செய்தியாளர்: ராம் பிரசாத்
1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருக்கும் போது மெட்ராஸ் மீது ஜப்பான் குண்டு வீசப்போகிறது என்ற செய்தி வெளியாகிறது. அதில் இருந்து தப்பிக்க மக்கள் சிலர், ஒரு படகில் ஏறி கடலுக்குள் செல்கின்றனர்.
படகில் யாரெல்லாம் ஏறினார்கள்? அவர்கள் பிழைத்தார்களா இல்லையா? என்பதுதான் "போட்" படத்தின் கதை. இதுபோன்று ஒரு கதையை யோசித்ததற்காகவே சிம்பு தேவனை பாராட்டலாம். படத்தின் ஒன்லைன் கேட்டால், சர்வைவர் திரில்லர் போலத்தான் தோன்றும்.
இருந்தாலும், திரைக்கதையை வேறு பாதையில் கொண்டு செல்கிறார் சிம்பு தேவன். படகோட்டி குமரனாக வந்து அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் யோகி பாபு நம்மை கவர்கிறார். நூலகராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் யோகி பாபுவிற்கு அடுத்த முக்கியமான கதாபாத்திரம்.
கதை 1943ல் நடைபெற்றாலும், கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியுள்ளது. படத்தில் குறை என்று கூறினால், நகைச்சுவை பற்றாக்குறை தான். சிம்புதேவன் படங்கள் என்றாலே நகைச்சுவைக்கு பெரும் பங்கு இருக்கும்.
இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேரும் நகைச்சுவைக்கு பேர்போன நடிகர்கள் என்றாலும், அவர்களின் தனித்துவம் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. படத்தில் பாடல்களுக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், பின்னணி இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜிப்ரான். சுற்றிலும் கடல் என்பதால், இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு என்பது சவாலான ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
அதை, மாதேஷ் மாணிக்கம் அழகாக கையாண்டுள்ளார். கடலின் அழகை இரவிலும் பகலிலும் காட்டியிருப்பதுடன், ஒவ்வொரு கோணத்திலும் கதையை சலிக்காமல் நகர்த்திச் செல்ல அவரது கேமரா உதவியுள்ளது. கடலில் இறங்கிய இந்த போட் தத்தளிக்குமா? கரை சேருமா? என்பது மக்கள் கையில்.