viswaroopam 2 புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | விஸ்வரூபம் 2 | ஆர்ப்பாட்டமில்லா தந்திர வில்லன் ‘ஈஸ்வர அய்யர்’

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தில் ‘அனந்த் மகாதேவன்’ ஏற்று நடித்திருந்த ‘ஈஸ்வர அய்யர்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

விஸ்வரூபம் 2 

இத்திரைப்படம் வெளியாகி இந்த வாரத்தோடு ஆறு வருடங்கள் ஆகின்றன. இந்நேரத்தில் அந்தப் படத்தை நினைவுகூரும் விதமாக, அதில் வரும் ஒரு சுவாரசியமான பாத்திரத்தைப் பற்றி பார்ப்போம். மிக நுட்பமான நடிப்பை வழங்கியிருக்கும் அந்த மிகச் சிறந்த நடிகரை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. 

'பாபநாசம்’ திரைப்படத்தில், கொல்லப்பட்ட இளைஞனின் தந்தையாக ஒருவர் நடித்திருப்பார். மகன் காணாமல் போன ஆத்திரத்தில், உயர்காவல் அதிகாரியாக இருக்கும் தன்னுடைய மனைவி அதிகாரத்தை வைத்து அழிச்சாட்டியம் செய்யும் போது அவரைக் கட்டுப்படுத்தும் மனசாட்சியாக நடித்திருப்பார்.

பாபநாசம் திரைப்படத்தில் அனந்த் மகாதேவன் - ஆஷா சரத்

அந்த தேர்ச்சியான நடிப்பைக் கவனித்திருந்தவர்கள், நிச்சயம் அவரை மனதிற்குள் வியந்திருப்பாாகள். நடிப்பு என்பதே தெரியாத அளவிற்கு அமைதியான, ஆனால் ஆழமான பங்களிப்பைத் தந்திருப்பார். அந்தத் திறமையான நடிப்பிற்குப் பின்னால் அவருடைய கணிசமான அனுபவமும் உழைப்பும் இருக்கிறது. யார் அவர்?

அனந்த் மகாதேவன்

நாடகத் திரையும் வெள்ளித் திரையும் கலந்த அனுபவம்

இந்தித் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர் அனந்த். அதையும் தாண்டி திரைக்கதையாசிரியர், இயக்குநர், நாடக நடிகர் என்கிற பல முகங்களைக் கொண்டவர். இந்தியிலும் மராத்தியிலும் சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்தப் படங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றுள்ளன. அதற்கும் முன்பு, அதாவது எண்பதுகளின் காலக்கட்டம் முதற்கொண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் அனந்த் மகாதேவன் ஏற்றது ஒரு தேசத்துரோகியின் பாத்திரம்.
Ananth Mahadevan

‘ஈஸ்வர அய்யர்’ என்கிற அந்த கேரக்டரைப் பற்றி வர்ணிக்கும் போது விஸ்வநாதன் என்கிற விஸாம்  இப்படியாகச் சொல்லுவார். “தேசம்-ன்ற நம்பிக்கை பெரிசா இல்லாத..... ஒரு நாடோடி. தேவைப்படும் போது என்னோட தேசிய கீதத்தையும் பாடுவார்”.

இன்னொரு இடத்தில், ஈஸ்வரால் தான் அவமானப்பட நேரும் போது “நான் கோட்டு சூட்டு போட்ட மாமா இல்ல. டெல்லில பேனா பிடிச்சிட்டு மினிஸ்டருக்கு ஜால்ரா அடிக்கறவனும் இல்ல” என்று பதிலடி தருவார். விஸாமின் இந்தக் கோபமான வார்த்தைகளின் மூலம் அந்தக் கேரக்டரின் தன்மை நமக்கு தெளிவாகப் புரிந்து விடும். 

Bureaucrat என்றொரு வர்க்கம் இருக்கிறது. பிரம்மாண்டமான அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான உதிரி பாகம் அது. என்னதான் அதிகாரம் என்பது அமைச்சர்களிடம் இருப்பது என்றாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துபவர்கள்  அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளே. அதற்கான பட்டறிவையும் அனுபவத்தையும் கொண்டவர்கள்.

