இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' படத்தை தயாரித்த அர்தேஷிர் இரானி, இந்தியாவின் மற்ற மாநில மொழிகளிலும் பேசும் படங்களை தயாரிக்க விரும்பினார். உடனே தெலுங்கு, தமிழ் பேசும் கலைஞர்களை அன்றைய பம்பாய்க்கு அழைத்தார். அவர்களைப் பேசவைத்து, பாடவைத்து, ஆடவைத்து ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் செய்தார். அப்படி தமிழின் சார்பில் முதன்முதலில் பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு டி.பி.ராஜலக்ஷ்மிக்கு கிட்டியது. ராஜலக்ஷ்மியை முதலில் பாடச் சொன்னார்கள். அவர் பாடினார். பின்னர் பாடிக்கொண்டே ஆடச் சொன்னார்கள். அவர் செய்தார். அடுத்ததாக குறவர் நடனம் ஆடச்சொன்னபோது, அவர் பாடிய பாடல் என்ன தெரியுமா?
"ராட்டினமாம்... காந்தி கை பாணமாம்.." என்கிற பாடல். மேடை நாடகங்களில் ராஜலக்ஷ்மி நடிக்கும்போது அவர் பாடிய பாடல் இது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பேரச்சம் தந்த காந்தியின் பெரும் ஆயுதம் கைராட்டினம். அன்றைய ஆட்சியாளர்களான பிரிட்டிஷாருக்கு எதிராக போராட்டங்களில் மேடை நாடகங்கள் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டிருந்தன. அதன் அடுத்த வடிவமான பேசும் படங்கள் தொடங்கியபோது, அந்தப் போராட்டத்தை அபப்டியே வெள்ளித்திரைக்குக் கடத்தினார்கள்.
தேசபக்தியைத் தாண்டி இந்தியாவில் காந்தியின் மீது இருந்த அன்பின் காரணமாக காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் கொள்கைகளை இக்கலைஞர்கள் மேடைதோறும் பாடலாகவும், நாடகமாகவும் வெளிப்படுத்தினர். இந்திய விடுதலைப் போராட்டமும், காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும் ஒருசேர நிகழ்ந்த காலகட்டம் அது. அன்று தொடங்கியது வெள்ளித்திரைக்கும், இந்திய அரசியலுக்குமான தொடர்பு. ஆயினும் அதை இன்னும் பல படிகள் முன்னெடுத்துக் கொண்டுசென்றது தமிழ் மண்.
ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்ற எம்.ஜி. நடராஜ பிள்ளை கள்ளுக்கடை மறியலில் கைது செய்யப்பட, எஸ்.வி.சுப்பையா பாகவதர், தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தில் பங்குகொண்ட சுந்தரமூர்த்தி ஓதுவார், தேசிய பிரசாரகர் எம்.வி.மணி, உப்பு சத்தியாகிரகத்தின்போது தேச ஒற்றுமை பாடல்களை பாடி சிறைசென்ற எஸ்.தேவுடு போன்றோர் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினர். இவர்களின் வருகை தானாகவே அரசியலையும் திரைப்படங்களுக்குள் இழுத்துவந்தது.
கே.பி.சுந்தராம்பாள் பற்றி ஏற்கெனவே நாம் அறிந்திருக்கலாம். தன் கணீர் குரலால் செல்லும் இடமெல்லாம் தேசபக்தி பாடல்கள் பாடி மக்களிடையே சுதந்திர வேட்கை கூடுவதற்குக் காரணமான ஒருவர். 1934-ஆம் ஆண்டு நடைபெற்ற முனிசிபல் தேர்தலையொட்டி, அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு துண்டுப்படம் தயாரித்து வெளியிட்டார். அதில் கே.பி. சுந்தராம்பாள் பாடிய பாடல் ஒன்று இசைத்தட்டாக வெளியிடப்பட்டது.
