நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - பிரபலங்கள் இரங்கல் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு | அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல்

தன் 80வது வயதில் வயது மூப்பு காரணமாக இன்று மறைந்துள்ளார் நடிகர் டெல்லி கணேஷ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

ஜெ.நிவேதா

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்,

பிரதமர் மோடி, “புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவால் பெரிதும் வருத்தமடைந்தேன்; அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் அவர். தன் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும், தலைமுறைகள் கடந்தும் மக்களால் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்றுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடிகர் டெல்லி கணேஷ் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்; நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். அவரின் நகைச்சுவைக் காட்சிகள் மக்களால் இன்றும்கூட மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன; டெல்லி கணேஷின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினருக்கு இரங்கல்” என்றுள்ளார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர்.

சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு. டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்றுள்ளார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய், “மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது. தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!” என்றுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்றுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “1991 முதலேவும் நானும் நடிகர் டெல்லி கணேஷும் பழகியுள்ளோம். பழகுவதற்கு மிகவும் பண்பாளர். அன்பு சகோதரர். விமானப்படையில் சேவை செய்த போதிலும், கலைத்துறையில் முத்திரை பதிப்பேன் என சினிமாவிற்கு வந்தார். அவருடைய இழப்பு, திரைத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கே இழப்பு” என்றுள்ளார்.

நடிகர் மணிகண்டன், “10, 11 வருடங்களுக்கு முன்பு இதே வீட்டில் வைத்துதான் டெல்லி கணேஷ் சாரை பார்த்தேன். வீட்டு கேட்டை தாண்டி தயங்கியபடி நின்றேன். யார் வேணும் என கேட்டார். ‘நான் ஒரு குறும்படம் இயக்க உள்ளேன். அதற்காக உங்களை பார்க்க வந்தேன்’ என்றேன். அவ்வளவு சீனியர் நடிகர்... எந்த அனுபவும் இல்லாத என்னை சந்திக்க வேண்டிய அவசியமே இல்ல, ஆனாலும் சந்தித்தார். அவர் அன்றைக்கு வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தில் பாதிதான் என்னால் கொடுக்க முடிந்தது. ஒரு சீனியர் நடிகருக்கான எந்த வசதியும் என்னால் அப்போது அவருக்கு செய்து கொடுக்க முடியவில்லை.

ஆனாலும் எனக்காக அவர் அந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார். நான் செய்த எல்லா தவறுகளையும் பொறுத்துக்கொண்டு, அவ்வளவு எனர்ஜியோடு வாய்ப்பு தேடும் ஒரு சாதாரண நடிகனைப் போல என்னோடு பழகினார்” என்று உருக்கமாக பேசினார்.

இயக்குநர் வெற்றிமாறன், “அலட்டல் எதுவும் இல்லாத மிகச்சிறந்த நடிகர். தனிப்பட்ட முறையில் அவரின் மறைவு எனக்கு பெரிய இழப்பு. தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகர் அவர். நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு அவரை தெரியும்.

புதிதாக வேலைக்கு சேரும் யாரொருவரும், நிறைய தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. அப்படி நான் தவறு செய்தபோதெல்லாம் அரவணைத்து செயல்படுவார். நான் குறும்படங்கள் இயக்க வேண்டுமென கேட்கும் போதெல்லாம் ‘நீ பண்ணு, நான் உன்கூட இருக்கேன்’ என்பார். ரொம்ப சப்போர்ட்டிவான மனிதர். தமிழ் சினிமாவுக்கே இவரின் மறைவு பேரிழப்புதான்” என்றார்.

விகிச தலைவர் திருமாவளவன், “என்னை மிகவும் நேசித்தவர். மிகவும் ரசித்த நடிகர். நான் எழுதிய அமைப்பாய் திரள்வோம் புத்தகத்தை விரும்பி வாங்கிச் சென்றிருந்தார். தனிப்பட்ட முறையில், பாகுபாடுகள் இல்லாத நடிகர். அவருடைய மறைவு, கலையுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு. எனக்கும் தனிப்பட்ட முறையில் இந்த இழப்பு துயரத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

நடிகர் கார்த்தி, “இரண்டு மாதங்களுக்கு முன்புதான் டெல்லி கணேஷ் சாருக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தோம். ரொம்ப சந்தோஷப்பட்டு, எங்களை ஆசிர்வாதம் பண்ணினார். நாங்க செஞ்ச பாக்கியம் அது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அவ்வளவு முழுமையாக அதை செய்வார்.

தூக்கத்துலயே அவர் இறந்துட்டாரென்பதை கேட்டபோது நிம்மதியடைந்தேன். மருத்துவமனை சென்று சிரமப்படாமல் இறந்துவிட்டார். அவர் இல்லாமல் போனது, நடிகர் சமுதாயத்துக்கும் தமிழ் திரையுலகத்துக்கும் பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்” என்றார்.

நடிகர் சிவகுமார், என்னைவிட 3 வயது சின்னவர் டெல்லி கணேஷ். சிந்து பைரவி படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு யாரையும் கற்பனைகூட செய்யமுடியாது. ‘இனிமே தண்ணியே அடிக்கமாட்டேன்’ என அவர் சொல்லும் அந்த சீனை மறக்கவே முடியாது. அவ்வளவு அற்புதமான நடிகர் அவர் என்றார்.

இவர்களன்றி நடிகர்கள் சார்லி, சத்யராஜ், மன்சூர் அலிகான், அமைச்சர் மா.சுப்பிரமணியன் என பலரும் டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.