அனந்த் மகாதேவன்

இவர்களில் தேசநலனில் அக்கறையுள்ள நேர்மையாளர்கள் பலர் உண்டு. அவர்களால்தான் தேசத்தின் வளர்ச்சி நகர்கிறது. ஆனால் இவர்களில் சில புல்லுருவிகளும் உண்டு. சுயலாபத்திற்காக சொந்த தேசத்தை விலை பேசுபவர்கள். அப்படிப்பட்ட புல்லுருவிகளில் ஒருவர்தான் ஈஸ்வர அய்யர். 

ஈஸ்வரின் சதி வேலைகளும் விஸாமின் பதிலடிகளும்

விஸாம் மற்றும் அவரது டீமை ஒழித்துக் கட்டுவதற்கான சதி வேலையில் ஈடுபடுகிறார் ஈஸ்வர அய்யர். டாக்கின்ஸ் சடலத்தை ஒப்படைத்து இறுதி மரியாதை செலுத்துவதற்காக விஸாம், கர்னல் ஜகன்னாத், நிருபமா, அஷ்மிதா ஆகியோர் யூ.கேவில் ஒரு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஏர்போர்ட்டில் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கிறார் கோஸ்வாமி. இவருடைய பாஸ் ஈஸ்வர்.

அனந்த் மகாதேவன்

இன்னொரு டிபார்ட்மெண்ட் ஆசாமி என்றாலும் மேஜர் ஜகன்னாத் உயர் பொறுப்பில் இருப்பவர். அவரை தன்னால் வரவேற்க வர இயலவில்லை என்பதை அலைபேசியில் பணிவாக சொல்கிறார் ஈஸ்வர். போனை எடுக்கும் கோஸ்வாமியிடம் “மேஜர் ஜெகன்னாதனிடம் கொடு” என்பதை உத்தரவு போல் ஆங்கிலத்தில் அமர்த்தலாக சொல்கிறார் ஈஸ்வர். 

அனந்த் மகாதேவன்

ஜகன்னாத் இணைப்பில் வந்ததும் ஈஸ்வரின் தொனி அப்படியே தலைகீழாக மாறுகிறது. “ஹலோ.. சார்.. நான் ஈஸ்வர அய்யர்.. இஸ்லாமாபாத்துக்கு டெபுடேஷனுக்கு போறதுக்கு முன்னால என்னை ப்ளெஸ் பண்ணேள்.. ஞாபகமிருக்கா?” என்று குழைகிறார். 

ஒரு மூத்த அதிகாரியிடம் பேசும் போது அலுவலக விஷயத்தைத் தாண்டி தனிப்பட்ட நெருக்கத்தை நினைவுப்படுத்துவது ஒருவகையான நடைமுறை தந்திரம். அப்படியொரு குழைவு ஈஸ்வர அய்யரிடம் வெளிப்படுகிறது. முந்தைய இரவு விருந்தில் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தன்னால் நேரில் வர முடியவில்லை என்பதை பாவனையான வருத்தம் தெரிவிக்கும் குரலில் சொல்கிறார் ஈஸ்வர். 

அனந்த் மகாதேவன்

அலட்டல் இல்லாத நடிப்பு - அனந்த் மகாதேவன்

அந்தப் பாவனையான மரியாதையை எரிச்சலுடன் சட்டென்று துண்டிக்கும் ஜகன்னாத் “இவன். ஒருத்தன்.. வேற எதிரியே நமக்கு வேணாம்” என்று கசப்பான சிரிப்புடன் சொல்கிறார். அவர்களை வரவேற்க  ஈஸ்வர் ஏர்போர்ட்டிற்கு செல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது என்பதை பின்னர் அறிகிறோம். காரில் பயணிக்கும் அவர்களை ஒரு பயங்கரவாதக் குழு ராக்கெட் லான்ச்சர் கொண்டு தாக்குகிறது. இந்தச் சதியை  கடைசி நொடியில் கவனித்து விடும் விஸாம், வண்டியை மின்னல் வேகத்தில் திருப்புகிறான். என்றாலும் கோஸ்வாமி இறக்க நேர்கிறது.

இந்த அலைபேசி உரையாடலில் ஈஸ்வராக நடித்திருக்கும் அனந்த் மகாதேவனின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது. அவருடைய நாடக மேடை அனுபவம் நன்கு வெளிப்படுகிறது. அனந்த் மகாதேவன் திருச்சூரில் பிறந்தவர். தமிழ் பிராமணக் குடும்பம். எனவே மலையாள வாசனை மெலிதாக வீசும் அவருடைய தமிழ் உச்சரிப்பைக் கேட்பதற்கு விநோதமான இன்பமாக இருக்கிறது. 

