சமீபத்தில் மறைந்த டெல்லி கணேஷை நினைவுகூரும் விதமாக அவர் நடிப்பிலிருந்து ஒரு பாத்திரத்தை இந்த வாரம் பார்க்கலாம். இந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயமே, டெல்லி கணேஷ் பற்றியதாகத்தான் இருந்தது. சிந்து பைரவி படத்தில் ‘குருமூர்த்தி’ என்னும் குடிகார மிருதங்க வித்வான் பாத்திரத்தில் டெல்லி கணேஷ் அசத்தியிருந்தார். அந்தக் கேரக்டர் பற்றிய விரிவான குறிப்புகள் அந்தக் கட்டுரையில் இருந்தது.
இந்த வாரம் டெல்லி கணேஷ் நடித்திருந்த ‘குசேலர்’ என்னும் பாத்திரத்தைப் பற்றி பார்க்கலாம். 1983-ல் வெளியான ‘டெளரி கல்யாணம்’ என்னும் திரைப்படத்தில் வரும் கேரக்டர் இது.
டெல்லி கணேஷ் ஏராளமான துணைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் போது எதற்காக இந்தத் திரைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்? காரணம் இருக்கிறது.
விசு எழுதிய ‘டெளரி கல்யாண வைபோகமே’ என்னும் நாடகம் வெற்றிகரமாக தொடர்ந்து மேடையேறிக் கொண்டிருந்தது. அந்த நாடகத்தில் ‘மாம்பலம் குசேலர்’ என்னும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்த கணேசன் என்கிற இளைஞனின் நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குநர் பாலசந்தர், ‘டெல்லி கணேஷ்’ என்று பெயர் சூட்டி தனது திரைப்படத்தில் அந்த இளைஞரை அறிமுகப்படுத்தினார். டெல்லி கணேஷ் சினிமாவிற்குள் நுழைய இந்த நாடகம்தான் காரணமாக இருந்தது.
இதே நாடகம் பிறகு ‘டெளரி கல்யாணம்’ என்கிற தலைப்பில் திரைப்படமாக மாறிய போது அதே ‘குசேலர்’ பாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். மிகச் சிறிய பாத்திரமாக இருந்தாலும் இறுதியில் பார்வையாளர்களை நெகிழ வைத்து கண்கலங்க வைத்த பாத்திரம்.
1983-ல் வெளியான ‘டெளரி கல்யாணம்’, ஒரு திருமணத்தை நடத்துவற்காக பெண் வீட்டார் என்னவெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக விளக்கும் படைப்பாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரின் பந்தா, வரதட்சணை, அநியாயமான திருமணச் செலவுகள் போன்றவை பெண் வீட்டாரின் கழுத்தைப் பிடித்து நெறிக்குமளிவற்கு சுமையாக அழுத்தும் அவலத்தை இந்தத் திரைப்படம் சிறப்பாக பதிவு செய்திருந்தது.
மிடில் கிளாஸ் ஆசாமியான கணேசன் (விசு), தன் தங்கைக்கு வசதிக்கும் மீறிய இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார். நல்ல வரன் என்பதால் எல்லாச் சிரமங்களையும் தாங்கிக் கொள்கிறார். ஆனால் மாப்பிள்ளையின் அம்மா செய்யும் கெடுபிடிகளும் சீர் செனத்திகளும் வரதட்சணையும் அவரை மிகுந்த நெருக்கடிக்கு ஆளாக்குகின்றன.
திருமணச் செலவை எப்படிச் சமாளிப்பது என்கிற தவிப்பில் கணேசனும் அவனது மனைவி உமாவும் இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் பெரிய ஆறுதல் போல ஒரு செய்தி கிடைக்கிறது. டெல்லியில் ஐஜியாக இருக்கும் தனது தாய்மாமனுக்கு கல்யாண அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார் கணேசன். ‘கல்யாணத்துக்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்வேன்’ என்று குசேலரும் கடிதம் மூலமாக வாக்களிக்கிறார்.
மீதமுள்ள வரதட்சணைப் பணத்தை தந்தால்தான் திருமணம் நடக்கும். அதற்காக குசேலர் தரப்போகும் பணத்தைத்தான் மலை போல நம்பியிருக்கிறார் கணேசன். இப்படியொரு சூழல்.
மாப்பிள்ளையின் நண்பர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து இறங்குகிறது. சீட்டுக்கட்டு, சிகரெட், மது, சைட்டிஷ் என்று பெரிய பட்டியலை கணேசனிடம் தருகிறது. இந்தச் செலவு வேறா என்று திகைத்துப் போகும் கணேசன், வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொள்கிறார். தனது தம்பியிடம் பணத்தையும் பட்டியலையும் தருகிறார்.
