மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - மணிகண்டன் காதலும் கடந்து போகும்
கோலிவுட் செய்திகள்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘காதலும் கடந்து போகும்’ மணிகண்டன்!

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவின் சில  இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், எத்தனையோ அயல் சினிமாக்களில் இருந்து கதைக்கருவையும் காட்சிகளையும் அப்படியே தமிழில் சுட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா என்றல்ல, பொதுவாகவே இந்தியச் சினிமாக்களின் லட்சணம் இதுதான். இது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள சகஜமான விஷயமாக ஆகி  விட்டது. காப்பியடித்தது என்பதே தெரியாமல், சட்டச் சிக்கல் வராமல் திறமையாக சுடுவதுதான் இதிலுள்ள அடிப்படையான சூட்சுமம். இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் கில்லியாகச் செயல்படுகிறார்கள்.

தியேட்டர்

இப்படியாக சுடும் வழக்கத்தில் இருந்து விலகி, முறையான அனுமதி பெற்று ரீமேக் செய்யும் வழக்கமும் ஆங்காங்கே இருக்கிறது. இதற்குக் காரணம் சற்று நேர்மை இருப்பது மட்டுமல்ல, காப்பிரைட் பயமும் கூட. ஆம், பழைய காலம் மாதிரி, எந்தவொரு ஃபாரின் சினிமாவில் இருந்தும் அத்தனை எளிதாக இன்று சுட்டு விட முடியாது. பரவலான இணையமும் நுட்பங்களும் வந்து விட்டதால் இவற்றைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுப்பது  எளிதானது. போதாக்குறைக்கு ரசிகர்களும் நோண்டி, நுங்கெடுத்து, துப்பறிந்து “இது எந்தச் சினிமாவிலிருந்து சுடப்பட்டது?” என்று ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதி விடுகிறார்கள். ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தாலே, அது எதன் காப்பி என்று அலசி ஆராய்ந்து உடனே அம்பலப்படுத்தி விடுகிறார்கள். 

இப்படியாக  தெரியாமல் சுடுவதோ, அல்லது முறைப்படியான ரீமேக்கோ.. அதையாவது ஒழுங்காகச் செய்கிறார்களா என்றால் இல்லை… முக்கியமான கதைக்கரு, சுவாரசியமான காட்சி, சீன் மேக்கிங் ஆகியவற்றை மட்டும் உருவிக் கொண்டு, வணிகக் காரணங்களால் அவற்றை தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் மசாலாவில் முக்கி கொத்துப் பரோட்டாவாக்கி  நமக்குத் தருகிறார்கள். 

நேர்த்தியான ரீமேக்கின் உதாரணம் - ககபோ

காதலும் கடந்து போகும்

இது அசல் படைப்பிற்குச் செய்யப்படும் அநீதி என்பதாக ஒருபக்கம் இருந்தாலும், இவர்கள் கண்டபடி சுட்டுத் தரும் மசாலா பாணியும் குமட்ட வைக்கும் வகையில் தாறுமாறானதாக  இருக்கிறது. அதாவது, ஏற்கெனவே நேர்த்தியாக எடுக்கப்பட்ட படத்தை, சுவாரசியமான முறையில் சுடுவதற்கான திறமையும் சூழலும் கூட இங்கு இல்லை என்பதுதான் பரிதாபம். 

ஒரு நல்ல அயல் சினிமாவை, முறைப்படி அனுமதி வாங்கி, அதை நேர்த்தியாக ரீமேக் செய்த திரைப்படங்கள் தமிழில்  மிகக்குறைவு. இப்படியொரு சூழலில், அசல் படைப்பிற்கு மரியாதை செய்யும் வகையிலும், ஏறத்தாழ அதன் நேர்த்தியை கச்சிதமாக எட்டிப்பிடித்த வகையிலும், ஒரு சிறந்த தமிழ் சினிமாவை உதாரணம் சொல்ல முடியும். அது நலன் குமாரசாமி இயக்கிய

‘காதலும் கடந்து போகும்’.
My Dear Desperado - காதலும் கடந்து போகும்

ஆம், My Dear Desperado என்கிற கொரியன் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்தான் ‘ககபோ’. தமிழ் வடிவம் அட்டகாசமான ரீமேக்காக வந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நலன் குமாரசாமியின் டீமும் சரி, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களும் சரி, தங்களின் அசதாரணமான திறமையைக் கொட்டியிருக்கிறார்கள்  என்பதில் சந்தேகமே இல்லை. இன்றைக்குப் பார்த்தாலும் இந்தப் படம் அத்தனை ஃப்ரெஷ்ஷாக, கிளாஸிக்காக  இருக்கிறது. ஆனால் ஒரிஜனல் எப்போதும் ஒரிஜினல்தான்.