அனந்த் மகாதேவன்

காட்சிகள் நகர்கின்றன. தங்களைத் தாக்க வந்த பயங்கரவாதிகளைக் கொன்று தப்பிக்க வேண்டிய சூழல் விஸாமிற்கு நேர்கிறது. ஆனால் இதை ஈஸ்வர் பலமாக ஆட்சேபிக்கிறார். இந்தக் காட்சி சூடும் சுவையுமாக உருவாக்கப்பட்டிருந்தது.

“என்ன இருந்தாலும் நீங்க ஒரு முஸ்லிம்தானே?”

“கொஞ்சம் விவேகமா நடந்து அவனை உயிரோட பிடிச்சிருந்தா ஒரு லீட் கிடைச்சிருக்கும். நாமளும் டெரரிஸ்ட் மாதிரி நடந்தா எப்படி?” என்று விஸாமை பாவனையாக ஆட்சேபிக்கிறார் ஈஸ்வர்.

“யாருமே தீவிரவாதத்தை விரும்பி ஏத்துக்கறதில்ல. அவங்களும் சரி.. நாமளும் சரி. இப்படி மாறி மாறி கொன்னுக்கறதை விட்டுட்டு அரசியல்வாதிகள் நேர்மையா சமரசம் பேசினாலே தீவிரவாதம் குறையும்” என்று காட்டமாக சொல்கிறார் விஸாம். 

அனந்த் மகாதேவன்

பரஸ்பர ஈகோவை தூண்டும் வகையில் பயணிக்கும் இந்த உரையாடலில் சூடு அதிகரித்து “நீயே நம்ம ஆளு இல்லைன்னு தோணுது. என்ன இருந்தாலும் நீங்க ஒரு முஸ்லிம்தானே?” என்று விஸாமின் மதத்தையொட்டி பதில் தாக்குதல் நடத்துகிறார் ஈஸ்வர்.

“நான் ஜிஹாதிங்க கூட தொழுதேன். அவங்களுக்காகவும் தொழுதேன். உங்களுக்காகவும் தொழுவேன். எந்த மதத்தைச் சேர்ந்தவனா இருந்தாலும் பாவமில்ல பிரதர். ஆனா தேசத் துரோகியா இருக்கறதுதான் பாவம்” என்று கோபத்துடன் வெடிக்கிறார் விஸாம். “அப்ப.. என்னை துரோகின்னு சொல்றீங்களா?” என்று அடிபட்ட குரலில் கேட்கும் ஈஸ்வர் அங்கிருந்து வெறுப்புடனும் கோபத்துடனும் கிளம்ப முனைகிறார். 

இந்தக் காட்சியில் அனந்த் மகாதேவனின் முகபாவத்தைக் கவனித்தால் மிகையான நடிப்போ ஆவேசமோ துளி கூட இருக்காது. மிகவும் சின்னச் சின்ன ரியாக்ஷன்கள் மட்டுமே இருக்கும். அதுவும் அமைதியான தொனியில் இருக்கும். ஆனால் காட்சியின் சூழலுக்கு அவை பொருத்தமாகவும் அமைந்து விடும்.

ஈஸ்வர் ஒளித்து வைத்திருந்த ஒட்டுக் கேட்புக் கருவியை அஸ்மிதாவின் உதவியுடன் கண்டெடுக்கும் விஸாம், “நீங்க பகர் ஆகறதுக்கு முன்னாடில இருந்தே இந்த பக்கிங் பிஸ்னஸ்ல நான் இருக்கேன்” என்று ஈஸ்வரின் மூக்கை, மன்னிக்கவும் காதை உடைப்பது சுவாரசியமான காட்சி. 

