சினிமா

"தோனி அண்ணா.. இனி எல்லோரும் என்னிடம் உங்களை தேடுவார்கள்" சுஷாந்த் சொன்ன வார்த்தைகள் !

"தோனி அண்ணா.. இனி எல்லோரும் என்னிடம் உங்களை தேடுவார்கள்" சுஷாந்த் சொன்ன வார்த்தைகள் !

jagadeesh

‘தோனி அண்ணா இனி எல்லோரும் என்னிடம் உங்களை தேடுவார்கள்’ என்று சுஷாந்த் சிங் ராஜ்புத் தெரிவித்ததாக "எம்.எஸ்.தோனி தி அன் டோல்டு ஸ்டோரி" படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்துடனான தனது நினைவுகளை தோனி சுயசரிதை படத்தை தயாரித்த அருண் பாண்டே "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுடன் பகிர்ந்துள்ளார், அதில் "இப்போதுதான் சுஷாந்தின் மரணம் குறித்து அறிந்தேன். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. சுஷாந்தின் சிரிப்பு என் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. நான், சுஷாந்த், தோனி ஆகியோர் படத்தை புரோமோட் செய்வதற்காக நிறைய நேரம் ஒன்றாக பயணித்து இருக்கிறோம். இந்தப் படத்துக்காக ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சுஷாந்த் எங்களுடன் செலவிட்டு இருக்கிறார்" என்றார்.

மேலும் தொடர்ந்த அருண் பாண்டே "தோனியின் மேனரிஸம்களை படத்தில் அப்படியே வெளிப்படுத்தியிருப்பார் சுஷாந்த். தோனி அவரிடம் அச்சு அசலாக என்னைப் போலவே செய்கிறாய் என கேட்டதற்கு. ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தோனி அண்ணா. என்னிடம் உங்களை இனி தேடுவார்கள்’ என பதிலளித்தார் சுஷாந்த். அத்தனை திறமையான இளம் நடிகர் அவர். தோனியின் மேனரிஸம்களை உள்வாங்கி தோனியாகவே மாறியிருந்தார் சுஷாந்த். கிரிக்கெட் விளையாடும் காட்சிகளிலும் அத்தனை நேர்த்திகளை கடைபிடித்து இருப்பார்".

இறுதியாக அருண் பாண்டே " சுஷாந்தால் இத்தனை சிறப்பாக அந்தக் கதாப்பாத்திரத்தை செய்யக் காரணம், தோனியை அவர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டதுதான். சுஷாந்தின் குடும்பத்தினர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இல்லை. தோனியை போலவே அவரும் சின்ன ஊரில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தவர். அதனால்தான் தோனியைப் போலவே அவரால் செய்ய முடிந்தது, சாதித்தும் காட்டினார்" என்றார் நெகிழ்ச்சியாக.