ககபோவை விடவும் ஒருபடி உயரத்தில் இருக்கிறது, My Dear Desperado என்பது இங்கு ஓர் உப தகவல்.

ஓரத்தில் வந்து போனாலும் இயல்பான நடிப்பு

‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தில் பல சுவாரசியமான காரெக்டர்கள் இருந்தாலும், அமைதியாக வந்து செல்லும் ஒரு கேரக்டர் இருக்கிறது. இன்றைக்கு அந்த நடிகர் பிரபலமானவராக ஆகி விட்டாலும், அந்தக் காலத்தில், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், இந்தக் கேரக்டரை அவ்வளவாக கவனித்திருக்க மாட்டார்கள். ஓரத்தில் வந்து போகும் பாத்திரம். திரைப்படங்களை சற்று கூர்மையாக கவனிக்கிறவர்களுக்கு மட்டும், “யாருப்பா.. இவரு.. இப்படி கேஷூவலா நடிச்சிருக்காரு.. சபாஷ்” என்று மனதின் ஓரத்தில் வியந்து பிறகு மறந்திருக்கக்கூடும்.

அந்த துணை நடிகர், மணிகண்டன்.
மணிகண்டன்

ஆம், ஜெய்பீம், குட்நைட், லவ்வர் என்று இப்போது பிரதான பாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா.? அதே மணிகண்டன்தான், இந்தப் படத்தில் ஒரு அப்பாவி அப்ரண்டிஸ் இளைஞனாக கதையின் ஓரத்தில் வந்து போகிறார். ஓரத்தில் வந்தாலும் படம் முழுக்க ஒரே மாதிரியான மீட்டரில் நடித்திருப்பதுதான், இந்தக் கேரக்டரையும் சரி, மணிகண்டனின் இயல்பான நடிப்பையும் சரி,  ஸ்பெஷலாக மாற்றுகிறது. 

அப்ரண்டிஸ் இளைஞர்களின் பாடி லேங்வேஜ்

அப்படியென்ன ஸ்பெஷல்? ஒரு நிறுவனத்தில் புதிதாக பணியில் இணையும் எந்தவொரு அப்பாவி இளைஞனையும் கவனியுங்கள்.. ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்கிற மாதிரி ஆரம்பத்தில் அமைதியாக இருப்பார்கள். முதலாளிகள், அதிகாரிகள் சொல்லும் எந்த வேலையையும் தலையால் செய்வார்கள். மிகையான பணிவைக் காட்டுவார்கள். சீனியரின் பின்னாலேயே பூனைக்குட்டி மாதிரி பம்மியபடி அலைவார்கள். அவர் எங்கே திரும்புகிறாரோ, காரணமே தெரியாமல், இவர்களும் பின்னால் செல்வார்கள். 

மணிகண்டன் - விஜய் சேதுபதி

கிடைத்திருக்கும் வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சர்வைவல் பிரச்சினைக்காக, சீனியர்கள் செய்யும் எந்தவொரு அலப்பறைகளையும் அமைதியாக சகித்துக் கொள்வார்கள். இப்படியொரு அப்ரண்டிஸ் இளைஞனின் உடல்மொழியை, தோரணையை தனது இயல்பான நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் மணிகண்டன். அவரது அப்பாவித்தனமான தோற்றமும் காரெக்டருக்கு சரியாக பொருந்திப் போகிறது. 

“உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே?”

அடிதடி நடத்தும் ஒரு கட்டப்பஞ்சாயத்து கும்பலிடம் வேலைக்குச் சேருகிறான் முரளி. (மணிகண்டன்). அந்த வேலைக்கு முரளி பொருத்தமே கிடையாது. முதிராத இளைஞனின் தோற்றம், அப்பாவித்தனமான தோற்றம், பாவமான லுக் என்று இருப்பவன், எப்படி அடியாளாக மாற முடியும்? என்றாலும் ஏன் சேர்கிறான் என்றால் குடும்பச் சூழல். 

