ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘’சூரரைப் போற்று’’ திரைப்படம் வெளியாகும் என தெரிவித்திருந்தனர். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பட வெளியீடு சற்று தாமதமாகும் என நடிகர் சூர்யா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் பாதுகாப்பு கருதி அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
’’அன்பான நலம்விரும்பிகள் மற்றும் சகோதர சகோதரிகளே, நான் தினமும் என் மனதிலுள்ளதை வெளிப்படுத்த இதுபோன்ற கடிதங்கள் எழுதுவதில்லை. ஆனால் நான் இந்நிலைக்கு வர என்னுடன் நின்ற உங்களுடன் இந்த காலகட்டத்தில், திறந்த இதயத்துடனும், வெளிப்படையான மனதுடனும் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
’சூரரைப் போற்று’ படப்பிடிப்பில் நாங்கள் சவாலாக நினைத்த விஷயம், இதற்கு முன்பு படப்பிடிப்பு நடைபெறாத புதிய இடங்களில் ஷூட்டிங்கை நடத்துவது, மொழி தெரியாதவர்களுடன் வேலைசெய்வது மற்றும் அவர்களின் திறமையை ஒன்றுசேர்த்து திரைப்படத்தை உருவாக்குவதுதான். இதை சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது.
சூரரைப் போற்று திரைப்படம் விமானப் போக்குவரத்து பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. காரணம், இந்திய விமானம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், நாங்கள் எண்ணற்ற செயல்முறைகளையும் அனுமதிகளையும் சந்திக்கவேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி சான்றிதழ்கள் ஒப்புதல் வாங்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த காத்திருப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
சூரரைப் போற்று படம் உணர்ச்சிகரமானதாகவும், கட்டாயமாக எழுச்சியூட்டக்கூடிய கதையம்சத்தையும் கொண்டது. ஆனால் படம் வெளியாக எதிர்பார்த்ததை விடவும் அதிகநேரம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தை எதிர்பார்த்திருக்கும் நலம் விரும்பிகளை காக்கவைப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இதை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் பல ஆச்சர்யங்களுடன் உங்களை சந்திக்கிறோம். நட்பைப் போற்றும் ஒரு பாடலுடன் இந்த கடிதமும் வெளிவரும்’’ என்று அதில குறிப்பிட்டுள்ளார்.