Bose venkat Facebook
கோலிவுட் செய்திகள்

“100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள்?” - இயக்குனர் போஸ் வெங்கட்

“சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது, நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம்” என்று நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

webteam

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட், சிறிய பட்ஜெட்டில் வரும் நல்ல படங்கள் குறித்தும், பெரிய பட்ஜெட்டில் வரும் தவறான படங்கள் குறித்தும் தன் பார்வையை முன்வைத்து கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது:

“எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை. இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை. மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை தராமல் தன் கஜானாக்களை மட்டும் நிரப்பும் திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல்,

Director Bose venkat

பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு - சாதியக் கொடுமை - மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை சினிமாக்களாகவும் அறிவுரைகளாகவும் அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.

தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது, எடுக்க கூடாத சினிமா என்பது, யாருக்கும் உபயோகமில்லாமல், எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல், வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள், மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு பிரித்துச் செல்லும் அந்த புத்திசாலிகள், அவர்களைத் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம். இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.