அந்த கட்டப் பஞ்சாயத்து கம்பெனியில், முரளிக்கு சீனியராக அமைபவர் யார் என்று பார்த்தால் கதிரவன். (விஜய்சேதுபதி). கதிரவனும் இந்தத் தொழிலுக்கு லாயக்கில்லாத ஆசாமி. உள்ளுக்குள் தொடைநடுங்கி என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தௌலத்தாக சீன் போடும் நபர். ரவுடி என்று பந்தாவாக  சொல்லிக் கொண்டாலும் சின்னப் பசங்களிடம் கூட தர்மஅடி வாங்கிக் கொண்டு கெத்தாக திரும்புபவர். 

மணிகண்டன் - விஜய் சேதுபதி

ஆக.. ரவுடி போல் பாவனை செய்யும் ஒரு கோழையான ஆசாமி, அவனிடம் உதவியாளராக சேரும் அப்பாவி அப்ரண்டிஸ் என்று இந்த இருவரின் காம்பினேஷன் டிராக்கும்  படத்தில் சுவாரசியமாக பயணிக்கிறது. 

பாரில் நடக்கும் ஒரு தகராறில் இளைஞர்களிடம் அடிவாங்கி முகத்தில் ரத்தக்காயத்துடன் வந்திருக்கிறான் கதிரவன். அந்த இடத்தில் புதிதாக நிற்கும் ஒரு இளைஞனைப் பார்த்து “யாரிவன் புதுசா இருக்கான்?” என்று கதிரவன் விசாரிக்க “புதுப்பையன்ணே.. இன்னிக்குத்தான் வேலைக்குச் சேர்ந்தான்” என்று அறிமுகம் நடக்கிறது. “இப்படி முன்னாடி வா.. உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே?” என்று கதிரவன் பந்தாவாக கேட்க “தெரிலண்ணா..” என்று தலையாட்டும் முரளி, பின்பு அநாவசியமாக “ஸாரிண்ணா” என்று சொல்ல, “நீ ஏன் இப்ப தேவையில்லாம ஸாரி சொல்றே?” என்று கதிரவன் அதையும் நோண்ட மீண்டும் பரிதாபமாக தலையாட்டுகிறான் முரளி. 

மணிகண்டன்

உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே?” என்று கதிரவன் கேட்பது கூட, இந்தக் கும்பலில் தான் சேர்ந்த புதிதில் இருந்த அதே அப்பாவித்தனமாக பிம்பத்தில் இன்னொரு புதிய இளைஞனை இப்போது கதிரவன் பார்க்கும் ஆழ்மன வெளிப்பாடு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். 

“இதெல்லாம் ஒரு பொழப்பாடா?”

இன்னொரு காட்சியில், வண்டியில் பயணிக்கும் போது முரளியின் பின்னணி பற்றி விசாரிக்கிறான் கதிரவன். தன்னைப் போலவே இந்தக் கும்பலில் இன்னொரு அப்பாவியும் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறானே என்று கதிரவனுக்கு உள்ளுக்குள் தோன்றிக் கொண்டேயிருக்கிது. 

பார்க்க நல்ல பையனா இருக்கே.. இங்க என்ன பண்றே?” என்று அமர்த்தலாக கதிரவன் விசாரிக்க “இல்லண்ணா.. டுவல்த் ஃபெயில் ஆயிட்டேன்.. ஒரு வருஷம் சும்மா இருந்தேன். வீட்ல நிலைமை சரியில்லண்ணா.. அதான்.. சேகர் அண்ணன்தான் இங்க கொண்டு வந்து சோ்த்து விட்டாரு” என்று முரளி சொல்ல “என்னமோ.. பாங்க் வேலைல சேர்த்து விட்ட மாதிரி சொல்ற.. இதெல்லாம் ஒரு பொழப்பாடா?” என்று நக்கலாக கேட்கிறான் கதிரவன்.

