டெல்லி கணேஷ் முகநூல்
கோலிவுட் செய்திகள்

Remembering Delhi Ganesh | இன்றளவும் நினைவுகூரப்படும் டெல்லி கணேஷ் நடித்த கதாப்பாத்திரங்களில் சில!

தமிழ் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரங்களில் சில, இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்படியான சில முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்..

PT WEB

செய்தியாளர்:புனிதா பாலாஜி

தமிழ் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் நடித்த சில கதாபாத்திரங்கள், இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்படியான சில படங்கள் குறித்தும், அதில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

ஒரு நடிகர், சினிமாவில் அறிமுகமாகி, நல்ல கதாபாத்திரங்களின் மூலம் புகழ் பெற்று விடலாம். ஆனால், அதை தக்கவைப்பதுதான் சவலானது. சினிமாவில் அந்த சவால்களை எதிர்கொண்டு வாழும் வரை முக்கிய நடிகராகவே இருந்து மறைந்திருக்கிறார், டெல்லி கணேஷ். அவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், அதில் சில கதாபாத்திரங்களின் மூலம், பெரும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

டெல்லி கணேஷ்

அதில், சுரேஷ் கிருஷ்ணாவின் ஆஹா திரைப்படம், டெல்லி கணேஷ் நடித்த முக்கிய திரைப்படம். சமையல்காரரான டெல்லி கணேஷின் மகளுக்கும், பணக்கார வீட்டு ஹீரோவுக்கு காதல் மலர்ந்துவிடும். இதற்கு இடையே நடக்கும் களேபரங்களுக்கு நடுவில், எதார்த்தமான நடிப்பில் பாராட்டுகளைப் பெற்றார், டெல்லி கணேஷ்.

இதேபோல நாயகன் திரைப்படத்தில், கமல்ஹாசனுடன் இருக்கும் முக்கிய நபரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு அழுத்தமான காட்சியிலும், கமல்ஹாசனுடன் இணைந்து அசத்தியிருப்பார்.

kamal and delhi ganesh

அடுத்ததாக கே. பாலச்சந்தரின் சிந்து பைரவி. 1985ஆம் வெளியான இத்திரைப்படத்தில் குருமூர்த்தி எனும் மிருதங்க வித்வான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், டெல்லி கணேஷ். துணை கதாபாத்திரம் என்றாலும், தனக்கு கிடைக்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனி கவனம் பெற்று விடுவார்.

சிந்து பைரவி படத்தில் டெல்லி கணேஷ்

கமலுடன் நடித்த புன்னகை மன்னன் படத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதில் அவரின் தந்தை கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். கமல்ஹாசனுடன் திரையைப் பகிர்வதே சவாலான விஷயம் எனும்போது, ஏற்ற கதாபாத்திரத்துக்கு நடிப்பின் மூலம் நியாயம் செய்திருப்பார்.

சீரியஸ் கதாபாத்திரங்களைப் போலவே, காமெடி கதாபாத்திரத்திலும் அசத்தியிருக்கிறார், டெல்லி கணேஷ். அதில் மைக்கேல் மதன காமராஜன் முக்கியமான திரைப்படம். இதிலும் கமல்ஹாசனுக்கு தந்தை கதாபாத்திரம்தான், ஆஹா படத்தில் நடித்த சமையல்காரர் கதாபாத்திரம்தான். ஆனால், இந்த காமெடி கதைக்கு ஏற்ற உடல்மொழி, அவரின் நடிப்பில் வெளிப்பட்டிருக்கும்.

இதேபோல், அவ்வை சண்முகி படத்தையும் குறிப்பிடலாம். இதில், ஜெமினி கணேசனின் வீட்டில் பணியாற்றும் கணக்காளர் கதாபாத்திரம்தான் டெல்லி கணேஷுடையது. அந்த கதையமைப்புக்குள் கிடைத்த காட்சிகளில் எல்லாம் சிறப்பு செய்திருப்பார்.

இன்னும் எத்தனை எத்தனையோ படங்களையும் கதாபாத்திரங்களையும் உதாரணமாகச் சொல்லலாம். உடலால் உலகைவிட்டு மறைந்தாலும், சினிமா மூலம் நினைவுகளாக மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார், டெல்லி கணேஷ் எனும் திரைக் கலைஞன்.