VMC ஹனீபா Mahanadhi
கோலிவுட் செய்திகள்

எத்தனை முகபாவங்கள் VMC ஹனீபாவின் தனுஷ் கதாபாத்திரத்தை மறக்க முடியுமா..?

ஹனீஃபா, தமிழில் நடித்த திரைப்படங்களுள் மறக்க முடியாத படம் ‘மகாநதி’. இதில் ‘தனுஷ்’ என்பது அவரது பாத்திரத்தின் பெயர். கமலுக்கு இந்தப் பெயரின் மீது ஏதோவொரு ஆர்வம் இருக்கிறது போல.

சுரேஷ் கண்ணன்

வெள்ளந்தியான முகபாவம், அடுத்த நிமிடமே அதில் தோன்றும் எகத்தாளம், நயவஞ்சகம் என்று வெவ்வேறு எக்ஸ்பிரஷன்களை உடனுக்குடன் மாற்றி மாற்றி நடிக்கும் நடிகர்கள் குறைவு. (நோ.. நோ.. ‘வேதாளம்’ அஜித் எக்ஸ்பிரஷன் பற்றி இங்கு குறிப்பிடவில்லை). அவ்வாறு நடித்தாலும் அது இயல்பாகப் பொருந்தும் திறமை சிலருக்குத்தான் அமையும். இந்த பாணியில் ஒரு சிறப்பான நடிகராக கொச்சின் ஹனீஃபா என்று அறியப்படும் முஹம்மது ஹனீஃபாவைச் சொல்லலாம்.

முதல்வன் திரைப்படத்தில் இண்டர்வியூ காட்சியில் தன்னுடைய தலைவன் கேள்விக்கணைகளால் எசகுபிசகாக மாட்டிக் கொள்ளும் போது உள்ளே புகுந்து கலாட்டா செய்யும் ஹனீஃபாவிடம் ‘லைவ் போயிட்டிருக்கு’ என்று சொன்னவுடன் “அப்ப... காமிராவுல நானும் தெரிவனா?” என்று அப்பாவித்தனமாக கேட்கும் ஒரு முரட்டு அரசியல் அடியாள் நினைவிற்கு வருகிறாரா?

கலாபவன் என்கிற கலைக்குழுவில் நாடக நடிகராக தனது பயணத்தை துவக்கி மலையாளத்தில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர், ஹனீஃபா. பிறகு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறினார். ‘கிரீடம்’ படத்தில் இவர் ஏற்றிருந்த நகைச்சுவைப் பாத்திரம் பரவலாக கவனிக்கப்பட்டது. ஹனீஃபா திரைப்பட இயக்குநரும் கூட. தமிழில் ‘பாசப்பறவைகள்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியதோடு சிவாஜி, எந்திரன் என்று கணிசமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக நடித்தது ‘மதராசப்பட்டினம்’.

ஹனீஃபா, தமிழில் நடித்த திரைப்படங்களுள் மறக்க முடியாத படம் ‘மகாநதி’. இதில் ‘தனுஷ்’ என்பது அவரது பாத்திரத்தின் பெயர். கமலுக்கு இந்தப் பெயரின் மீது ஏதோவொரு ஆர்வம் இருக்கிறது போல. குருதிப்புனல் படத்திலும் ‘ஆப்ரேஷன் தனுஷ்’ என்று ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டியிருந்தார்.

எளியவர்களை எகத்தாளமாகப் பேசுவது, அதிகாரம் உள்ளவர்களிடம் பம்மிப் பதுங்கி, குழைவது, நைச்சியமாகப் பேசி விட்டு அடுத்த கணமே இன்னொருவரிடம் குரலை உயர்த்தி அதட்டுவது என்று ஓர் இடைத்தரகனின் உடல்மொழியை மிக நுட்பமாகவும் கச்சிதமாகவும் ‘மகாநதி’ படத்தில் பின்பற்றியிருந்தார் ஹனீஃபா.

