அந்த ஏழு நாட்கள் திரைப்படம் Youtube
கோலிவுட் செய்திகள்

மழலை மாறாத பாசத்துடன் ஒரு குறும்புக்கார அராத்து! பாலக்காட்டு மாதவனின் அசத்தல் காம்போ ‘எடோ... கோபி’

10-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் அந்த ஏழு நாட்கள் படத்தில் ஹாஜா ஷெரீஃப் ஏற்று நடித்த கோபி பற்றி பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

மாஸ்டர் ஹாஜா ஷெரீஃப் குழந்தை நட்சத்திரமாக உதிரிப்பூக்கள் உள்ளிட்டு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறகு இளைஞராகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தக் கதாபாத்திரம் அளித்த புகழ்தான் அவரது திரைவாழ்க்கையின் உச்சம் எனலாம்.

‘எடோ கோபி’… என்று சொன்னவுடனேயே ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் நடித்த அந்த ‘டோலக் சிறுவன்’ கண் முன்னால் வந்து நின்று விடுவான்.
அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

பாக்யராஜின் பாத்திர வடிமைப்பு, அற்புதமான திரைக்கதை, அட்டகாசமான டைரக்ஷன் ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் காரணமாக ‘கோபி’ பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கினார் ஹாஜா ஷெரீஃப்.

பாலக்காட்டு மாதவன் மற்றும் கோபி என்கிற இந்தக் கூட்டணியின் வசீகரமான கலவையை என்றுமே மறக்கவே முடியாது. இரண்டு கதாபாத்திரங்களின் வடிவமைப்பையும் சுவாரசியமாக உருவாக்கியிருப்பதோடு, அதை திரைக்கதையிலும் கச்சிதமாக உபயோகித்திருப்பார் பாக்யராஜ்.

மாதவன் + கோபி = அட்டகாசமான காம்போ

மாதவன் மிக நேர்மையானவர். வறுமையான சூழலிலும் சுயமரியாதையை இழக்க விரும்பாதவர்.  இசை மட்டும்தான் அவருக்குத் தெரியும். அதில் ஜெயிப்பதற்காக வெறி கொண்டு அலைகிறவர். இதனால் நேரம், காலம், பசி என்று எதுவுமே அவருக்குத் தெரியாது. இதற்கு நேரெதிர் பாத்திரம்தான் கோபி. பசி தாங்காத சிறுவன். அப்போதைய சூழலுக்கு ஏற்றபடி வளைந்து கொடுத்தால் தப்பில்லை என்று நினைக்கிறவன். அதைச் செயல்படுத்துகிறவன். சில விஷயங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருக்கிறவன். ஆனால் ஆசான் மீது அடிப்படையான பாசத்தை வைத்திருப்பவன்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

சினிமா சான்ஸ் தேடி மாதவனும் கோபியும் சென்னை நகரத்திற்குள் நுழைகிற ஆரம்பக் காட்சியே ரகளையாக இருக்கும். அது தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை. பின்னணியில் ஒருவர் எருமை மாட்டைப் பிடித்தபடி நடந்து செல்வார். அதைப் பிரதிபலிப்பது போல மாதவனின் பின்னால் கன்றுக்குட்டி மாதிரி நடந்து வருவான் கோபி. “ஆசானே.. பசிக்குது ஆசானே. பாலக்காட்டில டிரையின் ஏறும் போது ஒரு டீ வாங்கிக் கொடுத்தே. அத்தோட சென்ட்ரல் இறங்கும் போது ஒரு டீ வாங்கிக் கொடுத்தே. பசிக்குது ஆசானே..” என்று சிறுவனான கோபி அனத்தும் போது சிரிப்பாகவும் இருக்கும். பரிதாபமாகவும் இருக்கும்.