"ஆழ்ந்த யோசனைகள் செய்தார் மகாத்மா காந்தி
ஆத்ம சக்தியை காட்டினார் அந்நியர்கட்கு
ஆத்ம சக்தியை காட்டினார்" - என்று தொடங்கும் அப்பாடலின் இடையே வரும் கீழ்க்கண்ட வரிகளை கவனியுங்கள்.
"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும்
கூட்டுத்தொகுதி வேண்டாமென
கரைபுரண்டு அழுதாரே அம்பேத்கார் - தரும சீலராம்
காந்திஜியைத் தரிசித்ததுமே
கூட்டுத்தொகுதிக்கே கையொப்பமிட்டார்.
தென்னாட்டு காந்தியென
தியாகங்கள் பல செய்த திருராஜ கோபாலாச்சாரியார் நம்
காந்தி உண்ணாவிரதமதை ஓதியே மக்கள்
ஓட்டுப்போட வேண்டுமென்றார்"
மேற்கண்ட பாடல் சொல்லும் சேதிகளை பாருங்கள். அன்றைய அரசியல் சூழலை, காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்தும், இந்திய தேர்தல் நடைமுறை பக்கமிருந்தும் அணுகும்வண்ணமும், அதை மக்களுக்கு எடுத்துரைக்கும்படியாகவும் இவையெல்லாம் அமைந்திருப்பதை உணரலாம். உண்மையில் இவை யாவும் மக்களுக்கு அரசியல் பற்றிய புரிதலையும், அரசியல் தலைவர்களின் பெருமைகளையும் மக்களுக்கு எளிமையாக உணர்த்துவதற்காக திரைப்படங்களையும், திரைப்படக் கலைஞர்களையும் முன்னிறுத்திய ஒரு விளம்பரமாக இருந்தன. ஆக, சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் இருந்தே அரசியலும் அதற்குள் கலந்து உறவாடி இருந்ததை நாம் கண்டுகொள்ளலாம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்... 1935-ஆம் ஆண்டு 'மேனகா' என்றொரு படம் வெளிவந்தது. இயக்குனர் ராஜா சாண்டோ. அந்தப் படத்தில் கதாநாயகி டி.கே.ருக்மணியின் கையிலிருந்து தோள் வரை கதாநாயகனை முத்தமிடச் செய்து படமாக்கியிருந்தார். இது பெரும் பரபரப்பான விஷயமாக மாறியது. பத்திரிகைகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கியிருந்தன. அந்த சூழ்நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவராகவும், திரைப்படக் கலைஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவருமான சத்தியமூர்த்தியை ஒரு ஆங்கிலப் பத்திரிகை பேட்டி எடுத்தது. அதில் இந்த முத்தப் பிரச்னை பற்றிய கேள்விக்கு சத்தியமூர்த்தி கூறிய பதில் என்ன தெரியுமா?
"சமஸ்க்ருத நாடக இலக்கணம் நாடகங்களில் காதலர்கள் முத்தமிடுவதை தடுத்திருக்கிறது. ஆனால், பொதுவில் காதலர்கள் தங்கள் நெகிழ்ச்சிகளை வெளிப்படுத்தக் கையாளும் முறைகளில் முத்தமிடுவதும் ஒன்றாகும். பொருத்தமான சமயத்தில் சிற்சில சூழ்நிலைகளில் காதலர்கள் முத்தம் கொடுப்பதை நாடகங்களில், திரைப்படங்களில் இயற்கைக்கு ஏற்ப காட்டுவது தவறல்ல என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார். ஆக, அப்போதிருந்தே திரைப்படப் பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்தும் ஆதரவுகள், ஆட்சேபணைகள் இருந்தே வந்துள்ளன. இந்த பந்தம் மேலும் மேலும் பலப்பட்டுக்கொண்டே போனதே தவிர, எங்கும் அதற்கு இறங்குமுகம் இருந்ததேயில்லை.