அந்தச் சமயத்தில் ஒரு பாத்திரம் காட்சிக்குள் நுழைகிறது. பணத்தையும் பட்டியலையும் வாங்கி தன் பைக்குள் போட்டுக் கொள்கிறது. காவி சட்டை, வேட்டி, துண்டு, கலைந்த தலை, ஒரு மாத தாடி, நெற்றியில் சந்தனம் என்று பரதேசி கோலத்தில் இருக்கும் அந்தக் கேரக்டர், தன்னை ‘குசேலர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் கணேசனுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும். டெல்லியில் ஐஜியாக இருக்கும் தாய்மாமன் வந்துவிட்டார் போல என்று மகிழ்ச்சியடைகிறார்.
“என்னை சார்ன்னு கூப்பிடாத.. மாமான்னு கூப்பிடு… அதான் நல்லாயிருக்கு. மாப்பிள்ளைக்கு பிரெண்ட்ஸூன்னு சொல்லிட்டு சில அற்பங்கள் கல்யாணத்துக்கு வரும். அதுல நல்லவாளும் இருப்பா.. அவா கிட்ட சொல்லி செலவை குறைக்க முடியுமான்னு பார்க்கறேன்.. இல்லைன்னா.. பணம் இருக்கு.. லிஸ்ட் இருக்கு.. நானே வாங்கிக் கொடுத்துடறேன்.. இனிமே இந்தக் கல்யாணம் என்னோட பொறுப்பு. நீ கவலைப்படாதே.. ஆமாம்.. சமையல் யாரு.. அப்பாசாமியா..” என்று கேட்கும் குசேலர், துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு திருமண வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்.
“டெல்லி ஐஜி மாமாவா இது.. இத்தனை சிம்ப்பிளா இருக்காரே..?” என்று தம்பி கேட்க “டேய்.. சில பெரிய மனுஷாள்லாம் அப்படித்தான் இருப்பாங்க” என்று சமாதானப்படுத்துகிறார் கணேசன். எப்படியோ மாமாவின் பணத்தின் மூலம் திருமணம் நல்லபடியாக நடக்கப் போகிறது என்கிற சந்தோஷம் அவருக்கு. ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.
டெல்லி ஐஜி குசேலருக்கும், காவி வேட்டி குசேலருக்கும் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு சம்பந்தமில்லை. எனில் யார் இந்த குசேலர்? சமையற்கார அப்பாசாமி, தன் உதவியாளரிடம் விளக்குவது போல ஒரு காட்சி வருகிறது. “பாவம்டா.. இந்த குசேலன்.. கை சுத்தம்.. மனசும் சுத்தம்.. யார் வீட்டு கல்யாணம்ன்னு விவரங்களைக் கேட்டு வெச்சுக்குவான்.. என்னமோ அம்பது வருஷம் பழகின மாதிரி ஒவ்வொருத்தரையும் விசாரிப்பான். கல்யாண வேலைகள்ல வஞ்சகமே இல்லாம கடினமா உழைப்பான். ரெண்டு வேளை நல்லா சாப்பிடுவான்.. பொண்ணு பிறந்த வீட்டுக்கு கிளம்பறப்ப, இவனே அண்ணன் மாதிரி கண் கலங்குவான்.. யாருக்கும் கெட்டது நினைக்காத அப்பாவி இந்தக் குசேலன்” என்று அந்தக் கேரக்டரின் டிசைன் விளக்கப்பட்டு விடும்.
இந்த லட்சணத்தில் ‘டெல்லி ஐஜிக்கு’ பாதுகாப்பு தருவதற்காக இரண்டு ரகசிய போலீஸ்காரர்கள் வேறு யூனிபார்முடன் வருவார்கள். ‘நாங்க வந்திருக்கிற விஷயம் அவருக்குத் தெரிய வேணாம். இது சீக்ரெட் மிஷன்’ என்கிற மாதிரி கணேசனிடம் சொல்வார்கள். பிறகு ஐஜி சாரைப் பார்ப்பதற்காக அந்த கான்ஸ்டபிள்கள் செல்ல, ஐஜி சார், சமையல் கட்டில் மாவாட்டிக் கொண்டிருப்பார். “என்னய்யா.. இது.. இவரைப் பார்த்தா ஐஜி வீட்டுச் சமையற்காரன் மாதிரில்ல இருக்கு.. எதுக்கும் விசாரிப்போம்” என்று அவரின் அருகில் செல்ல “உங்க ஐஜி வீட்டுக் கல்யாணத்தையே நான்தான் முன்னாடி நின்னு நடத்தி வெச்சேன்” என்று அவருடைய வழக்கத்தில் காவி வேட்டி குசேலர் இயல்பாகச் சொல்ல, கான்ஸ்டபிள்கள் பதறி சல்யூட் அடித்து விட்டு கிளம்பி விடுவார்கள்.
