Dancing Rose ஷபீர் கல்லாரக்கல் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | Dancing Rose | “அதுக்காகல்லாம் ரோஸை அடிச்சுட முடியாது..”

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ‘ஷபீர் கல்லாரக்கல்’ ஏற்று நடித்திருந்த ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில்,  ‘சார்பட்டா பரம்பரை’ ஓர் அசாதாரணமான படைப்பு. வடசென்னையில் இயங்கிக் கொண்டிருந்த குத்துச் சண்டை பரம்பரைகளுக்கு இடையேயான பகைமையையும் அதற்குள் உறைந்திருந்த சாதிய அரசியலையும் மிகவும் விறுவிறுப்பான திரைமொழியில் உரையாடிய உருவாக்கிய திரைப்படம். 

இந்தப் படத்தில், ரங்கன் வாத்தியார் உள்ளிட்ட பல சிறந்த துணை கதாபாத்திரங்கள் இருந்தாலும் சட்டென்று அனைவரையும் கவர்ந்தவர் ‘டான்சிங் ரோஸ்’தான். ‘யார்யா இந்தாளு?’ என்று படம் பார்த்த அனைவரையும் தேட வைத்த கேரக்டர்.

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

படம் துவங்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது, ஹீரோவின் எதிர்த்தரப்பில் இருக்கும் குழுவில் இருக்கும் சாதாரண நபர் என்பதாகவே இந்த கேரக்டர் காட்சி தரும். ரங்கன் வாத்தியாரின் பரம்பரையை நக்கலாக பேசிச் சிரிக்கும் ஒரு அல்லக்கை என்பதாகவே காண முடியும்.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்தப் பாத்திரம் விஸ்வரூபம் எடுக்கும். ‘டான்சிங் ரோஸ்’ என்கிற அந்த சிறந்த ஆட்டக்காராரின் பின்னணி பற்றி அறிய நேரும் போது பார்வையாளர்களுக்கு அத்தனை வியப்பாக இருக்கும். 

“யாருப்பா.. இந்த டான்சிங் ரோஸ்?”

ஒரு சம்பிரதாயமான குத்துச்சண்டைக்காரனின் தோரணையில் அல்லாமல் மேடையில் விதம் விதமாக துள்ளிக் குதிப்பது, கோணங்கித்தனமான உடலசைவுகளின் மூலம் எதிராளியை தடுமாற வைப்பது, தகுந்த சமயம் கிடைக்கும் போது எதிராளியின் முகத்தில் வெடித்து ‘நாக்அவுட்டில்’ வீழ்த்துவது என்று இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமே அத்தனை சுவாரசியமாக இருக்கும். நசீம் ஹமத் என்கிற பிரிட்டிஷ் பாக்ஸரின் ஆளுமையிலிருந்து இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நசீம் ஹமத், பிரிட்டிஷ் பாக்ஸர்

‘டான்சிங் ரோஸ்’ என்கிற இந்தப் பாத்திரத்தை ஏற்றவர், ஷபீர் கல்லாரக்கல். பிறந்தது கேரளா என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஷபீர், ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது ஆசை கொண்டு கூத்துப்பட்டறை நாடகக்குழுவில் இணைந்தார். பிறகு பல குழுக்களில் நடித்து பயிற்சி பெற்று சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக மாறினார். மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் கூட்டத்தில் ஒருவனாக முகமின்றி தோன்றியதுதான் ஷபீரின் முதல் திரைப்பிரவேசம். 

இதன் பிறகு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் ஹீரோ, ‘அடங்க மறு’ ‘பேட்ட’ போன்ற படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்தாலும், அவருக்கு பெயரும் புகழும் வாங்கித்தந்த படம் என்றால் அது ‘சார்பட்டா பரம்பரை’தான். இயல்பிலேயே உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் ஷபீர், ‘டான்சிங் ரோஸ்’ என்கிற  இந்தப் பாத்திரத்திற்காக மிகுந்த உழைப்பைத் தந்து தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். அது திரையில் அற்புதமாக எதிரொலித்து பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. 

Shabeer Kallarakkal

எவராலும் வீழ்த்த முடியாத வேம்புலி

ரங்கன் வாத்தியாரின் தலைமையிலான சார்பட்டா பரம்பரையின் குத்துச்சண்டை வீரர்கள், ஜூனியர் நிலை போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ‘மெயின் போர்டு’ என்கிற முக்கியமான ஆட்டத்தில்  ‘இடியப்ப நாயக்கர்’ பரம்பரையிடம் தொடர்ந்து தோற்று வருகிறார்கள். அந்தக் குழுவைச் சேர்ந்த ‘வேம்புலி’ என்கிற சிறந்த ஆட்டக்காரன், சார்பட்டா பரம்பரையின் மெயின் போர்டு ஆட்டக்காரர்களை தொடர்ச்சியாக ‘நாக்அவுட்’ செய்து வீழ்த்தி வருகிறான். 