‘எடோ கோபி. நானே வீடு கிட்டில்லான்னு அலைஞ்சிட்டுண்டு.. நீ வேற’ என்று மாதவன் சிடுசிடுக்க “ஆமாம். பொண்டாட்டி ஊருக்குப் போயிருக்கான்னு பொய் சொன்னா. வீடு கிடைக்கும்” என்று நடைமுறை வழியைக் காட்டுவான் கோபி. அப்போதுதான் அந்த புகழ்பெற்ற வசனத்தை மாதவன் சொல்வார். “எடோ.. கோபி. ஈ லோகத்தில் யோக்கியன் எண்டு ஒருவன் உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்’ என்று சுயபெருமை பேசுவார்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

‘டூ லெட்’ என்று போர்டு மாட்டியிருக்கும் ஒரு வீட்டைப் பார்த்ததும் இருவரும் ஆவலாக அங்கு செல்வார்கள். ‘கோபி.. வீட்டில் ஆளு இருக்கான்னு கூப்பிடு” என்று மாதவன் சொல்ல, ‘ம்மோவ். யம்மா.. யாரும்மா வீட்ல’ என்று கோபி சத்தமாக அழைப்பான். ஹார்மோனிய பெட்டி, டோலக் என்று இவர்கள் நின்று கொண்டிருக்கும் கோலத்தைப் பார்த்து ‘பிச்சைக்காரர்கள்’ என்று நினைத்து விடும் அம்பிகா, சோறு கொண்டு வந்து ‘தட்டு எதுவும் இல்லையா?’ என்று கேட்க, ‘அப்படியே கொடுங்க’ என்று அள்ளி வாயில் போட்டு ஆசானை அவமானப்படுத்துவான் கோபி. ‘வீடு மட்டும் கிடைக்கட்டும். உன்னை உள்ளே கொண்டு போய் சவட்டிக் களையறேன்’ என்று பல்லைக் கடிப்பார் மாதவன்.

கோபி செய்யும் அநியாயமான குறும்புகள்

படிய வாரிய தலை, சட்டை, நிஜார் போட்டு இன்னமும் மழலை மாறாத முகத்துடன் இருப்பான் கோபி. அதே சமயத்தில் ‘அராத்து’ என்கிற களையும் கூடவே இருக்கும்.

பாத்ரூமில் தாழ்ப்பாள் இல்லாததால் ‘எடோ கோபி. நான் குளிக்கப் போறேன்.. கதவுக்கு தாள் இல்லா.. வெளியே நின்னு நோக்கிக்கோ’ என்று ஒன்றுக்கு இரண்டு முறை எச்சரித்தபடி குளிக்கச் செல்வார் மாதவன். “போய்ட்டு வாய்யா” என்று அலட்சியமாகச் சொன்னபடி வேண்டா வெறுப்பாக காவலுக்கு இருப்பான் கோபி. வெளியே பறையடிக்கும் சத்தம் கேட்கும். கோபிக்கு உடனே உற்சாகம் பெருகும். அந்தச் சத்தத்திற்கு ஏற்றபடி உடலை அசைத்து அப்படியே எழுந்து வெளியே ஓடுவான். அங்கு கூட்டமாக ஆடும் நபர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடத் துவங்குவான்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

பாத்ரூம் உள்ளே அதே சத்தத்திற்கு தானும் உடம்பை அசைத்தபடி ஆனந்தமாக குளியல் போட்டுக் கொண்டிருப்பார் மாதவன். இதை அறியாத அம்பிகா, திடீரென கதவைத் திறந்து விட ‘பப்பி ஷேம்’ கோலத்தில் அதிர்ச்சியடையும் மாதவன், பல்லைக்கடித்த படி ‘கோபி’ என்று கத்துவார். பிறகு துணியைச் சுற்றிக் கொண்டு வெளியே சென்று பார்த்தால் ரோட்டில் இறங்கி குத்தி ஆடிக் கொண்டிருப்பான் கோபி. அதே சத்தத்திற்கு இடையில் அவனைக் கீழே தள்ளி நையப் புடைக்கும் காட்சியில் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது.

கோபியை அனுப்பி இரண்டே இரண்டு இட்லி வாங்கி வரச் சொல்வார் மாதவன். அவ்வளவுதான் காசு இருக்கும். ‘கொஞ்சம் பெரிய குண்டாவா இருந்தா கொடுங்க.. அதுல சாம்பாரை வாங்கி இட்லியைப் போட்டு கரைச்சுக் குடிக்கணும்” என்று அம்பிகாவிடம் பாத்திரம் இரவல் கேட்பான் கோபி. “நான் வேணா காசு தரேன். நீ வயிறு நெறய சாப்பிட்டுட்டு வாயேன்” என்று பரிதாபத்துடன் உதவி செய்ய முன்வருவார் அம்பிகா. “அது எப்படிங்க.. ஆசானை விட்டுட்டு நான் மட்டும் சாப்பிடறது.. அது குரு துரோகம்” என்று கோபி சொல்லும் போது அவனிடமிருக்கும் பாசவுணர்ச்சி வெளிப்படும்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

