் போச்சு. சீக்கிரம் வாங்கண்ணா” என்று மேரி பதட்டமாக அழைப்பதால் காளி காவல்நிலையத்திற்கு விரைகிறான். அங்கு அவனை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சியில் மாரி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்புவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற பதட்டத்தில் மேரி இருக்க “அடிக்குப் பயந்தா செத்தவங்க ரத்தத்துக்கு யாரு பதில் சொல்றது. அடுத்த வாரத்துக்குள்ள சுவத்தைப் பிடிச்சுக் காட்டி அவங்க முன்னாடி நெஞ்சை நிமித்தி நடக்கல..” என்று இன்னமும் ஆவேசம் குறையாமல் அன்பு பேசுவதைப் பார்த்து மேரிக்கு பதட்டம் கூடுகிறது.

சுவற்றைக் கைப்பற்றுவதற்கான ரகசிய திட்டத்தை அன்பு ஏற்பாடு செய்கிறான். அதற்கான நாளைக் குறிக்கிறான். “நாளைக்கு பிளான் பக்காவா நடக்கணும். சுவத்தை எப்படியாவது பிடிச்சிறணும்” என்று தன் நண்பர்களிடம் அன்பு சொல்ல ‘அதையெல்லாம் கச்சிதமா பண்ணிடலாம்” என்று அவர்கள் வாக்கு தருகிறார்கள். அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் காளி, மைதானத்தில் அன்பு தனியாக நிற்பதைப் பார்த்து பேச வருகிறான்.

“அதெல்லாம் உன் பிளான் நல்லா நடக்கும். ஆனா சுவத்தைப் பிடிச்சிட்டா எல்லாம் மாறிடுமா.. நாம இப்படியே இருக்கணும்னுதான் அவங்க நெனக்கறாங்க.. தமிழ் தமிழ்ன்றாங்க. ஆனா கத்திய தூக்கின்னு வந்துடறாங்க” என்று காளி பேசும் வசனம் முக்கியமானது. அரசியல் பொருள் கொண்டது.

“கொய்யால.. நல்லா பேசறடா. நீ படிச்சவன்தானே... இந்த ஏரியாவுக்கு என்ன பண்ணே.. இது என் மண்ணு.. நான்தான் போரடியாகணும்” என்று அன்பு ஆவேசமாக சொல்ல “டேய்.. நாங்களும் இறங்கி நிப்போம். மக்களுக்கு நல்லது பண்ணணும்ன்னு நீ நெனக்கறது புரியதுடா. ஆனா செவரு விஷயத்துல ஓவரா பண்ணாத” என்று காளி உபதேசம் சொல்கிறான். அந்தச் சமயத்தில் அன்புவைக் கொல்வதற்காக பெருமாளின் ஆட்கள் ‘சுத்து’ போட்டு விடுகிறார்கள். அன்புவும் காளியும் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சந்து, பொந்துகளில் எல்லாம் மறைந்து ஓடுகிறார்கள். இந்த துரத்தல் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு கட்டத்தில், இருவரும் பதுங்கி ஒளிந்திருக்கும் இடத்தின் அருகேயே பெருமாள் நிற்கிறான். ‘அவர்கள் தப்பித்து விட்டார்கள்’ என்கிற தகவல் பெருமாளுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. “அவன் சாவலை,. நீ செத்தே..: என்று தன்னுடைய ஆட்களுக்கு ஆவேசமாக செல்போனில் உத்தரவு போடுகிறான்.

காளி செய்யும் விபரீதமான சம்பவம்:

இந்தச் சமயத்தில்தான் காளி ஒரு விபரீதமான முடிவை எடுக்கிறான். அன்புவின் உயருக்கு எதுவும் ஆகக்கூடாது என்கிற ஒரே எண்ணம்தான் காளியின் மனதில் அப்போது ஒடுகிறது. எனவே என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம்’ என்பதே தெரியாமல் ஓடிச் சென்று பெருமாளின் தலையில் அரிவாளால் ஓங்கி வெட்டுகிறான். “ஏண்டா இப்படிப் பண்ணிட்டே..” என்று தலையில் கைவைத்துக் கொள்கிறான் அன்பு. “இப்பத்தான் ஒரு மாதிரி லைஃப் செட்டில் ஆச்சு.. இப்படியாச்சிடுச்சே?” என்று பிறகு புலம்பித் தள்ளுகிறான் காளி.