VMC ஹனீபா

தனது நண்பனின் கார் என்று தவறாக நினைத்து ஓவர்டேக் செய்து ஹனீஃபா காரின் மீது இடித்து விடுவார் கமல். ஆடம்பரம் தொனிக்கும் பூப்போட்ட சட்டையில் பந்தாவாக இறங்கும் ஹனீஃபா “இது பென்ஸ் வண்டிய்யா.. ஸ்கிராட்ச் பண்ணிட்ட.. இங்க போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?” என்று சவடாலாகப் பேசி கலாட்டா செய்வார். ஆனால் ‘திருநாகேஸ்வரம்’ என்கிற அந்த ஊரில் கமல் செல்வாக்கு பெற்ற மனிதர் என்பதால் அருகிலுள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் உடனே வந்து சூழ்ந்து கொள்வார்கள். ‘எங்க ஐயா கிட்டயா வம்பு பண்ற.. மன்னிப்பு கேளுய்யா” என்று ஹனீஃபாவை மிரட்டுவார்கள். “என் மேலதான் தப்பு. நீங்க போங்க” என்று கமல் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்புவார்.

இப்போது ஹனீஃபாவின் உடல்மொழி அப்படியே மாறி விடும். உடல் மடங்கிய நிலையில் ‘நீங்க இந்த ஊர் எம்.எல்.ஏ.வா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டு பம்முவார். கார் பழுதாகும் வரை கமலின் வீட்டில் ஹனீஃபாவும் துளசியும் தங்குவார்கள். பெட்டிக்கடைகளில் தொங்குவது போல சரம்சரமாக இருக்கும் விசிட்டிங் கார்டுகளை அள்ளி வழங்கும் தனுஷ், தன்னை பெரிய பிஸ்னஸ் மாக்னெட் போல் கமலிடம் காட்டிக் கொள்வார்.

அதைத் தயக்கத்துடன் வாங்கும் கமல் திருப்பிக் கொடுக்க “வெச்சுக்க. வெச்சுக்க” என்று ஒருமைக்கு மாறி விடுவார். தனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கும் சமயத்தில் ‘சார். சார்.’ என்று கொஞ்சுவார். இப்படி விதம் விதமான மாடுலேஷன்களில், முகபாவங்களில் மாறும் ஹனீஃபாவின் நடிப்பைக் காண பிரமிப்பாக இருக்கும். பசுத்தோல் போர்த்திய வில்லன் போல கொடூரமான பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். மலையாள வாசனையுடன் வெளிப்படும் இவரது தமிழ் உச்சரிப்பு கூட அதிகம் உறுத்தாமல் அவரது நடிப்புடன் பொருந்தி விடும்.

“கிருஷ்ணா. நீங்க உக்காந்த இடத்துல இருந்தே அம்பது பிஸ்னஸ் பண்ணலாம். அததுக்கு சரியான ஆளைப் போட்டா போதும்” என்று மெல்ல வலையை விரிப்பார் தனுஷ். சீவல் ஃபாக்டரியின் மூலம் கமலுக்கு நிறைய சொத்து இருக்கிறது என்பதை மோப்பம் பிடித்து விடுவார். ஹனீஃபாவின் வலை சரியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். ‘இந்த சிட்பண்ட் ஆரம்பக்கணும்னா.. எவ்வளவு முதலீடு தேவைப்படும்?” என்று கமல் தயங்கியபடியே கேட்டவுடன் ஹனீஃபாவின் முகத்தில் ‘மீன் மாட்டிக் கொண்டது’ என்பது மாதிரியான சந்தோஷம் ஏற்படும். அந்தக் குதூலகத்தை சிரித்தபடியே துளசியுடன் பார்வையால் பகிர்ந்து கொள்வார்.

OPM என்பது ஹனீஃபா தரும் ஐடியா. அதாவது Other People’s Money. அடுத்தவன் காசை எடுத்து ரம்மி ஆடும் இந்தத் திட்டத்தை ஹனீஃபா விளக்க, ‘அதெல்லாம் எனக்கு வேணாம். OPM.. அதாவது Own personal money..” என்று கமல் சொல்லுமிடத்தில் வசனம் எழுதியவரின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ‘பார்த்தியா.. மஞ்சு.. ஓன் பர்சனல் மணியாம்” என்று சொல்லி ஹனீஃபா சிரிப்பார். ஒன்றுமில்லாததை ஊதிப் பெருக்கி உரக்க சிரிக்கும் தரகர்களின் உடல்மொழி ஹனீஃபாவிடம் சிறப்பாக வெளிப்படும்.