ஹவுஸ்ஓனர் வீட்டில் நடக்கும் நவராத்திரி கொலுவில் சாப்பிடும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக அங்கு சென்று உட்கார்ந்திருப்பான் கோபி. அப்போது மற்றவர்கள் பாடுவதை எதிரொலித்து இவன் எதையோ ஆலாபனை செய்ய முயலும் போது, ‘எடோ... அது அப்படி அல்லடா’ என்று திருத்தம் செய்ய முயல்வார் மாதவன். ‘அட. சும்மா இருங்க ஆசானே.. சுண்டலுக்காக பாடற பாட்டு. எப்படி இருந்தா என்ன?’ என்று கோபி அலட்சியமாக சொல்வது சிரிப்பை வரவழைக்கும்.

காதலுக்கு தூது போகும் கோபி

எத்தனை ஜாடை மாடையாக சொல்லியும் தன் காதலைப் புரிந்து கொள்ளாத பாக்யராஜிற்கு எப்படித்தான் உணர்த்துவது..? என்று கோபியிடம் ஐடியா கேட்பார் அம்பிகா. “இதே நானா இருந்தா... பீச்சு. சினிமா.. பார்க்கு.. ன்னு பிக்கப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

அந்தாளுக்கு வெவரம் பத்தாதுங்க” என்று கோபி ‘பெரிய மனுஷத்தனமாக’ சொன்னவுடன் கோபமடையும் அம்பிகா, ‘உன் வயசுக்கு இப்படியெல்லாம் பேசலாமா?’ என்று கடுகடுக்க “நீங்க மட்டும் உங்க வயசுக்கு என்னை மாதிரி பசங்களை தூது அனுப்பலாமா?” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு கோபி கேட்க, அடக்க முடியாமல் அம்பிகா சிரித்து விடுவார். பிறகு ‘தப்புத்தாண்டா’ என்று ஒப்புக் கொள்வார்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்.. நீங்களா ஏதாவது ஒரு பாட்டு வரி எழுதிட்டுப் போய்.. அதுக்கு டியூன் போட முடியுமான்னு கேளுங்க.. அந்தப் பாட்டுல உங்க மனசுல இருக்கறதையெல்லாம் எழுதுங்க” என்று கோபி ஐடியா கொடுக்க ‘நல்லாயிருக்குடா..” என்று செயல்படுத்தத் துவங்குவார் அம்பிகா.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

‘உனக்கும் எனக்கும்தான் பொருத்தம், இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்..’ என்கிற சினிமாப் பாடல் வரிகளை எழுதிச் செல்லும் அம்பிகா, அதற்கு டியூன் போட முடியுமா என்று மாதவனிடம் சவால் விட, அந்த வரிகளுக்கும் இழுவையான ராகத்தில் மெட்டுப் போட்டு பாடுவார். ‘இந்தாளுக்கு எப்படித்தான் தன் காதலை உணர்த்தித் தொலைவது’ என்று அம்பிகாவிற்கு வரும் கோபத்தைப் பார்க்க சிரிப்பாக இருக்கும். தமிழ் அவ்வளவாக தெரியாத மாதவனிடம் ‘நான் ஒரு வாத்து’ என்கிற வரியை அடுத்ததாக அம்பிகா சொல்ல, அதற்கும் இழுவையான ராகத்துடன் மெட்டுப் போட்டு மாதவன் பாட, அம்பிகாவும் கோபியும் இணைந்து சிரிப்பது சுவாரசியமான காட்சி.

