சினிமா

“பேச்சுலர் பார்ட்டியில்தான் முதலில் சந்தித்தோம்” - கெளதம் 20 ஆண்டு நிறைவு பற்றி சூர்யா

“பேச்சுலர் பார்ட்டியில்தான் முதலில் சந்தித்தோம்” - கெளதம் 20 ஆண்டு நிறைவு பற்றி சூர்யா

webteam

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனின் 20 ஆண்டு நிறைவு குறித்து நடிகர் சூர்யா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறைக்குள் வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனையொட்டி பலர் அவர் குறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், தனது ஆஸ்தான இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பற்றிய தனது அனுபவங்களை நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார். சூர்யா வழங்கியுள்ள வீடியோ பேட்டி ஒன்றில், “முதன்முதலாக நாம் சந்தித்தது 1998 ஆம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். எழும்பூர் பக்கம் இருக்கின்ற ஒரு ஹோட்டல் மொட்டை மாடியில் பேச்சுலர் பார்ட்டி ஒன்றில் சந்தித்து பேச ஆரம்பித்தோம். அதற்குப் பின் சில சந்திப்புகள். 2000இல் ‘காக்க காக்க’ வந்தது. எல்லோருக்குமே தெரியும், ‘வாரணம் ஆயிரம்’ , ‘காக்க காக்க’ ஆகிய படங்கள் இல்லை என்றால் என் திரை வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்பது? அந்த ஞாபகங்களுக்காக உங்களுக்கு எனது நன்றி. வாழ்க்கை மிகச் சிறப்பான ஞாபகங்களை கொண்டுள்ளது என்பதை முழுமையாக நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “நிறைய இயக்குநர்கள் படத்தில் பாடல் வருகிறது என்றால் திரைக்கதை புத்தகத்தில் ‘இந்த இடத்தில் பாடல் வருகிறது’ என எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் தனது ஸ்கிரிப்ட்டிலேயே பாடலை பதிவு செய்வதற்கு முன்னால் பாடலின் நான்கு ஐந்து வரிகளை கெளதம் எழுதி வைத்திருப்பார். ஒவ்வொரு பாடலின் வரிகளும் இப்படிதான் இருக்கும். இந்த மாதிரிதான் காட்சிகள் இருக்கும் என்று நீங்கள் எழுதியது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. ‘உயிரின் உயிரே’ பாடலை 100 முறை கேட்டிருப்போம். இல்லை 200 முறை கேட்டிருப்போம். அப்போது ஜோ வீட்டிற்கு நான் போகும்போது வெளியில் அந்தப் பாடல் கேட்கும். ஜன்னல் வழியே எட்டி பார்த்தால் சில பசங்க கிட்டார் தூக்கி போவாங்க. நான் கூட அதற்காக கிட்டார் கற்றுக் கொண்டேன்” என பல நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.