பிச்சைக்காரன் 2 பிச்சைக்காரன் 2
கோலிவுட் செய்திகள்

‘பிச்சைக்காரன் படத்திற்கும், பண மதிப்பிழப்பிற்கும் சம்பந்தம் இருக்குமோ?...’ - நெட்டிசன்கள் கருத்து!

சங்கீதா

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தின் முதல் பாகம் வெளியான வருடத்தில், இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் 2-ம் பாகம் நேற்று வெளியாகியுள்ள நேரத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நெட்டிசன்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

2000rs

பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்தியாவில் கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டார். இந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.

இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்கு முன்னர்தான், சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்திருந்த ‘பிச்சைக்காரன்’ முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் ஏற்றிருந்த ஒருவர், நாட்டில் வறுமையை ஒழிக்க, ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்த வசனங்களை, நெட்டிசன்கள் ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையின்போது வைரலாக்கினர்.

ஆரம்பக்கட்டத்தில் ரூ.2000 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தாலும், தற்போது அது குறைந்தே காணப்படுகிறது. இதற்கிடையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரூ. 2000 நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கும், பணமதிப்பிழப்பிற்கும் ஏதோ சம்பந்த உள்ளதாகவும், அதனால் தொடர்ந்து அந்தப் படத்தின் சீக்குவலை எடுக்க வேண்டும் என்று மீண்டும் ட்ரெண்ட்டாகி வருகின்றனர்.

ஏனெனில், இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரில் கூட ரூ.2000 நோட்டுகள் மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வசனம் இடம்பெற்றிருந்ததால் நெட்டிசன்கள் இவ்வாறு செய்து வருகின்றனர். திட்டமிட்டு செய்யாமல், ஏதேச்சையாக நடந்திருந்தாலும், இந்த விஷயம் சுவாரஸ்யத்திற்கு வித்திட்டுள்ளது என்றே கூறலாம்.