காமெடி சீனை சட்டென்று சென்டிமென்ட் ஆக்கும் பாக்யராஜ்

பணத்திற்காக பாக்யராஜ் கஷ்டப்படுவதைப் பார்த்து தன் வளையலை அடமானம் வைத்து மணியார்டரில் பணம் அனுப்புவார் அம்பிகா. அதைத் தெரிந்து கொள்ளும் பாக்யராஜ், கோபியின் கன்னத்தில் அடித்து வளையலை மீட்டு வரச் சொல்வார். “ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்க தெரியலை.. நீயேல்லாம் என்னய்யா மியூசிக் போடப் போறே?” என்று ஆத்திரம் தாங்காமல் கோபி கேட்பான்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

“அப்படி இல்லடா கோபி.. மலையாளியான நான்.. தமிழ்ப் பொண்ணை காதலிச்சா.. மலையாளிகளுக்கு கெட்ட பெயர் வரும்.. அவளுக்கும் ஒரு தங்கச்சி இருக்கா.. எங்க காதலை அவங்க வீட்ல ஒத்துக்கவும் மாட்டாங்க” என்று தன் தரப்பு நியாயத்தை பாக்யராஜ் விவரித்தவுடன் “உங்க மனசு புரியாமப் பேசிட்டேன். மன்னிச்சுக்கங்க ஆசானே” என்று கலங்குவான் கோபி. நகைச்சுவையாக நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிக் கோர்வையில் சட்டென்று ஒரு உணர்ச்சிகரமான சென்டிமென்ட் சீனை நுழைப்பது பாக்யராஜின் திறமைகளுள் ஒன்று. அதுவரை பார்வையாளர்களுக்குக் கூட ‘என்னய்யா.. இந்தாளு’ என்று  பாக்யராஜின் மீது கோபமாகத்தான் வரும்.

இதற்குப் பிறகு காதல் திருமணம் செய்யப் போகும் ஜோடியைப் பிரித்து பெண்வீ்ட்டார் பாக்யராஜை அடித்து துரத்தி விடுவதாக கதை நகரும். மாதவனும் கோபியும் வீடிழந்து மறுபடியும் வேலை தேடி ரோட்டில் அலைவார்கள். “ஆசானே.. நீங்க இப்படிக்கா போங்க. நான் இப்படி போறேன்’ என்று கோபி சொல்ல, ‘எனக்கு தமிழ் சரியா தெரியாதடா.. நான் வேலை கேட்டு.. எப்படி?’என்று மாதவன் தயங்க “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா’ன்னு ஒரு பழமொழி இருக்கு.. எங்க ஊரு அப்படி. போய்க் கேளுங்க” என்று தமிழர் கலாசாரத்தை ஒற்றை வரியில் சொல்லி விடுவான் கோபி.

கடை முதலாளியாகும் கோபி

எங்கும் வேலை கிடைக்காத காரணத்தால், பேன்ஸி அயிட்டம் பொருட்களை திருடி பிளாட்பாரத்தில் கடை போட்டு ‘எது எடுத்தாலும் ஐம்பது பைசா..’ என்று பிஸ்னஸ்மேன் ஆகி விடுவான் கோபி. பாக்யராஜ் அதிர்ச்சியடைந்து இது பற்றி விசாரிக்க “வியாபார நேரம்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க. ஆசான.. இந்தாங்க ரெண்டு ரூபா. டீ சாப்ட்டு வாங்க.. மத்த கடைங்கள்ல அதிக விலைக்கு விக்கறாங்க.. நான் இதை ஒரு சேவையா பண்ணிட்டு வரேன்” என்று அலட்டலாகப் பேசுவான் கோபி.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

ஆனால் சிறிது நேரத்திலேயே போலீஸ்காரர்கள் வந்து அனைத்தையும் அள்ளிக் கொண்டு செல்வார்கள். அதற்கு கீழே ‘திருடாதே’ என்கிற எம்.ஜி.ஆர் போஸ்டர் இருக்கும். இப்படியாக காமெடிக்கு இடையிலே ஒரு நல்லொழுக்க வகுப்பையும் நைசாக ஒளித்து வைத்திருப்பார் பாக்யராஜ்.

அடுத்த முறை கோபியைப் பார்க்கும் போது தனியாக கடை போட்டு (கோபி பேன்ஸி ஸ்டோர்ஸ்) இன்னமும் உயர்ந்திருப்பான். ஜிப்பா, கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டு ஆளே ஒரு மார்க்கமாக இருப்பான். கூட உதவி செய்வதற்கு ஒரு வயதானவர் வேறு.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

“ஏண்டா.. இப்படில்லாம் ஏமாத்தி சம்பாதிக்கற?” என்று மாதவன் கேட்க “அதெல்லாம் கோயில் குளம் போயி மொட்டை போட்டா புண்ணியம் கிடைச்சுடும்” என்று எம்.ஆர்.ராதா வாசனையோடு மிதப்பாக பதிலளிப்பான் கோபி. மாதவன் இவனைத் திட்ட ஆரம்பிக்க “என் கிட்ட வேலை செய்யறவன் வரான். மரியாதையா பேசு” என்று ஆசானுக்கே சீன் போட்டு காண்பிப்பான் கோபி.

