இயக்குநர் அமீர் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

“தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது”- இயக்குநர் அமீர்

PT WEB

திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார், நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றிமாறன்

அப்போது, இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “என்னைப் போன்று படம் எடுப்பவர்களுக்கு எடிட்டிங் ரூம் என்று ஒன்று இல்லை என்றால் படம் வெளியே வராது. என்னுடைய முதல் படத்திலிருந்து என்னுடைய எடிட்டர்கள்தான் என் படத்தை உருவாக்குகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இயக்குநர் அமீர் பேசுகையில், “ஒரு இயக்குநருக்கு படத்தொகுப்பு மட்டுமல்ல, இசை, சண்டை, எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு படம் தேருமா தேறாதா என்று கண்டுபிடிப்பது எடிட்டர்தான். ஒரு இயக்குநருக்கு தன்னுடைய காதலியுடன் தனியறையில் இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷம்தான், எடிட்டிங் ரூமில் இருக்கும் போது கிடைக்கும். எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

படம் தேருமா தேறாது என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. பருத்திவீரன் படத்திற்கு நாங்கள் 13 வெர்ஷன் எடிட் செய்திருந்தோம்.

சங்கங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால், இன்று முதலில் ‘இந்த நிர்வாகம் சரியில்லை’ என்று கூறுகின்றார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஒருவனை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்று விட்டனர் சிலர்.

அதனால் ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடக்கும்போது கத்தி மேல் நிற்பது போன்றுதான் இருக்கும். அதை சமாளிக்க ஒரு திறமை வேண்டும். எல்லோராலும் பேசி செய்து விட முடியாது.

தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பலர் பேசுகிறார்கள். இங்கு வருடத்திற்கு 250 படங்கள் இங்கே உருவாகின்றன. ரசிகர்கள் எவ்வளவு படங்களை பார்ப்பார்கள்? இரண்டு வருடங்கள்தான் நான் பார்ப்பேன்... இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களை பிடித்து படமெடுத்துக் கொண்டு அங்கேயே இருந்து விடுவேன்.

எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. க்யூப் நிறுவனங்கள், தொடங்கும் போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை. தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.