டெல்லி கணேஷ் மறைவு: நடிகர் வடிவேலு இரங்கல் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

டெல்லி கணேஷ் மறைவு | “எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் இழந்து விட்டேன்” - நடிகர் வடிவேலு!

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு, “எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேஷனும் ஒருவர்; எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் நான் இழந்து விட்டேன்” என நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PT WEB

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு, “எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேஷனும் ஒருவர்; எதார்த்தமான அவரின் நடிப்பையும் அன்பையும் நான் இழந்து விட்டேன்” என நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்றும் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தவகையில், நடிகர் வடிவேலு தனது இரங்கலை அறிக்கை வழியாக இன்று பதிவு செய்துள்ளார். அதில், “அண்ணன் டெல்லி கணேசன் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அதிக படங்களில் ஒன்றிணைந்து நடிக்க முடியவில்லை என்றாலும் சீனா தானா, மிடில் கிளாஸ் மாதவன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நாங்கள் இணைந்து நடித்தது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நாங்கள் இணைந்து பணியாற்றியதும், அப்போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளும், காட்சியை மேம்படுத்த என்னுடைய சில யோசனைகளைப் பெற்றுக் கொண்டதும் என்னால் மறக்கவே முடியாது. அதேபோல 1999 ஆம் ஆண்டு வெளியான ‘நேசம் புதுசு’ திரைப்படத்தில் நான் செய்த 'ஏன்பா தம்பி அந்த பொண்ண கையை பிடிச்சு இழுத்தியா' என்ற காமெடி யாராலும் அவ்வளோ எளிதாக மறந்திருக்க முடியாது. அப்படி காலத்திற்கும் நிலைத்திருக்கும் அந்த நகைச்சுவையை கூறியதே அண்ணன் டெல்லி கணேசன் அவர்கள்தான்.

வடிவேலு ‘நேசம் புதுசு’ நகைச்சுவை காட்சி

வேறு ஒரு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு சம்பவம் எனது ஊரில் நடந்தது என கூறினார். நேசம் புதுசு படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கையில் இவரது காமெடியை அப்படத்தின் காமெடி டிராக்கில் பயன்படுத்தலாம் என எண்ணினேன், உடனே வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து, ‘தற்போது நடித்து வரும் நேசம் புதுசு படத்திற்கு உங்கள் காமெடியை பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என அனுமதி கேட்டேன். அன்போடு கண்டித்த அவர் உடனே ‘எடுத்துக்கொள்’ என்றார்.

அந்த காமெடியை பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அந்த காமெடியே இன்று இருந்திருக்காது. இந்நேரத்தில் இதனை நினைவு கூற நான் பெருமையுடன் கடமைப்பட்டுள்ளேன். அண்ணன் டெல்லி கணேசன் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தத்தின் உச்சமாய் திரையில் வெளிப்படும்.

அவரிடம் நீங்கள் அற்புதமான குணசித்திர நடிகர் என்பேன் அவரோ எனக்கு நடிக்கவே தெரியாது என்பார். அவரை நினைக்கையில் என்னை அறியாமலேயே அவரது எதார்த்தத்திற்குள் நானும் நுழைகிறேன்.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: நடிகர் வடிவேலு இரங்கல்

டெல்லி கணேசனாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அற்புதமான நடிகனை நாம் இழந்துவிட்டோம். தற்போது ஃபகத் பாசிலுடன் நான் இணைந்து நடிக்கும் மாரீசன் படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் நடைபெற்று வருவதால் என்னால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.