சினிமா

"தேதிகளை ஒதுக்கிய பிறகும் நீக்கம்..." - டாப்ஸி பகிர்ந்த கசப்பான சினிமா அனுபவம்

"தேதிகளை ஒதுக்கிய பிறகும் நீக்கம்..." - டாப்ஸி பகிர்ந்த கசப்பான சினிமா அனுபவம்

நிவேதா ஜெகராஜா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை டாப்ஸி தனது சினிமா வாழ்க்கையில் அனுபவித்த சில கசப்பான சம்பவங்களை வேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகை போலவே பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் டாப்ஸி. பிரபல ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடிப்பதுடன், பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்து வருகிறார். என்றாலும், பல படங்களில் ஆரம்ப கட்டத்திலேயே தான் நீக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த நேர்காணலில் டாப்ஸி, "டிராப் விஷயங்கள் எனக்கும் நடந்தது. சில படங்களில் கமிட் ஆகும்போது அதற்காக தேதிகளை ஒதுக்கீடு செய்வேன். ஆனால், திடீரென நான் படத்தில் இருந்து வெளியேற்றப்படுவேன். நீக்கப்பட்ட முடிவை கூட தயாரிப்பாளர்கள் என்னிடம் தெரிவிக்கமாட்டார்கள். ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டிவரும்.

ஒரு படத்துக்காக எனது தேதிகளை ஒதுக்கிய பிறகு கடைசி நிமிடத்தில் அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்கிறேன். பின்னர் தயாரிப்பாளர்கள் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். எந்தப் படம் என்று பெயர் குறிப்பிட விரும்பவில்லை. மன்னிப்பு கேட்டாலும், என்னை மாற்றுவதற்கான உண்மையான காரணங்களை வெளிப்படுத்த அவர்கள் தயங்கினர்.

ஊடகங்களில் இதுதொடர்பாக நான் பேசினால், என்னை நேரில் சந்தித்து அதை பற்றி பேசக்கூடாது என்று வற்புறுத்துவார்கள்" என்றவர், கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'பாட்டி பட்னி அவுர் வோவ்' பட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"அந்தப் படத்தில் நடிக்க நான்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். 2019-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதற்காக தேதிகளை ஒதுக்கீடு செய்தேன். ஆனால் தயாரிப்பாளர்கள் இயக்குனர் முடசர் அஸிஸிடம் வேறொருவரை வைத்து படத்தை எடுக்கச் சொல்ல என்னை நீக்கினர். நான் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அணுகி கேட்டபோது அவர்கள் சரியான காரணம் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் சில தெளிவைப் பெற முயற்சிக்கையில், தயாரிப்பாளர்கள் எனது பேச்சை தள்ளிவைத்துள்ளனர். இது மிகவும் வித்தியாசமானது. இறுதியில் அந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் நடித்தனர்" என்று வேதனை தெரிவித்தார்.

அந்த நேரத்தில், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார் மற்றும் ஜூனோ சோப்ரா ஆகியோர் டாப்ஸி விலக்கப்பட்டது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில், "கதாபாத்திரத்துக்கு பொருத்தமான பல நடிகர்களை அப்போது அணுகினோம். ஆனால் டாப்ஸிக்கு ஒருபோதும் இந்தப் படம் தொடர்பாக எந்தவித உத்திரவாதமும் கொடுக்கவில்லை" என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.