அனந்த் மகாதேவன்

ஆர்ப்பாட்டம் துளியும் அற்ற வில்லத்தனம்

முன்னாவர் என்கிற ஐஎஸ்ஐ ஏஜெண்ட்டின் மூலம் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்ததாக சொல்லும் ஈஸ்வர், விஸாமை அங்கு செல்ல வைப்பார். விஸாமைக் கொல்வதற்காக ஈஸ்வர் அடுத்த முறை  விரிக்கும் வலை அது. “நான் வேணா பாதுகாப்புக்கு நாலைஞ்சு பேரை கூட அனுப்பட்டுமா.. ஆனா அவங்க டிரையின்ட் இல்ல. சிவிலியன்ஸ்தான்.. இல்லாட்டி மீட்டிங்கை கேன்சல் செஞ்சுட்டு நானும் வரட்டுமா?” என்றெல்லாம் தந்திரமாகப் பேசும் போது அனந்த் மகாதேவனின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கும். 

தீவிரவாதிகளின் இருப்பிடமாகச் சொல்லப்பட்ட கட்டிடத்திற்குள் விஸாம் நுழைய “அங்க ஃபேஸ்மெண்ட் ஏதாச்சும் இருக்கா.. பாருங்கோ” என்று தூண்டி விடும் ஈஸ்வர், “தனியாப் போகாதீங்கோ.. நான் வேணா ஒரு டீமை அனுப்பறேன். வொி டேன்சரஸ்.. என்னத்துக்கு இந்த முரட்டு வீரம்” என்று போலிக் கரிசனத்துடன் சொல்லுவார். அது விஸாமின் ஈகோவை தூண்டி விடுவது போலவும் இருக்கும். அப்போது அவரது உதடுகள் தன்னிச்சையாக நடுங்கும். அங்கு வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்வார் விஸாம்.

அனந்த் மகாதேவன்

உள்பக்கம் சென்று விட்டால் வெளியே வர முடியாதவாறு கதவில் செட்டப் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்து விடும் விஸாமிற்கு அப்போதுதான் இது தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது புரிய வரும். ‘யா. அல்லா..’ என்றபடி சட்டென்று வெளியே வந்து விடும் விஸாம், “கதவு திறக்க வரலையே?’ என்று போலியாக சொன்னவுடன் தன்னுடைய மொபைலின் மூலம் வெடிகுண்டை இயக்குவார் ஈஸ்வர். பிறகு சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டு சின்னதாக ஒரு பெருமூச்சு விடுவார். அவ்வளவுதான். ‘ஹா.ஹா..’ என்று பழைய கால வில்லன்கள் போல ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லை. 

தேசத் துரோகியின் தற்கொலை முடிவு

“நம்ப பிரெண்டு போயிட்டாரு. நீ அந்தப் பொண்ணுங்களை சரியா கவனிச்சு அனுப்பிச்சுடு" என்று முனாவருக்கு தகவல் சொல்லும் போது ஈஸ்வரின் முகத்தில் மெல்லிய திருப்தியும் மகிழ்ச்சியும் தென்படும். ஆனால் அது தற்காலிகம்தான். விஸாம் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை சில நிமிடங்களில் அறியும் போது சற்று திகைப்பு ஏற்படும். “ஓகே.. நீ எங்கயாவது மறைஞ்சுடு” என்று முனாவருக்கு கட்டளையிடுவார். 

அனந்த் மகாதேவன்

பிறகு விஸாமிடமிருந்து வரும் அழைப்பை எடுப்பதற்கு தயங்குவார். பதிவு இயந்திரத்தின் மூலம் விஸாமின் குரல் ஒலிக்கும். “நான் நெனச்சது உறுதியாயிடுச்சு.. நீ தேசத் துரோகியேதான். நீ இதை பர்சனலாக்கிட்டே. இந்த உலகத்துல எங்க இருந்தாலும் உன்னைத் தேடிக் கொல்வேன். உன் டைம் ஆரம்பமாயிடுச்சு” என்று கோபத்துடன் சொல்வார் விஸாம்.

அதைக் கேட்டு அச்சத்தில் ஈஸ்வர் தற்கொலை செய்யும் கொள்ளும் அதிர்ச்சியான திருப்பத்தோடு அந்தக் காட்சி நிறைவுறும். 

அதிக ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், மிகச் சிறிய நுட்பமான அசைவுகள் மற்றும் முகபாவங்களின் மூலம் தந்திரமான வில்லனின் சித்திரத்தைக் காட்ட முடியும் என்பதை ‘ஈஸ்வர அய்யர்’ கேரக்டரின் மூலம் சிறப்பாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் அனந்த் மகாதேவன்.