சினிமா

ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!

ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!

webteam

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய இந்தி பாடல்களை, டி-சீரிஸ் இசை நிறுவனம் யுடியூப்பில் இருந்து நீக்கியுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கர வாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பாடகர்களை இந்தி திரைப் படங்களில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் திரைப்பட பிரிவு எச்சரிக்கை விடுத்தது.

இந்தப் பிரிவின் தலைவர் அமய் கோப்கார் கூறும்போது, ’’இந்திய இசை நிறுவனங்களான டி-சீரிஸ், சோனி மியூசிக், வீனஸ், டிப்ஸ் மியூசிக் உட் பட சில நிறுவனங்களிடம் பாகிஸ்தான் பாடகர்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் எங்கள் ஸ்டைலில் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

புஷன்குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் சமீபத்தில் பாகிஸ்தான் பாடகர்கள் ரஹத் ஃபடே அலிகான் மற்றும் அதிப் அஸ்லாம் ஆகியோருடன் இணை ந்து இரண்டு வெவ்வேறு பாடல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.  நவநிர்மாண் சேனாவின் எச்சரிக்கையை அடுத்து, யுடியூப்பில் இருந்து அந்தப் பாடல்களை நீக்கியுள்ளது. இதே போல பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய மேலும் சில பாடல்களையும் இந்நிறுவனம் நீக்கியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதலின் போது, ராஜ் தாக்கரே, இன்னும் 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் கலைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.