உண்மையான குசேலர் யார் என்பது அம்பலமாகும் காட்சி. வரதட்சணைப் பணத்திற்கான நெருக்கடி தாங்காமல் “மாமா.. பணம் தேவைப்படுது.. கேஷா வெச்சிருக்கீங்களா.. இல்ல செக்கா.. இப்ப கொடுத்துடுங்களேன்” என்று கணேசன் உருக்கமாக கேட்க “நீ யாருன்னு நெனச்சி என் கிட்ட பேசிட்டு இருக்கே?” என்று அப்பாவித்தனமாக கேட்பார் காவி. “நீங்க என் தாய் மாமாதானே.. டெல்லி ஐஜிதானே?” என்று கணேசன் அதிர்ச்சியாக கேட்க “நல்லாச் சொன்ன போ. நான் கும்மிடிப்பூண்டி கூட தாண்டியதில்ல. ஐஜியா இருந்தா நான் ஏண்டா இங்க பாத்திரம் தேய்ச்சுட்டு இருக்கப் போறேன்” என்று வெள்ளந்தியாகச் சொல்வார் காவி வேட்டி குசேலர்.
இதனால் பயங்கரமாக ஏமாற்றமடையும் கணேசன் “நாமளே பிச்சைக்கார கல்யாணம் பண்றோம்.. நம்ம கல்யாணத்துக்கு பிச்சையெடுக்க வந்திருக்காருடி” என்று தன் மனைவியிடம் கசப்பாகச் சொல்வார். “சரி.. வேலை செய்யற.. போனாப் போகுது.. ரெண்டு வேளை சாப்பிட்டுப் போட்டும்” என்றபடி கணேசன் கிளம்ப, அதிர்ச்சியடையும் குசேலர் “இருப்பா.. என்ன சொன்னே… போனாப் போவுதா.. அந்த மாதிரி சாப்பாடை சாப்பிடறதுக்கு நான் ரோட்ல நின்னு பிச்சையெடுத்திருப்பேன். உழைச்சுதான் சாப்பிடணும்ன்ற வைராக்கியம்.. உடம்பு இருக்கு, ஆனா வேலை கிடைக்கலை..”
என்று உருக்கமாகப் பேசும் குசேலர், பாத்திரங்களைக் கழுவிய கறை போவதற்காக கை கழுவும் இடத்திற்குச் செல்வார். பிறகு மனம் மாறி “வேணாம்ப்பா. ஏற்கெனவே உனக்கு தண்ணி கஷ்டம்” என்றபடி தன் சட்டையிலேயே கறையைத் துடைத்துக் கொள்வார். “என் உழைப்பை புரிஞ்சுண்டு ‘டேய் குசேலா.. சாப்பிடுன்னு’ சொன்னா.. ஒரு வாரம்.. இல்லைன்னா.. ஈரத்துணியை வயித்துல…’ என்று நெகிழ்ந்து வார்த்தைகள் வராமல் தடுமாறும் குசேலரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.
வெளியே கிளம்பச் சென்ற குசேலர், திடீரென்று திரும்பி “டேய் நாணா.. மாப்பிள்ளையோட பாட்டிக்கு வத்தக்குழம்பு செய்யணும்.. மறந்துடாத… டேய் அப்பாசாமி.. பாவம்டா கணேசன்.. கஷ்டப்பட்டு கல்யாணம் பண்றான்.. அடுப்புல நெய்யை ஊத்திடாத… டேய்.. மாப்பிள்ளை அழைப்பிற்கு மல்லிகைப்பூவோட சம்பந்திப்பூவையும் கலந்து போடு. செலவு கம்மியாகும்..”என்று சரசரவென உத்தரவுகள் பிறப்பித்து விட்டு பிறகு கணேசனிடம் “என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கே.. சாயந்திரத்திக்குள்ள. டவுரிப் பணத்தைக் கொடுத்தாகணும்டா.. அந்த உண்மையான குசேலரை தேடிக் கண்டுபிடிச்சு பணத்தை வாங்கு. எக்காரணத்தைக் கொண்டும் கவுரியோட கல்யாணம் நிக்கக்கூடாது” என்று கையெடுத்துக் கும்பிட்டபடி கிளம்பி விடுவார். கணேசன் குற்றவுணர்ச்சியில் தவிப்போடு நின்று கொண்டிருப்பான்.
ஆரம்பக் காலக்கட்டத்தில் டெல்லி கணேஷ் கையாண்டிருந்த பாத்திரம் இந்தக் குசேலர். அவரது சினிமா என்ட்ரிக்கு காரணமாக இருந்த கேரெக்டர். சிறிய பாத்திரமாக இருந்தாலும், ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டால் உருக்கமான காட்சியை எத்தனை தூரத்திற்கு மெருகேற்ற முடியும் என்பதற்கான உதாரணமாக டெல்லி கணேஷின் நடிப்பு அமைந்திருந்தது.