மணிகண்டன் - விஜய் சேதுபதி

வட்டி கலெக்ஷனுக்காக ஒரு ஹோட்டலுக்குச் சென்று உரிமையாளரை பந்தாவாக மிரட்டி, பிறகு உரிமையாளரின் பின்னால் இருக்கும் போலீஸ்காரனிடம் அடிவாங்கி பம்முகிறான் கதிரவன். அவனுக்குப் பின்னால் ஆடு போல பரிதாபமாக நிற்கிறான் முரளி. தான் அடிவாங்கியதைப் பற்றி ஓனரிடம் எரிச்சலாக விளக்கிக் கொண்டிருக்கிறான் கதிரவன். அவனுடைய காயத்திற்கு முரளி மருந்து போட வர, டயலாக்கின் இடையில் கதிரவன் திட்டுவதும், முரளி பயந்து பின்வாங்குவதும் என இருவரின் நடிப்பும் அத்தனை இயல்பாக அமைந்திருக்கிறது. 

டார்க் ஹியூமருடன் ஒரு சண்டைக்காட்சி

இதற்குப் பின்னால் வரும் ஒரு காம்பினேஷன் சீனும் அத்தனை சுவாரசியமானது. மொடா குமார் என்கிற போலீஸ்காரனை  நேரடியாக அடிக்க முடியாமல், அவனது ஆட்களையாவது அடித்து தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள  நினைக்கிறான் கதிரவன். தனது ஓனரின் பேச்சைத் தாண்டி கதிரவன் தானாக செய்யும் வாலண்டியர்  சாகசம் இது. 

கராத்தே பள்ளியில் இருக்கும் இளைஞர்களை உளவு பார்க்க முதலில் முரளியை அனுப்புகிறான். திரும்பி வரும் முரளியிடம் “நாலு பேரு இருக்கானுங்களா.. ஃப்ரெஷ்ஷா இருக்காங்களா.. டயர்டா இருக்காங்களா..?” என்று விசாரித்து விட்டு “அவனுங்க டயர்ட் ஆகட்டும் வெயிட் பண்ணுவோம்” என்று கதிரவன் சொல்ல, அதற்கும் தலையாட்டுகிறான் முரளி.

மணிகண்டன் - விஜய் சேதுபதி

இருட்டிய பிறகு உள்ளே செல்லும் கதிரவன் “மொத அடி நம்ம அடியா இருக்கணும்.. புரியுதா?” என்று முரளிக்கு  பாடம் கற்றுக் கொடுத்தபடி அழைத்துச் செல்ல, அப்போதுதான் அப்ரண்டிஸ் முரளியிடம் இருந்து ஒரு மெல்லிய ஆட்சேபம் வருகிறது. “ண்ணா.. முதலாளி.. அவங்க மேல கை வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே” என்று சீனியரை எச்சரிக்க அவனை முறைக்கும் கதிரவன் “வாடா” என்று சொல்லி அழைத்துச் செல்கிறான்…

அங்கு நிகழும் சண்டைக்காட்சி ஒரு மாதிரியான காமெடியாக இருக்கிறது. கதிரவன் டுபாக்கூர் ரவுடி என்றாலும்  ஓரளவிற்கு அடிதடிக்குப் பழகியவன். ஆனால் அப்ரண்டிஸ் முரளியோ இதற்குப் புதிது. எனவே எதிர் தரப்பு ஆட்களிடம் செமயாக அடிவாங்குகிறான் முரளி. தாறுமாறான கைவீச்சின் மூலமும், எதிராளியின் கைகளைக் கடிப்பதின் மூலமும் இந்தச் சண்டையில் எப்படியோ வெற்றி பெறுகிறான் கதிரவன். தனது ஜூனியர் அடிவாங்கும் போதெல்லாம் அங்கேயும் சென்று பாய்ந்து காப்பாற்றுவதில் சீனியரின் பாசம் வெளிப்படுகிறது. 

மணிகண்டன்

இறுதியில் கதிரவனால் வீழ்த்தப்படும் ஒருவனின் நெஞ்சில் முரளியும் சேர்ந்து உதைத்து விட்டு வீரன் போன்ற பந்தாவுடன் வருகிறான். ஆனால் முகத்தில் அடிபட்ட வலியையும் தடவிக் கொண்டே ‘ஒண்ணுமில்லண்ணா’ என்றபடி வருவது சுவாரசியமான காட்சி. 