பெருமாள் கொலை செய்யப்பட்டது, எதிர்தரப்பிற்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்துகிறது. விஜியின் தலைமையில் கொலைவெறியுடன் ஆட்கள் தேடுகிறார்கள். காளியும் அன்புவும் மாரியின் உதவியுடன் அங்கிருந்து எப்படியோ தப்பித்து நீதிமன்றத்தில் சரண் அடையச் செல்கிறார்கள். “போலீஸ் சந்தேகப்படுதுன்னுதான் நாம சரண்டர் ஆகறோம். நீயும் செய்யலை.. நானும் செய்யலை.. ஓகேவா..?” என்று முன்கூட்டியே காளியை தயார்ப்படுத்துகிறான் அன்பு.

ஆனால் இவர்களுக்காக வந்திருக்கும் வக்கீல் சொல்வது வேறு மாதிரியாக இருக்கிறது. “அன்புக்குத்தான் செம டிமாண்ட். மாட்டியிருந்தா சாப்பிட்டுருப்பாங்க. நீ யாரு.. காளியா.. உன் பேரு லிஸ்டில இல்லையே?” என்றவுடன் காளியை அவசரமாக ஓரங்கட்டி இழுத்து வருகிறான் அன்பு.

அன்புவின் தியாகமும் கடமையும்:

“எல்லோரும் நான் செஞ்சதா நெனச்சிட்டு இருக்காங்க. நான் அதை சமாளிச்சுடுவேன்” என்று அன்பு சொல்ல “என்ன விளையாடறியா. செஞ்சது நான்தானே. மேரிக்கு யாரு பதில் சொல்லுவா?” என்று அதை ஏற்க மறுத்து அடம்பிடிக்கிறான் காளி. “டேய் சொன்னா கேளுடா. ஒருமுறை உள்ளே போனா முத்திரை குத்திடுவாங்க.. எதுவா இருந்தாலும் ஏரியால உன்னைத் தேட ஆரம்பிச்சிடுவாங்க.. உன் லைஃப்பே வேற. நீ செய்யலைன்னாலும் நான் செஞ்சிருப்பேன். இந்த விஷயத்துல உள்ளே போறது எனக்குப் பெருமை” என்று காளியை ஒருவழியாக சம்மதிக்க வைக்கிறான் அன்பு.

இவர்கள் தப்பிப்பதற்காக உதவி செய்த அணிலிடம் “நான்தான் செய்தேன்” என்று காளி சொல்ல “உன் பிரெண்டுக்கு நீ கோயில் கட்டி கும்பிடணும்” என்கிறான் அணில். “அவன் சூப்பர்ணே” என்று நெகிழ்ந்து சொல்கிறான் காளி.

“நீ இங்கல்லாம் வர வேணாம். எதா இருந்தாலும் காளி கிட்ட சொல்லு. அழாத” என்று மேரியிடம் போனில் ஆறுதல் சொல்கிறான் அன்பு. “மேரியைப் பார்த்துக்கடா” என்று கலங்கும் அன்புவிடம் “நீ அழுவாத மச்சான்.. உன்னை இப்படி பார்த்ததேயில்லடா..” என்று பதிலுக்கு கலங்குகிறான் காளி.

“இந்நேரம் செவத்தை பிடிச்சிருந்தா செம சீனா இருந்திருக்கும்ல. அவங்க முன்னாடி நெஞ்சை நிமித்தி நடந்திருந்தா செத்தவங்க ஆத்மால்லாம் அப்படியே குளிர்ந்திருக்கும்.” என்று அப்போதும் சுவர் பற்றியே அனத்துகிறான் அன்பு. அப்போதுதான் அந்த விபரீதமான சம்பவம் நடக்கிறது.

சுற்றியுள்ள கூலிப்படையினர் அன்புவின் மீது கொடூரமான தாக்குதல் நடத்துகிறார்கள். அரிவாளால் பயங்கரமாக வெட்டுகிறார்கள். காளிக்கும் இதில் காயம் ஏற்படுகிறது. அவனை சுற்றியுள்ள வக்கீல்கள் கோர்ட் வளாகத்தின் உள்ளே இழுப்பதால் காளி உயிர் தப்பிக்கிறான்.