எந்தளவிற்கு சினிமாவும் அரசியலும் அப்போதிருந்தே ஒட்டிக்கொண்டிருந்தது என்பதற்கு வேடிக்கையான ஓர் உதாரணம் சொல்லலாம். முதன்முதலில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியவர் கே.பி.சுந்தராம்பாள். 1935-ல் வெளிவந்த 'நந்தனார்' திரைப்படத்தில்தான் இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? முதல் தமிழ் பேசும் படத்தில் ஒப்பந்தம் ஆனதும் ஒரு பெண்தான். முதல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியதும் ஒரு பெண்தான். நாமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அந்த 'நந்தனார்' படத்தில் சுந்தராம்பாள் நடிக்க சிபாரிசு செய்தது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி. காங்கிரசின் இன்னொரு பெரிய தலைவரான ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆகாது. எதிர் எதிர் கோஷ்டிகள். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராஜாஜியின் ஆதரவாளர். இதன் காரணமாக சத்தியமூர்த்தி ஆசியோடு வெளிவந்த 'நந்தனார்' படத்திற்கு ஒரு பிரபல பத்திரிகையில் "நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக் கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருந்தன" என்று விமர்சனம் எழுதியிருந்தார். இவ்வளவிற்கும் 'நந்தனார்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.
இவ்வாறாக அரசியல் பகை அப்போதிருந்தே சினிமாவிலும் எதிரொலித்ததை நாம் உணரலாம். திரைப்படங்கள் மீது குறைவான அபிமானமே கொண்டிருந்த ராஜாஜி, காங்கிரஸ் முன்னெடுத்த மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவாக வெளிவந்த 'சதிலீலாவதி' திரைப்படத்தை கண்டு, அதைப் பாராட்டி பத்திரிக்கையிலும் எழுதினார். இப்படி தங்களுக்கு ஆதரவாக படங்கள் வருகையில் அதை மெச்சியும், இல்லாதவற்றை பகடி செய்தும் அரசியல்வாதிகள் இருந்து வந்ததை நாம் புரிந்துகொள்ளலாம்.
அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் ஆதரவு திரைப் பிரமுகர்கள் எடுக்கும் படங்களில் காங்கிரஸுக்காக எந்தளவு பிரசாரம் செய்தார்கள் என்றால், 'நவீன சாரங்கதாரா' என்கிற புராண படத்தில் கொடுங்கோல் மன்னன் நரேந்திரனை எதிர்த்து அஸ்தினாபுரத்து மக்கள் கண்டன ஊர்வலம் போவதுபோல் ஒரு காட்சி உண்டு. அப்படி ஊர்வலம் போகும் மக்களில் பலர் காங்கிரஸ் குல்லாக்களை அணிந்துகொண்டு செல்வதாக படத்தில் காட்டப்பட்டது. இதற்கெல்லாம் பலன் கிடைத்ததா?
ஆமாம். கிடைத்தது. 1937-ல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் நேரடியாக ஈடுபட்டது. அதுவரை ஆட்சியில் இருந்த ஜஸ்டிஸ் கட்சியை மொத்தமாக தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் திரைப்படத்துறைக்கு கிடைத்த முதல் நல்ல விஷயம் என்னவென்றால், கடுமையான தணிக்கை விதிகள் தளர்த்தப்பட்டன. மாநில அரசின் கீழ் அமைந்திருந்த சினிமா தணிக்கைத்துறை திருத்தி அமைக்கப்பட்டது. தணிக்கைத் துறையில் பத்திரிகைத் துறை, பல்கலைக்கழகம், சினிமா துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டார்கள். செக்ஸ், வன்முறைக் காட்சிகளில் கடினப்போக்கும், அரசியல் கருத்துக்களை வெளியிட அனுமதிப்பதும் சென்சார் போர்டின் புதிய கொள்கையாகவேண்டும் என்று பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.
ஒரு புதிய அத்தியாயம் அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் எழுதப்படுவதற்கான காலம் கனிந்தது.
(திரை இன்னும் விரியும்...)
- பால கணேசன்