இந்தக் கிராமத்து பட்டிக்காட்டில் மாட்டிக் கொள்ளாமல் நகரம் வந்து செட்டில் ஆக வேண்டும் என்கிற விதையை கமலிடம் ஹனீஃபா இடுவார். “உங்க பொண்ணு புத்திசாலி... சர்ச்பார்க்ல படிக்க வேண்டிய பொண்ணு.. ஜெயலலிதா படிச்ச ஸ்கூல்” என்று ஆசை விதைகளை சரியாகத் தூவுவார். கமலுடைய மகள் காவேரி தூக்கக் கலக்கத்தில் ‘அந்தத் தடியனோட பென்ஸ் கார் மாதிரி ஒண்ணு வாங்கணும்” என்று சொல்ல கமல் அதைச் சமாளிக்க முயல “நான் தடியன்தானே?!” என்று சுயபகடியுடன் சொல்லிச் சிரிப்பார் ஹனீஃபா.

கட் செய்தால் அடுத்தக் காட்சியில் சிட்பண்ட் கம்பெனியின் துவக்க விழா நடைபெறும். அங்கு முக்கிய பிரமுகராக ஹனீஃபாவின் ஆரவாரம்தான் அதிகமாக இருக்கும். ஆனால் யாராவது கேட்டால் ‘இவர்தான் எல்லாம்..” என்று கமலை ஜாக்கிரதையாக முன்னிறுத்துவார். பூஜையின் போது வரும் ஒரு பூனையைப் பார்த்து கமல் வீட்டு நாய் தொடர்ந்து குலைக்க “அங்க பாருங்க சார்.. மழை. நல்ல சகுனம்.. சார்” என்று திசைதிருப்புவார் ஹனீஃபா. நிறுவனத்தை திறக்க வரும் வெங்கடாச்சலத்திடம் முதுகு வளைந்து ஹனீஃபா கொஞ்சி கொஞ்சி விசாரிப்பதும் பம்முவதும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சி. முதல் தொகையாக வெங்கடாச்சலம் தரும் செக்கை மிகையான பரவசத்துடன் வாங்கிக் கொண்டு கமலைப் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பார்..

கமலின் குடும்பம் தங்குவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்யும் ஹனீஃபா, அங்கு ஏஸி, பிரிட்ஜ் என்று சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து தருவார். அங்கிருக்கும் வேலையாட்களை “சீக்கிரம் முடிங்கடா” என்று அதட்டும் அதே சமயத்தில் குழந்தைகளிடம் “மாடில போய் பாரு” என்று கொஞ்சுவது போல உச்சரிப்புத் தொனியை மாற்றுவது ரசிக்க வைக்கும் நடிப்பு. “அம்மா.. என்னை நம்ப மாட்றாங்க.. நீங்கதான் சொல்லி பத்திரத்துல கையெழுத்து வாங்கணும்” என்று கமலிடம் வசனம் பேசுமிடத்தில், பள்ளிக்குச் செல்ல மறுக்கும் சிறுவன் போல கெஞ்சும் நடிப்பு அருமையாக இருக்கும்.

துளசியும் கமலும் தனியாக இருக்கும்படியான சந்தர்ப்பத்தை உருவாக்கும் ஹனீஃபா, ‘எக்ஸ்யூஸ்மி..’ என்று அவ்வப்போது உள்ளே வந்து “நீங்க பவர் ஆஃப் அட்டர்னில கையெழுத்து போட்டுக் கொடுத்துடுங்க.. உங்களுக்கு தொந்தரவே வராது” என்று சாமர்த்தியமாக கையெழுத்து வாங்கிக் கொள்வார். “வக்கீல் கிட்ட கேட்க வேணாமா?” என்று கமல் தயங்க “அப்ப.. சரி.. நீங்க என்னை நம்பலைல்ல..’ என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேறு வழியின்றி கமல் கையெழுத்திடுவார்.