துரோகத்தால் வீழ்த்தப்படும் அன்பு

மருத்துவனையில் காளி கண் விழித்தவுடன் முதல் வார்த்தையாக ‘அன்பு’.. என்று முனகுகிறான். மரண வீட்டிற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். காளியைப் பார்த்ததும் மேரியின் அழுகை அதிகமாகிறது. “டேய் அன்பு.. எழுந்திருடா. உன் உயிர் நண்பன் வந்திருக்கான். டேய்ன்னு கூப்பிடாத. மாமான்னு கூப்பிடுன்னு சொல்லுவியே.. இப்ப கூப்பிடறேன். அன்பு மாமா.. எழுந்திரு மாமா. நம்ம பையனை படிக்க வெச்சு பெரிய ஆளாக்கணும்ன்னு சொல்லுவியே.. நான் படிக்க வைக்கறேன். சுவரு.. சுவரு..ன்னு இருந்தியே.. இன்னிக்கு அந்த சுவரே உன்னை வாயிலே போட்டுக்குச்சே.” என்று சடலத்தின் மீது விழுந்து கதறுகிறாள் மேரி. அன்புவின் முகத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறான் காளி.

ஐஸ் பாக்ஸை விலக்கி சடலத்தை தூக்க வருகிறார்கள். “என் உதடுதான் உனக்குப் பிடிக்கும்னு சொல்வியே. இப்ப கடி மாமா..” என்று சடலத்தை கட்டியணைத்தபடி மேரி கதறும் காட்சி, காண்பவர்களை நெகிழ வைப்பதாக இருக்கிறது. கட்சிக்கொடியை அன்புவின் மீது போர்த்தி விட்டு செயற்கையான ஆவேசத்துடன் மாரி மரண வீட்டுக் கூட்டத்தில் பேசுகிறான். “இன்னும் எத்தனை பேரை இந்தச் செவத்துக்காக பலி கொடுக்கப் போறோம். இனி ஒரு உயிரும் போகக்கூடாது. அப்படிப் போனா அது என் உயிராத்தான் இருக்கணும்.” என்று மாரி சொன்னதும் கூட்டத்தினர் உணர்ச்சிவசப்படுகிறார்கள். மாண்டேஜ் காட்சிகளின் வழியாக சவ ஊர்வலம் செல்வது நெகிழ்வாக சித்தரிக்கப்படுகிறது.

ஒரு கேரக்ட்டர் இறந்த பிறகு கூட திரைக்கதையில் அது பயணித்துக் கொண்டேயிருப்பது அதன் வலிமையைக் காட்டுகிறது. அன்பு கொல்லப்பட்ட பிறகும் கூட கடைசி வரைக்கும் உரையாடலில் வந்து கொண்டே இருக்கிறான்.

நண்பனை மறக்காத காளி

அன்புவின் மரணத்திற்கு பழிவாங்கும் உணர்வில், அதே நினைவாகவே இருக்கிறான் காளி. எனவே அவனது எண்ணத்தை மாற்ற முயல்கிறாள் கலையரசி. “உன்னைச் சுத்தி எல்லாம் நல்லவங்களாத்தான் இருக்காங்க. அப்பா.. அம்மா.. அன்பு..” என்று அவள் சொல்ல, அது வரை ரொமான்டிக் மூடில் இருந்த காளியின் முகம் அன்புவின் பெயரைக் கேட்டதும் இறுக்கமடைகிறது.

“அன்பு.. அவன் பேரைக் கேக்கறப்பலாம் எனக்கு உடம்பு சிலுக்குது.. பிரெண்ட்ஸ்னா இப்படில்லாம் இருப்பாங்களான்னு கேள்விதான் பட்டிருக்கேன். அவனை பார்த்தவுடன்தான் தெரிஞ்சது. என்னை யாராவது ஒரு வார்த்தை சொல்ட்டா கூட அவனுக்கு செம கோபம் வரும். எவ்ளோ பெரிய ஆளா இருந்தா கூட போய் முறைச்சுடுவான். அவன் சாகறதுக்கு முன்னாடி கூட “நீ சிக்கிரம் செட்டில் ஆகுடா மச்சான்னு நம்ம கல்யாணத்தைப் பத்திதான் பேசிட்டு இருந்தான்” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல “நான் வேற ஞாபகப்படுத்திட்டேன்” என்று சங்கமடைகிறாள் கலை.