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையின் மெயின் போர்டு ஆட்டக்காரர்களில் கடைசியாக உள்ள மீரானுக்கும் வேம்புலிக்கும் ஆக்ரோசமான குத்துச்சண்டை போட்டி ஆரம்பிக்கிறது. வேம்புலியுடன் உள்ளே நுழையும் துரைக்கண்ணு வாத்தியார், ‘என்ன… ரங்கா.. ஆட்டைக் கொண்டு வந்துட்டியா?”’ என்று மிகவும் நக்கலாக கேட்கிறார். 

‘Dancing Rose’ ஷபீர் கல்லாரக்கல், ‘ரங்கன் வாத்தியார்’ பசுபதி

பின்னால் ஒரு தேசலான உருவம் கிண்டலாக சிரித்துக் கொண்டிருக்கிறது. இடது பக்கமாக வகிடு எடுத்து வாரப்பட்ட தலைமுடி. அதில் ஒரு சின்னதாக ஒரு சுருள் ஸ்டைல் என்கிற பெயரில் முன்னால் நீட்டிக் கொண்டிருக்கிறது. பூக்கள் போட்ட சட்டை பேண்டிற்குள் டக்இன் செய்யப்பட்டிருக்கிறது. ஒல்லியான உருவம் என்றாலும் அலட்சியமாக திறந்திருக்கும் சடடையின் வழியாக உடலின் உறுதி  தெரிகிறது. ‘கயிறு போட்டு கட்டி வை வாத்தியாரே. தப்பிச்சி ஓடிடப் போவுது’ என்று பேண்ட்டை மேலே தூக்கிக் கொண்டே ரங்கன் வாத்தியாரை நக்கலடிக்கும் அந்த தேசலான உருவம்தான் டான்சிங் ரோஸ். வேம்புலியின் அல்லக்கைகளுள் ஒரு காமெடி பீஸ் என்கிற மாதிரிதான் ரோஸின் ஆரம்பக்கட்ட காட்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன.

காமெடி பீஸ் ஹீரோவாக மாறும் தருணம்

மீரானை வேம்புலி அடித்து வீழ்த்துவதின் மூலம் சாாபட்டா பரம்பரையைின் மெயின் போர்டு ஆட்டக்காரர்களில் எஞ்சியுள்ளவனையும் ஜெயித்து விடுகிறான். “இனிமே மேட்ச் பக்கம் வந்துடப் போறே.. அப்புறம் இந்த ஊர் பொம்பளைங்க வாயால சிரிக்க மாட்டாங்க” என்று ஊஞ்சலாடும் உடல்மொழியில் ரங்கன் வாத்தியாரிடம் நக்கலாகச் சொல்லி சிரிக்கிறான் ரோஸ். 

ஆர்யா - ஷபீர் கல்லாரக்கல்

காட்சிகள் நகர்கின்றன. அடுத்த ஆட்டத்தில் ராமனை இறக்கி விட முடிவு செய்கிறார் ரங்கன். இந்த ஆட்டத்தில் தோற்று விட்டால் இனி சார்பட்டா பரம்பரை மேடையேறக்கூடாது என்பது சவால். ரங்கன் வாத்தியாரின் பயிற்சியில் நம்பிக்கையில்லாத ராமன், மிலிட்டரி பயிற்சியாளரை அழைத்து வர, இது சார்ந்த தன்மானப் பிரச்சினையில் ரங்கன் வாத்தியாரின் மானத்தைக் காப்பாற்ற கபிலன் களம் இறங்குகிறான். கபிலனுக்கும் ராமனுக்கும் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ராமனை அடித்து வீழ்த்துகிறான் கபிலன்.

அப்போதுதான் கபிலனின் அசாதாரணமான திறமையின் மீது ரங்கனின் கவனம் குவிகிறது. ராமனுக்குப் பதிலாக கபிலனை களத்தில் இறக்குவது என்று முடிவு செய்கிறார். ஆனால் எதிர்தரப்பு இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இன்னமும் மேடையே ஏறாத ஒருவனுடன் மெயின் போர்டு ஆட்டக்காரனான வேம்புலி எப்படி ஜதை போட முடியும் என்று நக்கலாகச் சிரிக்கிறார்கள். 