துளசியை திருமணம் செய்து கொள்ளலாமா என்கிற மெல்லிய ஆசையில் இருக்கும் கமல், நடத்தை கெட்ட அவரின் சுயரூபத்தை அறிந்தவுடன் கோபத்துடன் விலகி விடுவார். மறுநாள் அலுவலகத்தில் அதைப் பற்றி ஹனீஃபாவிடம் சொல்ல “அவ வொர்க்கர் சார்.. சோக்ரி.. அவ செய்யற தப்புக்கு நான் என்ன பண்றது? நடத்தை சரியில்லையின்னா வெளில அனுப்பிச்சுடணும்.. இனிமே அந்தக் கழுதை வேணாம்” என்று சவடாலாகப் பேசிக் கொண்டே லாக்கரில் இருக்கும் பணத்தையெல்லாம் சூட்கேஸில் அடுக்குவார். அப்போது துளசி உள்ளே வரும் போது சட்டென்று தன்னுடைய உடல்மொழியை மாற்றிக் கொண்டு, இடுப்பில் கைவைத்துக் கொண்டு முதலாளியின் தோரணையில் “உன்னை வேலையை விட்டு அனுப்பிச்சாச்சு... கெட் அவுட்” என்று பாவனையாக பந்தா செய்வார்.

கமலுக்கு துரோகம் செய்து அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவருடைய குடும்பத்தையும் வீட்டை விட்டு துரத்தி விடுவார் ஹனீஃபா. இதைப் பற்றி கேட்பதற்காக கமலின் மாமியார் ஆத்திரத்துடன் ஹனீஃபாவின் அலுவலகத்தினுள் நுழைய “யாரு.. உள்ள விட்டது.. நீ என்ன புடுங்கிட்டு இருந்தியா?” என்று ரிஸப்னிஸ்ட்டை பார்த்து வெடிப்பார். அப்போது அவர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் அவர்கள் முன்பு இப்படி ஆனதே என்கிற சங்கடமும், கிழவியின் மூலம் தனது குட்டு வெளியாகிறதே என்கிற கலக்கமும் கலந்திருக்கும்.

அவமதிப்பு தாங்காமல் எஸ்.என்.லட்சுமி ஹனீஃபாவின் சட்டையைப் பிடித்து ஆவேசத்துடன் கேள்வி கேட்க, காட்சி துண்டாகி சிறுவன் சோபாவில் அமர்ந்திருப்பது காட்டப்படும். தலைமுடி கலைந்து அதிர்ச்சியான முகத்துடன் பாட்டி வெளியே வரும் போதுதான் ஹனீஃபாவால் அவர் தாக்கப்பட்டிருப்பது நமக்குப் புரியும். இது நேரடியாக காட்டப்படாது. (வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் பேட்டக்காரர் காவல்நிலையத்தில் தாக்கப்படும் காட்சியும் இதே பாணியில் இருக்கும்). பாட்டி இடிந்து போன முகத்துடன் வெளியேற, முகத்தில் சட்டென்று ஒரு புன்னகையை மாட்டிக் கொண்டு ‘ஸாரி.. ஃபிரெண்ட்ஸ்” என்று எதுவுமே நிகழாதது போல தனது மீட்டிங்கை தொடரச் செல்வார் ஹனீஃபா.