“இல்ல கலை.. அவன் எப்படித் தெரியுமா. நம்ம ஜனங்களுக்கு நல்லது பண்ணனும். ஏரியாக்கு ஏதாவது செய்யணும்ன்னு அதைப் பத்தியேதான் யோசிப்பான். சம்பாதிக்கற காசைக் கூட புள்ளக்கு ஃபீஸ் கட்டாம கேக்கறவங்க கிட்ட கொடுத்துடுவான். அவன் சாவுக்கு மட்டும் நான் பழிவாங்கல..” என்று உக்கிரமாகப் பேச ஆரம்பிக்கிறான் காளி. இந்த இடத்தில் கலையின் பொசசிவ்னஸ் உணர்வு எட்டிப் பார்க்கிறது. “என்ன எவ்ள பிடிக்கும்?” என்று கேட்கிறாள். காளியின் முகம் இயல்பிற்குத் திரும்பி “இந்த உலகம் அளவுக்கு” என்று கைகளை அகல விரித்துச் சொல்கிறான்.

“என்னை ரொம்ப பிடிக்குமா, அன்பு அண்ணாவை ரொம்ப பிடிக்குமா?” என்று அசந்தர்ப்பமான கேள்வியை கலை கேட்க காளிக்கு கோபம் வருகிறது. “லூசாடி நீ. அவன் செத்துட்டான்டி..” என்று வெடிக்கிறான். ‘நான் வேணா செத்துடட்டுமா. அப்பவாவது நான்தான்னு சொல்லுவியா.. ஒழுங்கா சொல்லு மாமா..” என்று கலையின் இம்சை அதிகரிக்க, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு காளி சொல்கிறான். “அன்புதான். இப்ப என்னான்ற..” என்று அவன் சொன்னதும் அவர்களுக்குள் மீண்டும் ஊடல் ஆரம்பிக்கிறது. காதலும், பிரியமும், ஊடலும், கோபமும் மாறி மாறி பயணிக்கும் இந்த நீண்ட காட்சியை இயக்குநர் ரஞ்சித் அத்தனை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்.

முன்னோர்கள் சிந்திய குருதிக்கு தன்னையும் பலியாகத் தந்த அன்பு

ஒரு கட்டத்தில் அன்புவின் மரணத்திற்கு அவன் விசுவாசமாக நம்பிக் கொண்டிருந்த மாரிதான் காரணம் என்கிற உண்மை அணிலின் மூலமாக காளிக்குத் தெரியவருகிறது. அதைப் பற்றி மாரியிடம் விசாரிக்கிறான். “அணிலைப் பார்த்தேன்” என்று காளி ஆரம்பிக்கும் போதே பதட்டமடையும் மாரி “அவன் சொன்னதையெல்லாம் நம்பாத. அன்பு எனக்கு புள்ள மாதிரிடா..” என்று மாரி நெகிழ்வாக நடிக்க ஆரம்பித்தவுடன் அவனுடைய முகத்தில் வெடிக்கிறான் காளி.

அன்பு
அன்பு – அவன் அரசியல் அடியாள் அல்ல. அல்லக்கை அல்ல. அதிகாரத்தைப் பற்றிக் கொண்டு சுயஆதாயம் அடையத் துடிக்கும் வழக்கமான அரசியல்வாதி அல்ல. உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்யத் துடித்தவன்.

அதிகாரம்தான் அதற்கான வழி என்கிற தெளிவு உடையவன். முன்னோர்கள் சிந்திய குருதிக்கும் தியாகத்திற்கும் தன்னையே பலியாகத் தருகிறான் அன்பு. நட்பு என்னும் மகத்துவம் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை. துரோகம்தான் வெல்கிறது. அன்பு என்னும் கேரக்ட்டரை ரஞ்சித் வடிவமைத்த விதமும் கலையரசன் அதைத் திறம்பட கையாண்ட விதமும் அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாமல் ஆக்குகிறது.

அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது..

சதியென்னும் அம்பினால் அது அடிபட்டு மாண்டது..

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே..