சினிமா

கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி - நடிகர் சூர்யா ட்வீட்

கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி - நடிகர் சூர்யா ட்வீட்

webteam

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பு விமர்சனங்களும் எழுந்தன. இதனிடையே இன்று 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5-வது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் இந்த முடிவு குறித்து நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று ‘அகரம்’ தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்” என்று கூறியுள்ளார்.