அற்புதமான கிளைமாக்ஸ் காட்சி

இந்தக் காம்பினேஷனின் சுவாரசியமும் உணர்ச்சிகரமும் கச்சிதமாக வெளிப்படுவது இறுதிக்காட்சியில்தான். மொடா குமார் என்கிற போலீஸ்காரனால் தொடர்ந்து அவமானப்படும் கதிரவன் “அவனைப் போட்டுத்தள்ளிடலாம்” என்று தனது ஓனரிடம் ஆவேசமாக யோசனை சொல்கிறான். அதே சமயத்தில் பழைய படி சிறைக்குச் செல்லவும் கதிரவன் தயாராக இல்லை. 

அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல.. நீ மொடா குமாரைப் போடு.. யாரையாவது சரண் அடைய வெச்சிடலாம்..” என்று சொல்லப்படும் யோசனைக்கு அரை மனதாக ஒப்புக் கொள்கிறான் கதிரவன். அப்படி சரண் அடைய தேர்வு செய்யப்படும் பலியாடு முரளி என்பதாக அமைகிறது.

மணிகண்டன் - விஜய் சேதுபதி

நீ எதுக்கும் கவலைப்படாத.. கத்தியை எடுத்துட்டுப் போய் நேரா சரண் அடைஞ்சுடு.. உன் குடும்பத்தை நாங்க பார்த்துக்கறோம். நாலே வருஷம்தான். அப்புறம் ராஜா மாதிரி வாழலாம்.. உனக்குன்னு தனியா எதையாவது செஞ்சுடலாம்.. ஓகேவா?” என்று ஓனர் தரப்பு சொல்ல, அதற்கு ஆடு போல் தலையாட்டுகிறான் முரளி. 

ஆனால் கதிரவனுக்குத் தெரியும். அதெல்லாம் நடக்காது என்று. ஏனெனில் அவனும் அப்படியாக வாக்குத்தரப்பட்டு பின்பு ஏமாந்து நிற்பவன். அதாவது சீனியர் பலியாடு. தன்னைப் போலவே இன்னொரு இளைஞனின் வாழ்க்கையும் வீணாவதை கதிவரன் விரும்புவதில்லை.

கதிரவனுக்குள் எழும் இந்த மாற்றம், பரிதாபம், கருணை ஆகியவை வெளிப்படும் காட்சி, அது உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அத்தனை வித்தியாசமானதாக இருக்கிறது. “எல்லாம் கரெக்ட்டா பண்ணிடுவியா?” என்று குறிப்பு தந்து கொண்டே வழிநடத்தும் கதிரவன், ஒரு கட்டத்தில் “டேய்.. இந்த பொழப்பு உனக்கு வேணாம்.. திரும்பிப் போயிடு. நான் பார்த்துக்கறேன்” என்று முரளியைத் திருப்பி அனுப்ப முடிவு செய்கிறான்.

விஜய் சேதுபதி - மணிகண்டன்

ஆனால் முரளியோ “ண்ணா.. நான் கரெக்ட்டா பண்ணிடுவேண்ணா” என்பதையே திரும்பத் திரும்ப சொல்ல, “டேய்.. நான் சொல்றது புரியலையா.. ஒழுங்கா திரும்பிப் போய் நல்ல வேலையா பாரு” என்று கன்னத்தில் பலமுறை அடித்து மிரட்டி அனுப்புகிறான் கதிரவன். அழுது கொண்டே முரளி நடந்து செல்வது பரிதாபமான காட்சி. கதிரவன் பாத்திரம் மிக உச்சத்திற்குச் செல்லும் காட்சியும் கூட. 

கிளைமாக்ஸின் நுனியில், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞனாக முரளி காட்டப்படும் போது பார்வையாளர்களுக்கும் நிச்சயம் ஆசுவாசமாக இருந்திருக்கும்.

மணிகண்டன்

ஒரு அப்ரண்டிஸ் இளைஞனின் தோற்றம், உடல்மொழி, வசனம், நடிப்பு என்று அனைத்தயும் கச்சிதமாக வெளிப்படுத்தி, படம் முழுவதும் அதே மீட்டரை சரியாக பின்பற்றி ‘முரளி’ என்கிற பாத்திரத்தை மறக்கமுடியாதபடி மாற்றி விட்டார் மணிகண்டன்.