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

“ரெண்டே ரவுண்டுல ரோஸை முடிச்சுடுவேன்”

இது சார்ந்த உரையாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமானது. பேச்சில் குறுக்கே வரும் ரோஸ் “இன்னா.. டாடி.. ஆட்டக்காரன் மாதிரியா பேசிட்டிருக்கே.. ஸ்டேஜ்ல ஏறி ஃபுட்வொர்க் பண்றப்ப.. எதிர்ல இருக்கறவன் ஒரு குத்து குத்தினா.. அத வாங்கி..  மறுபடியும் தர்றது.. இருக்குதுல்ல.. அப்படி செஞ்சி கெலிச்சி.. இத்தனை வருஷமா.. இங்க நின்னுனுருக்கிறோம்… தம்மாம்தூரத்தவன்.. அவனை வெச்சு ஆடிப்பாடிக்கினுரே..” என்று  உடம்பை வளைத்து வளைத்து நக்கலடிக்கும் ரோஸின் உடல்மொழி ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. 

“ரோஸ்ண்ணா.. கூட ரெண்டு ரவுண்டு தாண்ட மாட்டேன்.. ரெண்டு ரவுண்டுல ஆட்டத்தையே முடிச்சுடுவேன்..” என்று கபிலன் சவால் விடும் மொழியில் பேச, ரோஸின் முகத்தில் சிரிப்பும் நக்கலும் மறைந்து ஆத்திரம் தெரிகிறது. ‘இவன.. இங்கேயே முடிச்சுடறேன்.. த்தா.. வாடா…’ என்று சட்டையை விலக்கிக் கொண்டு வருகிறான் ரோஸ். ‘இன்னா ரோஸூ.. நீ  மறுபடியும் ஆடறேன்னு தெரிஞ்சா கூட்டம் அள்ளுமே’ என்று காண்டிராக்டர் கோணி சந்திரன் உற்சாகமாகிறார். 

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

இதற்குப் பிறகுதான் ரோஸின் அசாதாரணமான பின்னணி பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிய வருகிறது. ஒரு காலத்தில் அவன் சிறந்த ஆட்டக்காரன். தனது குறும்பான உடல் அசைவுகளின் மக்களை சிரிக்க வைத்து எதிரிகளை அடித்து வீழ்த்தி பிரமிக்கவும் செய்தவன். எனவே பொதுமக்களில் பலரும் அவனுடைய புகழை மீள்நினைவு செய்கிறார்கள்.

“யார்ரா.. அவன்.. ரோஸை அடிக்கறவன்..?" என்று ஒரு ரிக்ஷாக்காரர் சொல்ல “இன்னா மோி ஆட்டக்காரம்ப்பா.. அவன்!” என்று ஹோட்டலில் இட்லி வைக்கும் சர்வரும் கபிலனிடம் சொல்கிறார். “அவ்ளோ.. பெரிய ஜித்தா.. த்தோ பாரு.. ஸ்டேஜே ஏறக்கூடாது.. அப்படியே ஓடிப் போயிடு” என்று அரசியல்வாதியான மாஞ்சா கண்ணனும் கபிலனை ஜாலியாக மிரட்டுகிறார். 

“ரோஸூ பெரிய வித்தைக்காரம்ப்பா” - பாடம் எடுக்கும் ரங்கன் வாத்தியார்

“வேம்புலியையே அடிக்கற அளவுக்கு உன் கிட்ட ஆட்டம் இருக்கலாம். ஆனா அதுக்காகல்லாம் ரோஸை அடிச்சுட முடியாது.. மெட்ராஸ்ல இருக்கிற பரம்பரையிலேயே ரோஸ் கிட்ட இருக்கிற கால் பாடம் எவன் கிட்டயும் கிடையாது. ஸ்டைலா டான்ஸ் ஆடறா போலயே இருக்கும்.. அதனாலதான் அவன் பேரு டான்சிங் ரோஸூ.. ஆப்போனட் ஜனங்களுக்கே அவன்தான் ஜெயிக்கணும்ன்ற எண்ணத்தைக் கொடுத்துடுவான்.. அந்த அளவுக்கு பெரிய வித்தைக்காரம்ப்பா அவன்” என்று கபிலனுக்கு பயிற்சி அளிக்கும் போது ரோஸின் முக்கியத்துவம் பற்றி பாடம் எடுக்கிறார் ரங்கன்.