இன்னொரு முறை ஆசானிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு கோபி எங்கோ சென்றிருக்க, ஆசான் மெட்டுப் போடுவதில் லயித்திருக்க அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் யாரோ அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள். வந்து பார்க்கும் கோபி, இதைக் கண்டு அதிர்ச்சியடைவான். அப்போது யாரோ ஒரு வாடிக்கையாளர் வந்து பொருளை விசாரிக்க “யோவ்.. ஆசானே.. ரெகுலர் கஸ்டமர் வர்ற அளவுக்கு டெலவப் ஆயிட்டு இருந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்டியே” என்று கோபி புலம்ப “எனக்கு அப்பவே தெரியும். இதெல்லாம் நிலைக்காதுடா கோபி’ என்று புத்திமதி சொல்லி அழைத்துச் செல்வார் மாதவன்.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

கடையில் அனைத்துப் பொருட்களும் திருட்டுப் போயிருக்க ‘டோலக்’ மட்டும் அப்படியே இருக்கும். ‘இதில இருந்து என்ன தெரியுது” என்று மாதவன் மாரல் கிளாஸ் எடுக்க முயல “உங்க கூட இருந்தா. கடைசி வரைக்கும் டோலக்தான் அடிக்க வேண்டியிருக்கும்ன்னு புரியுது’ என்று இடக்காக பதில் சொல்வான் கோபி.

‘ரெண்டு ஆப்பிள் ஜுஸ்’…

சில காட்சிகள் நகர்ந்த பிறகு, மாதவனுக்கு மியூசிக் டைரக்டர் ஆக ஒரு சான்ஸ் கிடைக்கும். தயாரிப்பாளரே இவரைத் தேடி வருவார். (படம் பார்த்தவர்களுக்கு அவர் யார் என்பது தெரியும்). ஹோட்டலில் இவர்களுக்கு ரூம் போட்டு ‘டியூன் ஏதாவது போட்டுக் காண்பிங்க’ என்பார். அப்போது ரூம் சர்வீஸ் வந்து ‘ஏதாவது வேணுமா’ என்று கேட்க ‘ரெண்டு ஆப்பிள் ஜூஸ்’ என்று மிதப்பாகச் சொல்வான் கோபி.

அந்த ஏழு நாட்கள் திரைப்படம்

‘எடோ கோபி. என் லைஃப்லயே இப்பத்தான் முதன் முதலாயிட்டு ஒரு சான்ஸ் கிட்டி. ஆப்பிள் ஜூஸ்லாம் கேட்டு அதைக் கெடுத்துடுவே போலயே’ என்று மாதவன் திட்ட “அடப்போங்க.. ஆசானே.. பணம் வருமான்னு இல்லையான்னு தெரியாது. ஜூஸ்ஸாவது குடிச்சு உடம்பைத் தேத்திக்குவோம்’ என்று கோபி சொல்லும் வசனத்திலிருந்து சினிமாத்துறையின் மீதான கிண்டலையும் செருகியிருப்பார் பாக்யராஜ். ‘ஆசானே.. மறக்காம கம்போஸிங் பேட்டாவை வாங்கித் தந்துடுங்க’ என்று உஷாராக கேட்பான் கோபி.

கவுண்டமணி – செந்தில், வடிவேலு – கோவை சரளா, பார்த்திபன் – வடிவேலு எத்தனையோ விதமான நகைச்சுவைக் கூட்டணிகளைப் பார்த்திருப்போம். ஆனால் பாலக்காட்டு மாதவன் – கோபி என்கிற இந்தக் கூட்டணி எப்போதுமே ஸ்பெஷல்.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு சினிமாத் துறையில் இருந்தே காஜா ஷெரீஃப் ஒதுங்கி விட்டது துரதிர்ஷ்டம். ‘எடோ கோபி’ என்றுமே மறக்க முடியாத குறும்புக்காரன்.