சினிமா

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘ஜெய்பீம்’

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘ஜெய்பீம்’

சங்கீதா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அடுத்தமாதம் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் ‘பராசக்தி’, ‘ஜெய்பீம்’ ஆகியப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கத்தால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா (Indian Film Festival of Melbourne - IFFM). இந்த விழாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுவது மட்டுமின்றி, பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படும். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில், சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம், சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகர் பிரிவில் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நேரடியாக மீண்டும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், சூர்யாவின் ‘ஜெய்பீம்’, ‘பெரியநாயகி’, ‘பராசக்தி’, ‘குத்ரியார் செல்லும் வழி’ (The Road to Kuthriyar) ஆகிய தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. டாப்ஸியின் ‘Dobaaraa’ உள்பட பல இந்தி திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.

மேலும், முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ், அபிஷேக் பச்சன், கபீர் கான், வாணி கபூர், சமந்தா, தமன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள நடனப் போட்டிக்கு, போட்டியின் நடுவர்களில் ஒருவராகவும் தமன்னா பங்குபெற உள்ளார்.