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

இதற்கு இடையில் மேடையில் ரோஸ் நிகழ்த்தும் சேட்டைகளும் ஆரவாரங்களும் நுணுக்கங்களும் காட்டப்படுகின்றன. இதற்காக தனது உடலை எப்படியெல்லாம் ஷபீர் தயார் செய்து வைத்திருக்கிறார் என்று வியப்பும் பிரமிப்பும் கலந்து தோன்றுகிறது. ஆக்ரோஷமாக நடக்கும் இந்த ஆட்டத்தில் கபிலனை ஆரம்பத்தில் ரோஸ் தனது வழக்கமான கிம்மிக்ஸ் மூலம் எதிர்கொண்டாலும் ஒரு கட்டத்தில் கபிலனிடம் முகத்தில் குத்து வாங்கி மல்லாந்து வீழ்கிறான் ரோஸ். அரங்கமே ஸ்தம்பித்துப் போகிறது. பார்வையாளர்களின் ஆதரவு பெரும்பாலும் ரோஸ் பக்கம் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெல்கிறான் கபிலன். 

தான் வாங்கிய அடியைப் பற்றி வேம்புலியிடம் பிறகு ரோஸ் விவரிக்கும் காட்சி சுவாரசியமானது. “ரைட்டு மிஸ்ஸூ வுட்டு அந்த ரைட்லயே மூஞ்சுல வுட்டாம்ப்பா.. அப்படியே கதி கலங்கி போயிட்டேன். நீ எப்பிடியாவது அவனை ஜெயிக்கணும்.. அத நான் பார்க்கணும்..” என்று அழுகையும் வீறாப்புமாக ரோஸ் சொல்லும் காட்சியில் ஷபீரின் நடிப்பு அருமையாக இருக்கிறது.

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

வேம்புலிக்கும் கபிலனுக்கும் இடையில் நிகழும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் கபிலனின் கை ஓங்குகிறது. கபிலன் வெற்றியை அடையப் போகும் நேரத்தில் தணிகாவின் ஆட்களின் மூலம் கபிலனின் வெற்றி தடுக்கப்படுகிறது. கபிலனிடம் தோற்றுப் போவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேம்புலி செய்யும் சதி அது. 

ரோஸிடம் வெளிப்படும் நேர்மையும் அறமும்

இந்தக் காட்சியின் போது ரோஸின் இன்னொரு விதமான பக்கத்தைப் பார்க்க முடிகிறது “ஏய்.... அசிங்கமா இல்ல..” வேம்புலி செய்த கேவலமான செயலை திட்டி விட்டுச் செல்கிறான் ரோஸ். தனது உயிருக்கு உயிரான நண்பனே தன்னை திட்டுவதைப் பார்த்து திகைத்துப் போகிறான் வேம்புலி. இந்த இடத்தில்தான் ரோஸின் அடிப்படையான நேர்மை வெளிப்படுகிறது. “உங்க கூட்டத்துலயே ரோஸ்தான் நல்லது.. தோல்வியை ஒத்துக்கிச்சு” என்று டாடியும் பிறகு வரும் ஒரு காட்சியில் ரோஸின் நேர்மை பற்றி பாராட்டுகிறார்.

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் வேம்புலிக்கும் கபிலனுக்கும் இடையே இன்னுமொரு ஆக்ரோஷமான சண்டை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று சார்பட்டா பரம்பரையின் மானத்தைக் காப்பாற்றி விடுகிறான் கபிலன். இந்த ஆட்டத்தில் வேம்புலி தோற்று விட்டாலும் அவனை நெருங்கி வரும் ரோஸ் “இப்ப ஆடின பார்.. இதான் ஆட்டம்.. நீ தோக்கல வேம்புலி” என்று மனமார பாராட்டுகிறான். 

நக்கல், துள்ளல், வீரம், நேர்மை என்று பல்வேறு குணாதிசயங்களின் மூலமும் தனது சுவாரசியமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு காரணமாகவும் ‘டான்சிங் ரோஸ்’ என்கிற பாத்திரத்தை மறக்க முடியாதபடியாக ஆக்கி விட்டார் ஷபீர்.

Dancing Rose ஷபீர் கல்லாரக்கல்

“இந்தப் பாத்திரத்தை மட்டுமே வைத்து ஒரு முழு திரைப்படம் வந்தால் நன்றாக இருக்கும்” என்று படம் வந்த புதிதில் ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு மக்களின் மனதைக் கவர்ந்தவர் ‘டான்சிங் ரோஸ்’.