நடிகர் விஜய் தன் தாய் தந்தையோடு சமீபத்தில் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று, சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் வைரலானதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படத்தில் விஜய் தன் தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் உடன் இருந்தது. ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் அவரின் தந்தை எஸ்.ஏ.சி இடையே பனிப்போர் நிலவி வந்தது.
விஜய் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகனாதிலிருந்து சூப்பர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உருவானது வரை அத்தனை இடங்களிலும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்களிப்பு அதிகம்.
முக்கியமாக, 1993 ஆம் வருடம் விஜய்க்கு ‘விஜய் ரசிகர் மன்றம்’ தொடங்கிய எஸ்.ஏ.சி சில வருடங்களுக்கு பிறகு இதை நற்பணி மன்றமாக மாற்றினார். பின்னர் இது விஜய் மக்கள் இயக்கமாக உருமாறியது. இதையெல்லாம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒற்றை ஆளாக செயல்படுத்தினார். இது விஜய்க்கும் தெரியும்.
விஜய் மற்றும் அவரின் தந்தைக்கு இடையில் புஸ்ஸி ஆனந்த் வந்த பின்னர் இருவர் இடையே இடைவெளி அதிகமானது.
இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகமானது எனவும் சொல்லலாம். 2020 ஆம் வருடம் எஸ்.ஏ.சி ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எனும் பெயரில் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
இந்த கட்சிக்கு பொதுச் செயலாளராக விஜய்யின் அம்மா ஷோபா, தலைவராக பத்மநாபனை நியமித்து கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் எஸ்.ஏ.சி. ஆனால் அப்பா உருவாக்கிய கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விஜய் அறிக்கை வெளியிட்டார்.
மக்கள் இயக்க பெயரைப் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால், விஜய் மற்றும் அவரது தந்தை இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.
2022 ஆம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.ஏ.சி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில், ”நான்கு மாவட்டங்களில் எனது துபாய் நண்பர்களுடன் இணைந்து மாவட்டத்துக்கு பத்தாயிரம் வீதம் சிசிடிவி கேமராக்கள் கொடுக்கவிருக்கிறேன். முதற்கட்டமாக சென்னையில் கொடுக்கவிருக்கிறோம். அதற்கடுத்ததாக, மதுரை, கோவை என்று விரிவுப்படுத்த ஆசைப்படுகிறேன். இப்படியொரு பெரிய பரிசை உன் பிறந்தநாளுக்கு கொடுக்கிறேன் விஜய். இதைவிட எனக்கு வேறு எந்த சந்தோஷமும் கிடையாது". என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில மாதங்களில் விஜய், “எனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் கூட்ட எனது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உட்பட 11 பேருக்கு தடை விதிக்க வேண்டும்” என உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகள் காரணமாக தந்தையுடன் மட்டுமே பேசாமல் இருந்த விஜய், தாய் ஷோபாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.
மேலும், தாய் தந்தையின் சதாபிஷேகபூஜை நிகழ்வில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். கூடிய விரைவில் முழு நேர அரசியலில் இறங்கப் போவதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். மேலும் தாய் ஷோபாவுக்கு சாய் பாபா கோவில் ஒன்றை விஜய் கட்டி கொடுத்திருந்தார்.
இதற்கிடையே தற்போது விஜய்யின் அரசியல் இயக்கப் பணிகளை புஸ்ஸி ஆனந்த கவனித்து வருகிறார். இந்நிலையில், விஜய் தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் நேற்று முன்தினம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மூலம் தந்தை மகன் பிரச்னை முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.