பாட்டியின் மருத்துவச் செலவிற்கு பணம் தேவைப்படுவதால் ஹனீஃபாவைத் தேடிச் செல்வார் கமலின் மகள். ‘எனக்கு ஏதாச்சும் வேலை வாங்கித் தாங்க’ என்று அவள் கேட்க அந்த பாழாய்ப் போன செயலை கருணையேயில்லாமல் செய்யத் துணிவார். வெங்கடாச்சலத்திற்கு போன் செய்து ‘உங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு சார்’ என்று குழைந்து குழைந்து பேசுவார். நிலைமையின் விபரீதம் புரியாமல் ‘டைப்ரைட்டிங் லோயர் பாஸ் பண்ணியிருக்கேன்னு சொல்லுங்க’ என்று கமலின் மகள் ஷோபனா சொல்ல வெடிச் சிரிப்புடன் பின்னால் ‘டைப்ரைட்டிங் பாஸாம்.. சார்’ என்று போனில் சொல்வார். அந்தச் சிரிப்பிற்குப் பின்னுள்ள வக்கிரம் பார்வையாளர்களைத் தாக்கி ‘அடப்பாவி’ என்று சொல்ல வைக்கும்.

வெங்கடாச்சலத்திடம் ஷோபனாவை அழைத்துச் சென்று ஒப்படைப்பதும், கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச முற்படும் போது வெங்கடாச்சலத்தால் ‘ம்’ என்று அதட்டப்பட்டவுடன் கையைச் சுருக்கிக் கொள்வதும், ‘எழுந்து வாடா’ என்று சிறுவனை வேண்டாவெறுப்பாக அழைத்துச் செல்வதும் என விதம் விதமான முகபாவங்களை மத்தாப்பு போல தந்து கொண்டேயிருப்பார் ஹனீஃபா.

“என்னோட பணத்தை திருப்பிக் கொடுத்துடு. நான் ஊருக்குப் போறேன்’ என்று கெஞ்சலான முகத்துடன் கேட்கும் கமலை, ஹனீஃபா இப்போது கையாளும் விதம் வேறு விதமாக இருக்கும். அவருடைய முகத்தில் இருந்த அப்பாவித்தனம், வெள்ளந்தியான முகபாவம் அத்தனையும் மறைந்து கொடூரம் தெரியும். கமலுடைய முகத்தில் ஷீக்காலால் மிதித்து “புடுங்கிடுவியா. நீ.. எனக்கு எத்தனை கனெக்ஷன் இருக்கு தெரியுமா..” என்று எகத்தாளமாகப் பேசுவார். “என் பொண்ணு எங்க இருக்கான்னு மட்டும் சொல்லிடு” என்று கமல் கெஞ்ச ‘சோனாகாச்’ பற்றி விபரீதமான சிரிப்புடன் சொல்லுவார் ஹனீஃபா. இங்கு கமலையும் பாராட்டியாக வேண்டும். வில்லனின் காலால் முகத்தில் உதை வாங்குமளவிற்கு இயல்பாக நடித்திருப்பார்.

வெங்கடாச்சலத்தை பழிவாங்குவதற்காக ஹனீஃபாவை அடித்து இழுத்துச் செல்வார் கமல். ‘உன்னால ஒண்ணும் பண்ண முடியாது கிருஷ்ணா.. அவரை நெருங்கவே முடியாது. வேணுமின்னா நெறைய பணம் வாங்கித் தரேன்” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சும் ஹனீஃபாவை முகத்திலேயே குத்துவார் கமல். பிறகு வெங்கடாசலத்தின் வீட்டை அடைந்ததும் கமலின் பின்னால் வரும் ஹனீஃபா, சட்டென்று ஒரு இரும்புக் கம்பியை எடுத்து கமலைத் தாக்க முயன்று, அவர் திரும்பியவுடன் முகம் மாறி “உங்க ஃசேஃப்ட்டிக்குத்தான்.. வெச்சுக்கங்க.. நீங்க அவரை கொலை செஞ்சா கூட உங்க கூடயே இருப்பேன்” என்று பம்மியவுடன் அவருடைய நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ளும் கமல், அதே கம்பியால் அடித்து வீழ்த்துவதோடு தனுஷின் கதை முடியும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி ஒரே காட்சியில் பல்வேறு முகபாவங்களை சட்சட்டென்று மாற்றி நடித்து பிரமிக்க வைத்த ஹனீஃபாவின் ‘தனுஷ்’ பாத்திரம் மறக்க முடியாத கேரக்ட்டர்களில் ஒன்று.