சினிமா

பிகில் பட சம்பள விவகாரம் : நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய ஐ.டி சோதனை !

பிகில் பட சம்பள விவகாரம் : நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய ஐ.டி சோதனை !

jagadeesh

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக விஜய் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்தாண்டு வெளியான படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்படத்தின் பைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகம் என சுமார் 20 இடங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். விஜய்யின் வங்கிக் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சிறிது நேர விசாரணைக்கு பின்னர், தொடர்ந்து விசாரணை நடத்த விஜயின் காரிலேயே அவரை சென்னையை அடுத்துள்ள பனையூர் இல்லத்திற்கு அழைத்து வந்தனர். சுமார் இரவு 8:45 மணியளவில் பனையூர் இல்லத்தை வந்தடைந்த நிலையில் விடிய விடிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிகில் படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு ஏ.ஜி.எஸ் அளித்த சம்பள விவரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது. நடிகர் விஜயின் வீட்டின் முன் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்புடைய சுமார் 20 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.