Sivakumar PT Desk
கோலிவுட் செய்திகள்

“அப்போ அந்த போட்டோ எடுக்கலைனு குறை இருந்தது.. 50 வருடத்திற்குப் பிறகு...” - சிவகுமார் உருக்கம்

“நான் படித்தபோது ஆன செலவு 800 ரூபாய் தான்; ஆனால், இப்போது கார்த்தியின் குழந்தையின் ப்ரீ கேஜி படிப்பிற்கே ரூ. 2.5 லட்சம் கட்டணமாக உள்ளது; தற்காலத்தில் கல்வி எங்கே உள்ளது என நினைத்துப் பாருங்கள்” என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

PT WEB

நடிகர் சிவகுமாரின் குடும்பம், கல்வி மற்றும் அறக்கட்டளை சார்ந்த சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சிவகுமார் கல்வி நிலைய மற்றும் அறக்கட்டளை விருதுகள் 2023 ஆம் ஆண்டுக்கான 44 ஆவது விருது வழங்கும் நிகழ்வு, அகரம் பவுண்டேஷன் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் நடிகர் சிவக்குமார் மேடையில் பேசுகையில், “குழந்தைகள் கதைகள் எல்லாம் கேட்டபோது நெஞ்சு அடைக்கிறது. உங்களது கதைதான் எனக்கும். எங்கள் அப்பா (கண்ணீர் மல்க) கருப்பா, சிவப்பா என தெரியாது. அப்பா 8 மாதங்களிலும், அண்ணன் பிளேக் நோயால் 4 வயதிலும் இறந்தார். அப்போது தங்கம் சவரன் 12 ரூபாய், அக்காவை 12 ஆம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். அடுத்து நான் மட்டும்தான் படித்தேன். அப்போது கம்பு, சோறு தான், சுடு சோறு கிடைக்காது. தீபாவளி, பொங்கல் கிடையாது. பொங்கல் கூட கொடுக்க முடியாவிட்டால் என்னை ஏன் பெற்றாய் என அம்மாவிடம் கேட்டேன்.

சீட்டு, சரக்கு அடித்தது இல்லை. ஓவியராகவே இருந்திருந்தால் திருமணம் செய்து இருக்க மாட்டேன். நல்ல குழந்தைகள் இருந்தால், வாழ்க்கையின் வெற்றி முழுமையாக இருக்கும். எனது வெற்றிக்கு காரணம் சூர்யா, கார்த்தி தான். நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

நான் படித்தபோது ஆன செலவு 800 ரூபாய் தான். ஆனால், இபோது கார்த்தி குழந்தையின் ப்ரிகேஜி கட்டணமே 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. தற்காலத்தில் கல்வி எங்கே உள்ளது என நினைத்துப் பாருங்கள். கல்வியில் சாதி பார்க்க கூடாது, எனக்கு படிப்பை கொடுத்தது ஐய்யர் வாத்தியார். பள்ளியில் நான் உள்ளிட்ட முதல் 4 ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு குழு புகைப்படம் எடுக்க அப்போது காசு இல்லை. 40 வருட திரைத்துறையில் நான் 192 திரைப்படங்களில் நடித்துள்ளேன். 40 கோடி பிரேமில் எனது போட்டோ உள்ளது. எனக்கு அப்போது பள்ளியில் குழு புகைப்பட எடுக்கவில்லை என்ற குறை இருந்தது. அதன்பிறகு 50 ஆண்டுகள் கழித்து அந்த போட்டோ எடுத்து விட்டேன்” என்று நடிகர் சிவகுமார் பெருமிதம் தெரிவித்தார்.